தேசிய செய்திகள்

சேமிப்பு திட்டங்கள் இருந்தால் ரூ.9½ லட்சம்வரை வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டி இருக்காது - மத்திய நிதி மந்திரி தகவல் + "||" + There will not be a tax on income up to Rs.9.5 lakh if savings schemes - Central Finance Minister Information

சேமிப்பு திட்டங்கள் இருந்தால் ரூ.9½ லட்சம்வரை வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டி இருக்காது - மத்திய நிதி மந்திரி தகவல்

சேமிப்பு திட்டங்கள் இருந்தால் ரூ.9½ லட்சம்வரை வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டி இருக்காது - மத்திய நிதி மந்திரி தகவல்
சேமிப்பு திட்டங்களை பயன்படுத்தி, ரூ.9½ லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரி செலுத்தாமல் தப்பலாம் என்று மத்திய நிதி மந்திரி கூறினார்.
புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் நிதி மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. நிதி மசோதா மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இடைக்கால பட்ஜெட்டில் சலுகைகளை அறிவித்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.


அதற்கு பதில் அளித்து மத்திய மந்திரி பியூஸ் கோயல் பேசியதாவது:-

இடைக்கால பட்ஜெட்டில் நான் எந்த வரி திட்டத்தையும் அறிவிக்கவில்லை. அவையெல்லாம், நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து ஜூலை மாதம் தாக்கல் செய்யும் முழுமையான பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்.

ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் பயன் பெறும் நோக்கத்தில்தான் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. முந்தைய காங்கிரஸ் அரசைப்போல், பணக்காரர்கள் பயன்படுத்தும் சொகுசு கார்களுக்கு நாங்கள் இடைக்கால பட்ஜெட்டில் வரியை குறைக்கவில்லை.

ரூ.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரி தள்ளுபடி ரூ.2,500-ல் இருந்து ரூ.12,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நிலையான கழிவுதொகை, ரூ.40 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. வட்டி வருவாய்க்கான டி.டி.எஸ். பிடித்த வரம்பு, ரூ.40 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வீடு வாங்குவோருக்கு வட்டி தள்ளுபடி, மூலதன ஆதாய வரி விலக்கு ஆகியவையும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதிகாரிகள் கணக்கு போட்டு பார்த்ததில், ரூ.9½ லட்சம்வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள், சேமிப்பு திட்டங்களை பயன்படுத்தி, வருமான வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

இதன்மூலம், சேமிப்பு ஊக்குவிக்கப்படுவதுடன், பொருளாதாரம் உயரும். அரசின் கொள்கைகளால், வீடுகளின் விலை கட்டுப்பாட்டில் உள்ளது.

மத்திய அரசின் நடவடிக்கைகளால், வரி செலுத்துவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. வரி வருவாய் இரட்டிப்பு ஆகியுள்ளது. அப்பணம் சமூக நல திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு பியூஸ் கோயல் பேசினார்.