மாநில செய்திகள்

முதல்-அமைச்சர் மீதான புகார் மனுவை ஜனாதிபதிக்கும், மத்திய அரசுக்கும் உடனே அனுப்ப வேண்டும் கவர்னருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் + "||" + First Minister complaint letter MK Stalin assertion to the governor

முதல்-அமைச்சர் மீதான புகார் மனுவை ஜனாதிபதிக்கும், மத்திய அரசுக்கும் உடனே அனுப்ப வேண்டும் கவர்னருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

முதல்-அமைச்சர் மீதான புகார் மனுவை ஜனாதிபதிக்கும், மத்திய அரசுக்கும் உடனே அனுப்ப வேண்டும் கவர்னருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
முதல்-அமைச்சர் மீதான புகார் மனுவை ஜனாதிபதிக்கும், மத்திய அரசுக்கும் உடனே கவர்னர் பன்வாரிலால் புரோகித் அனுப்ப வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,

தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோடநாடு கொலைகள் - கொள்ளை விவகாரத்தில் எந்த வழியிலும் தப்பிக்க முடியாதபடி வசமாக மாட்டிக் கொண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு நாள் விடியும் போதும் விடிவேதும் கண்ணுக்குத் தெரியவில்லையே என்று விழிபிதுங்கி மனம் வெதும்பிக்கொண்டு இருக்கிறார்.


ஒரு நாட்டின் முதல்-அமைச்சர் மீதே கொலை, கொள்ளை புகார்கள் சொல்லப்படுகிறது என்றால், நியாயமாகப் பார்த்தால் பதவி விலகி சட்டப்படி நியாயமான நேர்மையான விசாரணையை எடப்பாடி பழனிசாமி துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டும். அவரிடம் எல்லாம் நியாய தர்மங்களை எதிர்பார்க்க முடியாது; நேர்மைக்குத் தலைவணங்கும் குணமும் கிடையாது. ஆனால் உரிய பதிலைச் சொல்லாமல், திசைதிருப்பும் தந்திரத்தைச் செய்து நழுவிக்கொண்டு நாட்களைக் கடத்தி வருகிறார் முதல்-அமைச்சர்.

“கோடநாட்டில் உள்ள ஆவணங்களைக் கைப்பற்றவே கொள்ளை நாடகம் நடந்துள்ளது. ஆவணங்கள் எடப்பாடி பழனிசாமியின் கைக்கு வந்ததும் தொடர்புடையவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்” என்று சொல்லியிருக்கிறார் பத்திரிகையாளர் மேத்யூ. இதற்கு முதல்-அமைச்சர் பதில் சொல்லாமல் கழுவிய மீன்களில் நழுவிய மீனாக இருக்கிறார்.

ஷயான், மனோஜ் ஆகிய இருவரின் குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதில் சொல்லாத முதல்-அமைச்சர், இவர்கள் இருவருக்கும் ஜாமீன் வாங்கிக் கொடுத்த வழக்கறிஞர்கள் குறித்து வேண்டும்என்றே அவதூறு கிளப்பி வருகிறார். அந்த வழக்கறிஞர்கள் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் என்று ஏதோ பெரிய கண்டுபிடிப்பைச் செய்தவர் போலக் காட்டி வருகிறார்.

குற்றம் சாட்டப்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு வாதாடுவது வழக்கறிஞர்களின் தொழில். அதற்காக அந்தக் குற்றவாளிக்கும், வழக்கறிஞருக்கும் தொடர்பு என்று சொல்ல முடியுமா?. அதுவும் இந்த நாட்டின் முதல்-அமைச்சர் சம்பந்தப்பட்ட ஒரு கிரிமினல் வழக்கு அது. ஷயானுக்கோ, மனோஜ் என்பவருக்கோ கனகராஜூக்கு ஏற்பட்ட நிலைமை ஏற்பட்டு விடக்கூடாது அல்லவா? அவர்களைப் பாதுகாப்பது என்பது சட்டப்படியான நடவடிக்கை தான். அதனை எந்த வழக்கறிஞரோ, ஏன் தி.மு.க. வழக்கறிஞரே செய்திருந்தாலும் தவறு அல்ல. அவர்கள் நீதிமன்றத்தில் தான் உதவி செய்கிறார்களே தவிர, வேறு உதவிகள் செய்யவில்லை என்பதை முதல்-அமைச்சர் உணர வேண்டும்.

முதல்-அமைச்சர் மீதான குற்றச்சாட்டுகளை எல்லாம் வரிசைப்படுத்தித் தொகுத்து கவர்னரிடம் மனுவாகக் கொடுத்துள்ளோம். ஜனாதிபதிக்கோ, மத்திய அரசுக்கோ அவர் அனுப்பினாரா, விசாரித்தாரா? என்று தெரியவில்லை. இதுவரை அனுப்பாவிட்டால் இனியாவது அவர் அனுப்ப வேண்டும் என்று சட்டம் அறிந்தவர்கள் எதிர்பார்க்கிறார்கள், நாங்களும் எதிர்பார்க்கிறோம்.

எடப்பாடி பழனிசாமியின் 2 நாள் பேச்சுகள் குற்றம் நடந்திருப்பதையும் அவர் நேரடியாகவே இதில் சம்பந்தப்பட்டு இருப்பதையுமே நிரூபிக்கின்றன. இன்னமும் ஒரு மணிநேரம் கூட முதல்-அமைச்சர் பதவியில் நீடிக்க அருகதையற்றவராக அவர் ஆகிவிட்டார். இப்படிப்பட்ட ஒருவருக்கு முதல்-அமைச்சர் பதவி ஒரு கேடா என்று தமிழக மக்கள் கேட்பது, அவர் செவிகளைத் செந்தேளாகக் கொட்டவில்லையா? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.