தேசிய செய்திகள்

விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு உத்தரவு + "||" + The federal government has ordered to increase safety in airports

விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு உத்தரவு

விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு உத்தரவு
புலனாய்வு துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து, விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

புதுடெல்லி,

புலவாமா தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முகமது இயக்க பயங்கரவாதிகளின் முகாம்களை இந்திய போர் விமானங்கள் குண்டு வீசி அழித்தன. இதனால் ஆத்திரத்தில் இருக்கும் பயங்கரவாதிகள் இந்திய விமான நிலையங்களில் தாக்குதல் நடத்தக்கூடும் என்று மத்திய அரசுக்கு புலனாய்வு துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இதைத்தொடர்ந்து சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்கள், அனைத்து மாநில உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரையும் உஷார்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

* புலவாமா தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த விமான தாக்குதல் காரணமாக பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு துறை எச்சரித்து இருப்பதால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க விமான நிலையங்கள், விமான ஓடுதளங்கள், விமானப்படை தளங்கள், ஹெலிகாப்டர் தளங்கள், விமான பயிற்சி பள்ளிகள் ஆகியவற்றில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.

* மேற்கண்ட இடங்களுக்கு ஆட்கள் வருவதற்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.

* பயணிகளையும், அவர்களுடைய உடைமைகளையும் முழுமையாக சோதனை செய்ய வேண்டும்.

* விமான நிலையத்துக்கு வரும் வாகனங்களை நன்கு சோதனையிட வேண்டும்.

* விமான நிலைய கட்டிடத்தின் முன்பு வாகனங்களை நிறுத்த அனுமதிக்கக்கூடாது.

* வாகன நிறுத்தும் இடத்தில் உள்ள வாகனங்களையும் சோதனையிட வேண்டும்.

* ஆளில்லா குட்டி விமானங்கள், கிளைடர்கள், சூடான காற்று நிரப்பப்பட்ட பலூன்கள் பறப்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

* விமானத்துக்கு உணவு கொண்டு வரும் வாகனங்களை சம்பந்தப்பட்ட விமான போக்குவரத்து நிறுவனத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரி தீவிர சோதனை செய்ய வேண்டும்.

* உரிய அங்கீகாரம் இல்லாத யாரையும் விமானத்தின் அருகே செல்ல அனுமதிக்கக்கூடாது.

* அடுத்து அறிவிப்பு வரும் வரை விமான நிலையங்களில் பார்வையாளர்களை அனுமதிக்கக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.