தேசிய செய்திகள்

டெல்லி சொகுசு ஓட்டலில் பயங்கர தீ விபத்து: 17 பேர் உடல் கருகி பலி - தமிழகத்தை சேர்ந்த 2 பேரும் இறந்த பரிதாபம் + "||" + New Delhi A fiery fire in a luxury hotel: 17 dead - 2 people from Tamilnadu are dead

டெல்லி சொகுசு ஓட்டலில் பயங்கர தீ விபத்து: 17 பேர் உடல் கருகி பலி - தமிழகத்தை சேர்ந்த 2 பேரும் இறந்த பரிதாபம்

டெல்லி சொகுசு ஓட்டலில் பயங்கர தீ விபத்து: 17 பேர் உடல் கருகி பலி - தமிழகத்தை சேர்ந்த 2 பேரும் இறந்த பரிதாபம்
டெல்லி சொகுசு ஓட்டலில் நேரிட்ட பயங்கர தீவிபத்தில் 17 பேர் உடல் கருகி பலியாகினர். அவர்களில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள கரோல்பாக் பகுதி, சுற்றுலாப்பயணிகள் மத்தியில் பிரபலமானது.

அங்கு நிறைய ஓட்டல்கள், சந்தைகள் உள்ளன. அந்த ஓட்டல்களில் ஒன்று, குருத்வாரா சாலையில் அமைந்துள்ள அர்பித் பேலஸ் ஓட்டல். இந்த ஓட்டல் 4 மாடிகளைக் கொண்ட சொகுசு ஓட்டல் ஆகும். இங்கு 45 அறைகள் உள்ளன. அவற்றில் தங்கி இருந்தவர்கள் நேற்று அதிகாலையில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர்.


அப்போது சுமார் 4½ மணிக்கு அந்த ஓட்டலின் உச்சியில் அமைந்திருந்த (‘ரூப் டாப்’) உணவு விடுதியில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென பரவத்தொடங்கியது. தூங்கிக்கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு எழுந்தனர்.

இந்த தீ விபத்து குறித்த தகவல் அறிந்ததும் 24 தீயணைப்பு வண்டிகளுடன் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரம் போராடி அவர் கள் தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் ஒரு குழந்தை உள்பட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 35 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர் கள் உடனடியாக ராம்மனோகர் லோகியா மருத்துவமனை உள்ளிட்ட 3 மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்சுகளில் அனுப்பிவைக்கப்பட்டனர்.

தீ விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பரவின. அவற்றில் ஒன்றில், ஓட்டலின் மேல்தளங்களில் தீ கொழுந்து விட்டு எரிந்ததையும், ஓட்டல் உச்சியில் இருந்து 2 பேர் குதித்ததையும் காண முடிந்ததாக பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் தீயில் கருகியும், மூச்சு திணறியும் இறந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும், அவர்களில் 2 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். அவர்கள், திருப்பூரில் தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அரவிந்த் சுகுமாரன் மற்றும் நந்தகுமார் ஆவர். இவர்களது உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்காக அந்த நிறுவன உயர் அதிகாரிகள் டெல்லி விரைந்தனர்.

பலியானவர்களில் 3 பேர் கேரளாவையும், ஒருவர் குஜராத்தையும், 2 பேர் மியான்மர் நாட்டையும் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

கேரளாவை சேர்ந்த 3 பேர் பலியானது பற்றி உருக்கமான தகவல்கள் கிடைத்துள்ளன.

அவர்கள் எர்ணாகுளம் சோமசேகர் என்பவரின் குடும்பத்தினர் ஆவார்கள். அவர்களையும் சேர்த்து மொத்தம் 13 பேர் காசியாபாத்தில் ஒரு திருமணத்தில் கலந்துகொள்ள சென்றிருந்தனர். நேற்று அவர்கள் ஹரித்துவாருக்கு செல்ல இருந்தனர். தொடர்ந்து அமிர்தசரஸ் சென்று விட்டு 15-ந் தேதி கேரளா திரும்ப இருந்தனர்.

இந்த நிலையில்தான் ஓட்டலில் தங்கி இருந்தபோது தீ விபத்தில் சிக்கிக்கொண்டனர். பலியானவர்கள் சோமசேகரின் 53 வயதான சகோதரி, 84 வயது தாயார், 59 வயது சகோதரர் ஆவார்கள்.

இந்த தீ விபத்து தொடர்பாக தீயணைப்பு படை அதிகாரி ஒருவர் கூறும்போது, “தீப்பிடித்து எரிந்தபோது, ஓட்டலில் வைக்கப்பட்டிருந்த தீயணைப்பு சாதனங்களில் சில பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் ஓட்டலில் தங்கி இருந்தவர்கள் அங்கிருந்து தப்பிப்பதற்காக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது” என குறிப்பிட்டார். அந்த தீ விபத்துக்கு மின்கசிவே காரணமாக இருக்கக்கூடும் என முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

அவசரமாக வெளியேறுவதற்காக அமைக்கப்பட்டிருந்த வழி மிகவும் குறுகியதாக இருந்ததுடன், அது பூட்டப்பட்டிருந்ததாகவும் மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கே.ஜே.அல்போன்ஸ் கூறினார்.

டெல்லி உள்துறை மந்திரி சத்தியேந்திர ஜெயின் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் பேசுகையில், “இந்த தீ விபத்தில் மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். 17 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பலர் மூச்சு திணறி பலியானவர்கள். ஓட்டல் நிர்வாகத்தின் தரப்பில் குளறுபடிகள் நடந்திருக்கலாம். குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.

5 அல்லது அதற்கு மேற்பட்ட தளங்களை கொண்ட ஓட்டல்களை ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு தீயணைப்பு படையினருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தீ விபத்து நடந்த ஓட்டலின் உச்சியில் அமைக்கப்பட்டிருந்த உணவு விடுதி உரிய அனுமதியின்றி நடத்தப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, தீ விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “கரோல்பாக்கில் நடந்த தீ விபத்தில் உயிரிழப்புகள் நேர்ந்துள்ளன என்பதை அறிந்து மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன்” என கூறி உள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக டெல்லி அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் வழங்க முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார்.

விபத்தில் பலியான தமிழர்களின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை டெல்லி தமிழ்நாடு இல்ல அதிகாரிகள் செய்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கொடைக்கானல் அருகே வனப்பகுதி, பட்டா நிலங்களில் பயங்கர தீ - அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறல்
கொடைக்கானல் அருகே வனப்பகுதி, பட்டா நிலங்களில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
2. சென்னை போரூரில் பயங்கர தீ விபத்து 184 கார்கள் எரிந்து நாசம் கரும்புகை சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிப்பு
சென்னை போரூரில் காய்ந்த புற்களில் பிடித்த தீ அருகில் நிறுத்தி இருந்த தனியார் கால்டாக்சி நிறுவன கார்களுக்கும் பரவியது. இதில் 184 கார்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. அந்த பகுதியில் கரும்புகை சூழ்ந்ததால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.