மாநில செய்திகள்

தமிழகத்தில் வறுமைகோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவது நிறுத்திவைப்பு ஐகோர்ட்டில் அரசு தகவல் + "||" + 2 thousand offers suspension Government Information in the Court

தமிழகத்தில் வறுமைகோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவது நிறுத்திவைப்பு ஐகோர்ட்டில் அரசு தகவல்

தமிழகத்தில் வறுமைகோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவது நிறுத்திவைப்பு ஐகோர்ட்டில் அரசு தகவல்
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததன் காரணமாக, தமிழகத்தில் வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
சென்னை, 

தமிழகத்தில் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள சுமார் 60 லட்சம் ஏழை தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு சிறப்பு உதவித் தொகையாக தலா ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்தார்.

ஐகோர்ட்டில் வழக்கு

இந்த திட்டத்துக்கு தடை விதிக்க கோரி விழுப்புரத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், ‘‘வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு சிறப்பு உதவித் தொகை என்று கூறிவிட்டு, தேர்தலை மனதில் கொண்டு குடும்ப அட்டைத்தாரர்கள் எல்லோருக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கும் பணியில் அரசு ஈடுபட்டு உள்ளது’’ என்று கூறி இருந்தார்.

தள்ளுபடி

இந்த வழக்கு விசாரணையின்போது, மனுதாரர் சார்பில் சிறப்பு உதவித்தொகை வழங்குவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அரசாணை போலியானது என்று அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் வழக்கை தள்ளுபடி செய்து கடந்த 7-ந் தேதி உத்தரவிட்டனர்.

அப்போது, மனுதாரர் சார்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘தமிழக அரசு வெளியிட்ட அரசாணையைத்தான் ஐகோர்ட்டில் தாக்கல் செய்தோம். இரண்டு விதமான அரசாணைகளை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறப்பட்டு இருந்தது.

நீதிபதிகள் கேள்வி

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ‘‘இரண்டு விதமான அரசாணைகள் வெளியாகியுள்ளதாக மனுதாரர் குற்றம் சாட்டுவது தவறு. வரைவு அரசாணை ஒன்று முதலில் வெளியாகிவிட்டது. 2-வதாக இறுதி அரசாணை வெளியானது’’ என்று விளக்கம் அளித்தார்.

அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, ‘சிறப்பு உதவித் தொகை வழங்கும் திட்டம் எந்த நிலையில் உள்ளது?’ என்று கேள்வி எழுப்பினர்.

நிறுத்திவைப்பு

அதற்கு அட்வகேட் ஜெனரல் பதில் அளிக்கையில், ‘‘நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியானதால், தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துவிட்டது. அதனால், சிறப்பு உதவித் தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்த தொகை நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர், பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். மேலும், பயனாளிகளின் விவரங்களை கணக்கெடுக்கும் பணியும் நிறுத்தப்பட்டு விட்டது’’ என்று கூறினார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஏப்ரல் 29-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.