தேசிய செய்திகள்

பாகிஸ்தானுக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் : பழிதீர்த்தது இந்தியா - 350 பயங்கரவாதிகள் பலி + "||" + Attack on Pakistan: Revenge of India - 350 Terrorist Kills

பாகிஸ்தானுக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் : பழிதீர்த்தது இந்தியா - 350 பயங்கரவாதிகள் பலி

பாகிஸ்தானுக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் : பழிதீர்த்தது இந்தியா - 350 பயங்கரவாதிகள் பலி
இந்திய விமானப்படை விமானங்கள் நேற்று அதிகாலை பாகிஸ்தானுக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தின. இதில் 350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

புதுடெல்லி, 

காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த 14-ந் தேதி நடத்திய காட்டுமிராண்டித்தனமான கார்குண்டு தாக்குதல், இந்தியாவை உலுக்கியது.

இந்த தாக்குதலில், விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பிக் கொண்டிருந்த தமிழகத்தின் சுப்பிரமணியன், சிவசந்திரன் உள்பட மொத்தம் 40 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

அந்த தாக்குதல் நடந்த சிறிது நேரத்தில், “புல்வாமா தாக்குதலை நடத்தியது நாங்கள்தான்” என்று பாகிஸ்தானை சேர்ந்த மசூத் அசாரின் தலைமையிலான ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. 

இதற்கிடையே பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைமை, தனது இயக்க பயங்கரவாதிகளுடன் கடந்த 16-ந் தேதி மற்றும் 17-ந் தேதி தொலைபேசியில் கலந்துரையாடியதை உளவுத்துறையினர் இடைமறித்து பதிவு செய்தனர்.

அதில், அவர்கள் புல்வாமா தாக்குதலை விட பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தும் வகையில் இந்திய பாதுகாப்பு படையினர் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டி இருப்பது அம்பலத்துக்கு வந்தது. 

பயங்கரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் என இனியும் பொறுத்துப் பயனில்லை என்ற முடிவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தார்.

அதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் அமைந்துள்ள ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் பயிற்சி முகாம்கள் மீது குண்டு போட்டு ஒழித்துக்கட்டி பழி தீர்க்க இந்திய விமானப்படைக்கு அவர் அதிரடியாக உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை 3.30 மணிக்கு, 100 சதவீதம் துல்லியமான தாக்குதலுக்கு பெயர் பெற்ற இந்திய விமானப்படையின் ‘மிராஜ்-2000’ ரக போர் விமானங்கள் 12, சக்திவாய்ந்ததும், ஆயிரம் பவுண்ட் எடையுடையதுமான லேசர் வழிகாட்டும் குண்டுகளை சுமந்து கொண்டு பாகிஸ்தானுக்கு பறந்தன.

அவை அங்கு ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம், தளம் அமைந்துள்ள பாலகோட், முசாபராபாத், சகோதி ஆகிய இடங்களில் மிகத்துல்லியமாக குண்டுமழை பொழிந்தன. இதில், பயங்கரவாத முகாம்களும், தளமும் இருந்த இடம் தெரியாமல் நிர்மூலம் ஆகின.

அதைத் தொடர்ந்து வெற்றிகரமாக இந்திய போர் விமானங்கள், புறப்பட்ட இடத்துக்கு வந்து சேர்ந்தன.

21 நிமிடம் நடந்த இந்த தாக்குதலின்போது, அந்த முகாம்களில் அதிகாலை நேரம் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பயங்கரவாதிகள் சுமார் 350 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவனான மசூத் அசாரின் மைத்துனர் மவுலானா யூசுப் அசாரும் ஒருவர் என நம்பப்படுகிறது.

புல்வாமா தாக்குதல் நடந்து 12 நாளில், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை இந்தியா பழி தீர்த்து இருக்கிறது.

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே, டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 14-ந் தேதி பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். அதில் வீரமிக்க 40 துணை ராணுவ வீரர்கள் பலியாகினர். பாகிஸ்தானில் இந்த பயங்கரவாத அமைப்பு கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. பஹவல்பூரை தலைமையிடமாக கொண்டு, இந்த அமைப்பினை மசூத் அசார் தலைமை தாங்கி நடத்தி வந்தார்.

பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இயங்கி வருகிற அந்த இயக்கத்தின் பயிற்சி முகாம்கள் பற்றிய தகவல்கள் அவ்வப்போது அந்த நாட்டுக்கு வழங்கப்பட்டு வந்தது.

பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பதையும், பாகிஸ்தானுக்குள் ஆயுதங்கள் ஏந்திக்கொண்டு இருப்பதையும் தடுத்து நிறுத்தும் வகையில் ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தோம். ஆனால் பாகிஸ்தான் தனது மண்ணில் பயங்கரவாத கட்டமைப்புகளை அகற்றுவதற்கு உறுதியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில்தான் ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர், நாட்டின் பல்வேறு இடங்களில் மற்றொரு தற்கொலைப்படை தாக்குதலை நடத்த முயற்சிப்பதாகவும், அதற்காக பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பதாகவும் நம்பத்தகுந்த உளவுத்தகவல் கிடைத்தது.

தவிர்க்க முடியாத ஆபத்தை சந்திக்கும் நிலை உருவானதால், அதைத் தடுக்கிற வகையில் அதிரடியாக தாக்குதல் நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.

இன்று (நேற்று) அதிகாலை உளவு தகவல்கள் அடிப்படையில், பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் மிகப்பெரிய பயிற்சி முகாம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்காக பயிற்சி அளிக்கப்பட்டு வந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பயங்கரவாதிகள், பயிற்சியாளர்கள், மூத்த தளபதிகள், குழுக்கள் கொல்லப்பட்டனர்.

பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்த்து போரிடுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு இந்திய அரசு உறுதி கொண்டுள்ளது. எனவேதான் ராணுவ நடவடிக்கை இல்லாமல், ஜெய்ஷ் இ முகமது அமைப்பை குறிவைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் உயிரிழப்பை தடுக்கிற வகையில், இந்த தாக்குதல் இலக்குகள் முடிவு செய்யப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. லிபியாவின் பயங்கரவாதிகள் நடத்திய வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 40 பேர் பலி
லிபியாவின் பயங்கரவாதிகள் நடத்திய வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 40 பேர் பலியாயினர்.
2. மசூத் அசாரின் சகோதரன் உள்பட 15 பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ முயற்சி
காஷ்மீருக்குள் ஊடுருவ ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்க தலைவன் மசூத் அசாரின் சகோதரன் உள்பட 15 பயங்கரவாதிகள் தயாராகவுள்ளனர்.
3. ஏமன் நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குதல் : ராணுவ வீரர்கள் 19 பேர் பலி
ஏமன் நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 ராணுவ வீரர்கள் பலியாகினர்.
4. பாகிஸ்தான், பயங்கரவாதிகளை உண்மையாக தண்டிக்க வேண்டும் - அமெரிக்கா கிடுக்கிப்பிடி
“ஹபீஸ் சயீத் 2001-ல் இருந்து 7 முறை கைது செய்யப்பட்டுள்ளார். இது வழக்கமான ஒன்று. பாகிஸ்தான், பயங்கரவாதிகளை உண்மையாக தண்டிக்க வேண்டும்” என்று அமெரிக்கா கிடுக்கிப்பிடி போட்டுள்ளது.
5. உலகைச் சுற்றி...
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் 35 பாதுகாப்புபடை வீரர்கள் பலியாகினர்.