பிரியங்கா, உத்தரபிரதேச காங்கிரஸ் நிர்வாகிகளுடன் விடிய, விடிய ஆலோசனை நடத்தினார்.
லக்னோ,
காங்கிரஸ் பொதுச்செயலாளராகவும், உத்தரபிரதேச கிழக்கு பிராந்திய பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்ட பிரியங்கா, சமீபத்தில் கட்சி பொறுப்புகளை ஏற்றார். இதைத்தொடர்ந்து தனது பொறுப்பின் கீழ் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.
இதில் முதல்நாளான நேற்று முன்தினம் லக்னோ, உன்னாவ், கவுஷாம்பி உள்ளிட்ட தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்தார். அப்போது அவரவர் தொகுதிகளில் கட்சியின் வெற்றி வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கேட்டறிந்த அவர், அவற்றை குறித்துக்கொண்டார். பின்னர் நிர்வாகிகள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் எனவும், தங்கள் தொகுதிகளில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பு நேற்று முன்தினம் இரவையும் கடந்து நேற்று அதிகாலை வரை நீண்டது. இவ்வாறு விடிய, விடிய சந்திப்பை நடத்தினாலும், சிறிது நேரத்தில் மீண்டும் தயாராகி நேற்றைய சந்திப்புகளில் பிரியங்கா பங்கேற்றார். முன்னதாக நேற்று காலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.