தேசிய செய்திகள்

கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில் ‘எங்கள் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை’ - பிரதமர் மோடி பெருமிதம் + "||" + Over the last 4 years 'There is no corruption scandal over us' - Prime Minister Modi is proud

கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில் ‘எங்கள் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை’ - பிரதமர் மோடி பெருமிதம்

கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில் ‘எங்கள் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை’ - பிரதமர் மோடி பெருமிதம்
பிரதமர் மோடி, கடந்த 4½ ஆண்டுகால ஆட்சியில் தங்கள் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை என பெருமிதத்துடன் கூறினார்.
புதுடெல்லி, 

பா.ஜனதாவின் தேசிய மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, கடந்த 4½ ஆண்டுகால ஆட்சியில் தங்கள் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை என பெருமிதத்துடன் கூறினார்.

மத்தியில் ஆளும் பா.ஜனதாவின் 2 நாள் தேசிய மாநாடு டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்தது. இதன் நிறைவு நிகழ்வில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது தனது அரசின் செயல் பாடுகளை அவர் பெருமிதத்துடன் எடுத்துரைத்ததுடன், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

கட்சியை சேர்ந்த சுமார் 12 ஆயிரம் உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் உரையாற்றிய அவர் கூறியதாவது:-

சர்தார் வல்லபாய் படேல் பிரதமராகி இருந்தால் நாட்டின் வரலாறு வேறு மாதிரி இருந்திருக்கும் என நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். அதைப்போலவே 2004-ம் ஆண்டில் வாஜ்பாய் மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால், இந்தியா பல மைல்கற்களை எட்டியிருக்கும். ஆனால் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி 10 ஆண்டுகளை வீணாக்கி விட்டது.

அந்த ஆட்சியில் இழந்த தன்னம்பிக்கை மீண்டும் ஏற்பட்டு இருப்பதை தேசிய ஜனநாயக கூட்டணியின் கடந்த 4½ ஆண்டுகால ஆட்சி உறுதி செய்திருக்கிறது. தற்போது ஒரு புதிய நம்பிக்கை பிறந்திருக்கிறது. ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தேசிய கட்டமைப்பில் பங்காற்ற விரும்புகிறார்கள். தங்கள் வரிப்பணம் உண்மையாகவும், வீரியமாகவும் பயன்படுத்தப்படுகிறது என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது.

எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டும் பாதிக்காத வகையில் ஒரு அரசால் இயங்க முடியும் என்பதை தேசிய ஜனநாயக கூட்டணி நிரூபித்திருக்கிறது. எங்கள் மீது தற்போது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை.

அதேநேரம் ஊழல் விவ காரத்தில் தவறிழைத்தவர் களை நாங்கள் விடப்போவதில்லை. ஊழலுக்கு எதிராக நாங்கள் மேற்கொண்ட நட வடிக்கைகள் அனைத்தும், பெரிய பனிப்பாறையின் ஒரு முனை போன்றதுதான். இந்தியாவிலும் சரி, வெளிநாட்டிலும் சரி ஊழல் தொடர்பாக தவறிழைத்த ஒருவரையும் இந்த காவலாளி விடமாட்டேன்.

ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இங்கிலாந்து இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல், ரபேல் போர் விமான பேரத்திலும் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த குண்டு விரைவில் வெடிக்கும்.

விவசாயிகளின் நிலைமை மேம்படுவதற்காக மத்திய அரசு கடுமையாக உழைத்து வருகிறது. பொது பிரிவினருக்கு வழங்கப்பட்ட 10 சதவீத இட ஒதுக்கீடு, இளைய சமூகத்துக்கு மத்திய அரசு வழங்கிய பரிசாகும். இதன் மூலம் அனைவருக்குமான நீதி உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

நான் குஜராத் முதல்-மந்திரியாக இருந்தபோது, காங்கிரசின் கைப்பாவையாக செயல்பட்டு வந்த சி.பி.ஐ. உள்ளிட்ட விசாரணை நிறுவனங்கள் பலமுறை எனக்கு தொல்லை கொடுக்க முயன்றன. எனினும் அந்த அமைப்புகளை குஜராத்தில் செயல்படுவதற்கு நான் தடை விதிக்கவில்லை.

ஆனால் தற்போது எதிர்க்கட்சிகள் ஆளும் ஆந்திரா, மேற்கு வங்காளம் மற்றும் சத்தீஸ்கார் மாநில அரசுகள், தங்கள் மாநிலங்களில் சி.பி.ஐ. நுழைய தடை விதித்து இருக்கின்றன. அவர்களுக்கு என்ன பயம் என்று தெரியவில்லை. அந்த தலைவர்கள் என்ன தவறு செய்திருக்கிறார்கள்? இந்த மாநிலங்கள் ஏன் சி.பி.ஐ. அமைப்பை எதிர்க்கின்றன? இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.