மாநில செய்திகள்

‘இளையராஜாவின் இசை வாழ்ந்துகொண்டே இருக்கும்’பாராட்டு விழாவில் கவர்னர் புகழாரம் + "||" + Ilayaraja's music will continue to live Governor Praise

‘இளையராஜாவின் இசை வாழ்ந்துகொண்டே இருக்கும்’பாராட்டு விழாவில் கவர்னர் புகழாரம்

‘இளையராஜாவின் இசை வாழ்ந்துகொண்டே இருக்கும்’பாராட்டு விழாவில் கவர்னர் புகழாரம்
இளையராஜாவின் இசை எப்போதும் வாழ்ந்துகொண்டே இருக்கும் என்று சென்னையில் நடந்த விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் புகழாரம் சூட்டினார்.
சென்னை,

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்து சாதனை புரிந்த இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று பாராட்டு விழா நடந்தது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவினை தொடங்கிவைத்தார்.

இளையராஜாவுக்கு பொன்னாடை போர்த்தி பூங்கொத்தும் அவர் வழங்கினார். இளையராஜாவின் சாதனைகள் பற்றிய புத்தகத்தையும் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டார்.

வரலாறு

பின்னர் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:-

அன்னக்கிளி படத்தில் இசை அமைத்ததன் மூலம் தமிழ் திரை உலகில் அடியெடுத்து வைத்தவர் இளையராஜா. தேனி மாவட்டத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். 14 வயதில் தன்னுடைய அண்ணன் பாவலர் வரதராஜன் தலைமையிலான இசை குழுவில் பயணித்தார். அவர் படைத்தது எல்லாம் வரலாறு தான்.

இளையராஜாவின் செந்தமிழ் பாடல்கள், திரைப்பட உலகில் புது வசந்தத்தை ஏற்படுத்தியது. நாட்டுப்புற பாடல்களில் இளையராஜா மகுடமாக திகழ்ந்தார். நாட்டுப்புற இசையோடு, பாரம்பரிய இசையை திறம்பட இணைத்ததன் மூலம் தமிழகத்தில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தார். தமிழர்களின் மனதில் இசையால் ஆட்சி புரிந்தார். கடந்த 35 ஆண்டுகளாக அவர் படைத்த திரைப்பட இசை பொக்கிஷ இல்லமாக விளங்குகிறது. இது எப்போதும் வாழ்ந்துகொண்டே இருக்கும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில், 7 ஆயிரத்துக்கும் மேல் பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார்.

நீங்காத இடம்

உலக அளவில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். அனைத்து காலக் கட்டத்திலும் தமிழகத்தை சேர்ந்த சிறந்த இசை அமைப்பாளராக விளங்கிய இளையராஜாவை கவுரவிப்பது திருப்தி அளிக்கிறது. இசைக்கு அவர் அளித்த நீண்டகால பங்களிப்பு, இந்தியாவில் மட்டும் இன்றி உலக அளவில் பல லட்சக்கணக்கான மக்களின் இதயத்தில் நீங்காத இடத்தை பிடித்து கொடுத்திருக்கிறது. இதனால் மத்திய-மாநில அரசுகள் அங்கீகாரத்தை இளையராஜாவுக்கு கொடுத்துள்ளனர். இருந்தபோதிலும் அவர் எளிமையாக இருந்து, ஆரம்ப காலத்தில் இருந்ததுபோன்றே இசை மீது தீவிர ஆர்வம் செலுத்தி வருகிறார்.

இதனால் தான் அவர் இசைஞானி என்ற இடத்துக்கு முன்னேறினார். எங்களைப் போன்ற லட்சக்கணக்கானோர் அவருடைய இசையை கேட்க காத்திருக்கிறோம். அவருடைய சாதனைகள் இன்னும் பல ஆண்டுகள் தொடரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

பெருமை

விழாவில் தயாரிப்பாளர் சங்க தலைவர் நடிகர் விஷால், வரவேற்று பேசியதாவது:-

எல்லா நாடுகளிலும் ஆட்சி செய்வதற்கு ஒரு ராஜா இருப்பார்கள். ஆனால் பாட்டு என்றால் அதற்கு ஒரே ராஜா இளையராஜாதான். காஷ்மீர் வரை கார் ஓட்டவேண்டும் என்றால் பெட்ரோல் இருக்கிறதா? இல்லையா? என்று பார்ப்பதை விட, இளையராஜா பாடல்கள் இருக்கிறதா? என்று தான் டிரைவர்கள் பார்ப்பார்கள். அவருக்கு பாராட்டு விழா நடத்துவது எங்களுக்கு பெருமை மட்டுமல்ல. கடமையும் கூட.

அவரைபோல் இன்னொருவர் பிறக்க முடியாது. இப்படியொரு சாதனைகளும் நிகழ்த்த முடியாது. எங்கள் துறையை சேர்ந்த இளையராஜாவுக்கு நாங்கள் விழா நடத்துவது தவறு இல்லை. சிலர் இந்த விழாவை நடத்தக்கூடாது என்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு ‘என்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா’ என்று இளையராஜா அன்றைக்கு எழுதிய பாடல் வரிகள் மூலம் பதில் சொல்லியிருக்கிறார்.

இவ்வாறு விஷால் பேசினார்.

தங்க வயலின்

விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பேசுகையில், இளையராஜா எனக்கு தலைமை ஆசிரியர் மாதிரி. அவரிடம் நான் ஒழுக்கம் கற்றுக்கொண்டேன். தனது வாழ்க்கையை தவம் மாதிரி அமைத்துக்கொண்டார். எப்படி வாழ வேண்டும் என்பதை அவரிடம்தான் கற்றேன். மேதைகள் மற்றவர்களை அவ்வளவு சீக்கிரம் பாராட்ட மாட்டார்கள். ஆனால் இளையராஜாவிடம் நான் பாராட்டையும், ஆசிர்வாதத்தையும் வாங்கி இருக்கிறேன். எனது இசைக்கு அடித்தளம் இளையராஜாதான் என்றார்.

விழாவில் இளையராஜா பேசும்போது, “ஏ.ஆர்.ரகுமான் அவரது அப்பாவிடம் இருந்த காலத்தை விட என்னுடன் அதிக காலம் இருந்தார். என்னிடம் 500 படங்கள் பணியாற்றி இருக்கிறார்” என்றார்.

விழாவில், தயாரிப்பாளர் சங்க துணைத்தலைவர் எஸ்.எஸ்.துரைராஜ், செயலாளர் கதிரேசன், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நடிகர் சங்கம் சார்பில் இளையராஜாவுக்கு தங்க வயலின் பரிசாக வழங்கப்பட்டது.