உலக செய்திகள்

வியட்நாமில் நடந்து முடிந்தது: டிரம்ப்-கிம் சந்திப்பில் உடன்பாடு ஏற்படவில்லை + "||" + Has been completed in Vietnam: Trump - Kim could not agree on meeting

வியட்நாமில் நடந்து முடிந்தது: டிரம்ப்-கிம் சந்திப்பில் உடன்பாடு ஏற்படவில்லை

வியட்நாமில் நடந்து முடிந்தது: டிரம்ப்-கிம் சந்திப்பில் உடன்பாடு ஏற்படவில்லை
வியட்நாமில் நடந்த டிரம்ப் - கிம் ஜாங் அன் இடையிலான சந்திப்பு எந்த உடன்பாடும் எட்டப்படாமல் முடிவுக்கு வந்தது.

ஹனோய்,

வியட்நாம் நாட்டின் தலைநகர் ஹனோயில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் தொடங்கியது. நட்சத்திர ஓட்டலில் நடந்த இரவு விருந்தில் இரு நாட்டு தலைவர்களும் கலந்துகொண்டு சந்தித்து பேசினர்.

இது பற்றி டிரம்ப் டுவிட்டரில் ‘‘வியட்நாமில் வடகொரியாவின் கிம் ஜாங் அன் உடனான இரவு விருந்தும், சந்திப்பும் அருமையாக இருந்தன. பேச்சுவார்த்தை நல்லபடியாக நடைபெற்றது’’ என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து, நேற்று காலை மீண்டும் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் அணு ஆயுதத்தை முழுமையாக கைவிடுவது மற்றும் பொருளாதார தடைகளை திரும்பப்பெறுவது தொடர்பாக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இருதரப்புக்கும் இடையே எந்த உடன்பாடும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. தன் மீதான பொருளாதார தடையை முழுமையாக நீக்க வேண்டும் என வடகொரியா முன்வைத்த கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்ததையடுத்து டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன் இடையிலான 2–வது உச்சிமாநாடு எந்த உடன்பாட்டையும் எட்டாமல் முடிந்தது.

இருநாட்டு தலைவர்களும் கூட்டு உடன்படிக்கைகையில் கையெழுத்திடும் நிகழ்வுக்கும், அதனை தொடர்ந்து மதிய விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் இரு தரப்பும் இந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்தன. அதன் பின்னர் டிரம்ப் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

அவர்கள்(வடகொரியா) முழுமையாக பொருளாதார தடையை நீக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் எங்களால் அதை செய்ய முடியாது. வடகொரியா சில இடங்களை அணு ஆயுதமற்ற பகுதியாக்க ஒப்புக்கொள்கிறது. ஆனால் நாங்கள் விரும்பும் இடங்களில் அதை நடைமுறைப்படுத்த அந்நாடு தயாராக இல்லை. அப்படி செய்தால்தான் பொருளாதார தடைகளை முழுமையாக நீக்க வேண்டும் என விரும்புகிறோம்.

எனினும் கிம் ஜாங் அன் உடனான நட்புறவு சிறப்பாக உள்ளது. நான் இந்த உறவை தக்க வைக்கவே விரும்புகிறேன். வரும் காலங்களில் என்ன நடக்கிறது என பார்ப்போம். வடகொரியாவுக்கு பொருளாதார ரீதியாக பெரும் உதவிகளைச் செய்யவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் அதற்கு அவர்கள் அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஏற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனை தொடர்ந்து, வட கொரியா மீது மீண்டும் பொருளாதார தடைகள் விதிக்கப்படுமா என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த டிரம்ப் ‘‘ஏற்கனவே அந்நாட்டின் மீது வலுவான தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. அங்கும் மக்கள் இருக்கிறார்கள். அவர்களும் வாழ வேண்டும்.’’ என்றார். அதேபோல் கிம் ஜாங் அன்னை மீண்டும் சந்திப்பீர்களா? என்ற கேள்விக்கு ‘‘அதற்கு வாய்ப்பில்லை’’ என்றும் பதிலளித்தார்.

டிரம்ப் உடனான 2–வது சந்திப்பு எந்த உடன்பாடும் எட்டப்படாமல் முடிவுக்கு வந்தது குறித்து கிம் ஜாங் அன் கருத்து தெரிவித்ததாக தகவல்கள் இல்லை.