தேசிய செய்திகள்

2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டம் - இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் + "||" + The plan to send Indian players to space in December 2021 - ISRO chief Shivan informed

2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டம் - இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டம் - இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்
2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டு உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.
பெங்களூரு, 

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), பல்வேறு உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் விண்வெளி ஆய்வில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. இதில் அடுத்தகட்டமாக விண்வெளிக்கு இந்தியர்களை அனுப்பிவைப்பதற்கான திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

‘ககன்யான்’ திட்டம் என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தை 2021-ம் ஆண்டு செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான விவரங்களை இஸ்ரோ தலைவர் சிவன் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

2021-ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான தயாரிப்பு பணிகளே இந்த ஆண்டின் முக்கிய பணிகள் ஆகும். இஸ்ரோவுக்கு இது ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாகும். இது இஸ்ரோவுக்கு மிகப்பெரும் விரிவாக்கத்தை கொடுத்து இருக்கிறது. இந்த திட்டம் உறுதியானால் இந்திய விண்வெளி வீரர்கள் 3 பேர் விண்வெளிக்கு சென்று, 7 நாட்கள் தங்கியிருந்து பின்னர் பத்திரமாக பூமிக்கு திரும்புவார்கள்.

இதற்காக விண்வெளி வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். விண்வெளியில் அவர்களுக்கு உகந்த ஓரிடத்தை தேர்வு செய்து, அங்கு அவர்களை அனுப்பி வைத்து பின்னர் பத்திரமாக பூமிக்கு திரும்ப கொண்டு வரப்படுவதுடன், அவர்களது புனர்வாழ்வுக்கும் வழி ஏற்படுத்தப்படும்.

இதற்காக ஆளில்லா ககன்யான் விண்கலம் 2020-ம் ஆண்டு டிசம்பரில் அனுப்பி வைக்கப்படும். பின்னர் 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் மீண்டும் ஒரு ஆளில்லா விண்கலத்தை அனுப்பி வைத்து சோதனை மேற்கொள்ளப்படும். இறுதியாக இந்திய விண்வெளி வீரர்களுடன் 2021-ம் ஆண்டு டிசம்பரில் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்திய விடுதலையின் 75-வது ஆண்டுவிழா கொண்டாடப்படும் நேரத்தில் அல்லது அதற்கு முன்னதாக நமது இளம் வீரர் மற்றும் வீராங்கனைகள், விண்வெளியில் இந்திய கொடியை ஏற்றுவார்கள். இந்த திட்டத்தில் பெண் வீராங்கனைகளும் இணைய வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

பிரதமர் மோடி கூட சகோதர-சகோதரிகள் (ஆண், பெண்) என்றுதான் கூறியிருக்கிறார். அந்தவகையில் பெண்களும் இதில் இடம்பெற்றால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். எனினும் இவை அனைத்தும் பயிற்சி மற்றும் பிற அம்சங்களை சார்ந்தது.

ககன்யான் திட்டம் இந்திய நலன் சார்ந்தது என்றாலும், இதற்கு சில வெளிநாடுகளும் உதவும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இந்த ககன்யான் விண்கலம் ரஷியா அல்லது வேறு நாட்டில் இருந்து விண்ணுக்கு ஏவப்படும். ஆனால் விண்கலம் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் இந்திய தயாரிப்பாகவே இருக்கும். இவ்வாறு சிவன் கூறினார்.

சந்திரயான்-2 விண்கலத்தில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெறுவதாலும், அதில் இன்னும் சில சோதனைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாலும் அதை ஏவுவது சற்று தள்ளி வைக்கப்படுவதாக சிவன் கூறினார். அதன்படி பிப்ரவரி மாதத்துக்கு பதிலாக ஏப்ரல் மத்தியில் சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என சிவன் தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஜி.எஸ்.டி. வசூல்: டிசம்பர் மாதத்தில் ரூ.94,726 கோடியாக குறைந்தது
டிசம்பர் மாதத்தில், ஜி.எஸ்.டி. வசூல் ரூ.94,726 கோடியாக குறைந்தது.