மாநில செய்திகள்

மத்திய சென்னை தொகுதிக்கு 3 செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டது ஏன்? தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் + "||" + Why the spending audience was appointed? Tamil Nadu Chief Electoral Officer

மத்திய சென்னை தொகுதிக்கு 3 செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டது ஏன்? தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

மத்திய சென்னை தொகுதிக்கு 3 செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டது ஏன்? தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்
மத்திய சென்னைக்கு மட்டும் 3 செலவினப் பார்வையாளர் நியமிக்கப்பட்டது ஏன்? என்பது பற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்தார்.
சென்னை, 

இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு, சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-

விடுமுறை என்பதால் வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்புமனுக்கள் பெறப்படமாட்டாது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இதுவரை ரூ.13.90 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உரிமம் பெற்ற துப்பாக்கிகள் 21 ஆயிரத்து 999 உள்ளன. அவற்றில் 18 ஆயிரத்து 768 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வங்கி உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பணிகளுக்கென்று சில துப்பாக்கிகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை பெறத்தேவையில்லை. உரிமம் இல்லாததால் 63 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 32 துப்பாக்கிகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

3 செலவின பார்வையாளர் ஏன்?

3 ஆயிரத்து 563 பேர் தடுப்புக்காவல் சட்டப்படி எச்சரிக்கை செய்யப்பட்டு, உத்தரவாதம் எழுதி வாங்கிக்கொண்டு, கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கும் தலா 2 செலவினப் பார்வையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மத்திய சென்னை தொகுதிக்கு மட்டும் 3 செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே நடந்த தேர்தல்களில் நடந்த சம்பவங்களை கணக்கிட்டும், இந்திய தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை அந்த தொகுதி தேர்தல் செலவில் அதிகம் கவனிக்கப்பட வேண்டிய தொகுதி என்பதாலும் அங்கு மட்டும் 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புகார்களும், நடவடிக்கையும்

இவர்கள் தவிர தமிழ்நாட்டுக்கு சிறப்பு செலவினப் பார்வையாளராக மதுமகாஜன் என்ற முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழகத்தின் அனைத்து தேர்தல் செலவுகளையும் இணைத்து கண்காணிப்பார்.

சி விஜில் செல்போன் செயலி மூலம் 597 புகைப்படங்கள், வீடியோக்கள் வந்துள்ளன. புகார் அனுப்பவர் தனது செல்போன் எண்ணையும் சேர்த்து அனுப்பினால், அவரது புகாரில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது பற்றிய விவரங்களை அனுப்ப முடியும்.

பெறப்பட்டுள்ள புகார்களில் 187 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. 45 புகார்களில் இன்னும் விசாரணை நடக்கிறது. 158 புகார்கள் விசாரிக்கப்பட்டு கைவிடப்பட்டன. 201 புகார்கள் தேவையில்லை என்று கைவிடப்பட்டன. கூட்டங்கள் நடத்துவது, பொருட்களைக் கொண்டு செல்வது, தவறான தகவல்களுடன் போஸ்டர் ஒட்டுவது போன்ற புகார்கள் அதிகம் வருகின்றன.

திருமண விழாக்கள்

தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும்போது திருமண விழாக்களில் சாப்பாடு போடுவது தவறல்ல. அதற்கு அனுமதி பெறத் தேவையில்லை. ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிடுவார்கள். திருமணம் என்ற பெயரில் வேறு விதமாக கூட்டங்கள் நடத்தினால் சி விஜில் மூலம் அதுபற்றிய தகவல் வந்துவிடும். அந்தக் கூட்டத்துக்கான செலவை, அந்தக் கூட்டம் நடத்திய வேட்பாளரின் தேர்தல் செலவில் சேர்த்துவிடுவோம்.

1950 இலவச போன் எண்ணுக்கு மட்டும் 60 ஆயிரத்து 853 அழைப்புகள் வந்தன. அவற்றில் 54 ஆயிரத்து 789 அழைப்புகள மூலம் வாக்காளர் பட்டியல் பற்றிய தகவல்கள் கோரப்பட்டன.

பணப்பரிமாற்றம்

அரசு சொத்துகளில் செய்யப்பட்ட ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 933 தேர்தல் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு, 224 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தனியார் சொத்துகளில் வரையப்பட்ட ஒரு லட்சத்து 36 ஆயிரம் தேர்தல் விளம்பரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு 148 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தமிழகத்தில் உள்ள அனைத்து தலைமை வங்கி நிர்வாகிகளையும் அழைத்து பேசினோம். அதில் இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுரைகள், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகள் ஆகியவை பற்றி பேசினோம். பண நடமாட்டம், ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுப்பது, செலுத்துவது போன்ற நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

பல மாதங்கள், ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லாத வங்கி கணக்குகளில் பணம் புழங்கினால் அதை உடனடியாக வங்கி அதிகாரிகள் ஆராய்ந்து, வருமான வரித்துறைக்கு தகவல் அளிப்பார்கள். அரசியல்வாதிகள், கட்சி வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளின் வங்கி கணக்குகளில் இருந்து சந்தேகத்துக்கு இடமான வகையில் பண பரிமாற்றம் நடந்தால் அதையும் வருமான வரித்துறையின் கவனத்துக்கு வங்கி அதிகாரிகள் கொண்டு செல்வார்கள்.

கூடுதலாக 2 விண்ணப்பங்கள்

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி வேட்புமனு தாக்கலின் போது 26-ம் எண் விண்ணப்பத்தில் கூடுதல் தகவல்களை வேட்பாளர்கள் அளிக்க வேண்டியதுள்ளது. தற்போது மேலும் ஒரு நடைமுறை வகுத்தளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வேட்புமனு தாக்கலின்போது சி4, சி5 என்ற இரண்டு விண்ணப்பங்களை வேட்பாளர்கள் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். வேட்பாளர் மீதான குற்ற வழக்கு விவரங்களை அதில் குறிப்பிட்டிருக்க வேண்டும். அந்த விண்ணப்பங்கள், மாவட்ட தேர்தல் அதிகாரி, தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோரின் பார்வைக்கு வரும்.

குற்ற வழக்கு விளம்பரம்

வேட்பாளர் தன் மீதான குற்ற வழக்கு விவரங்களை பத்திரிகைகளில் எந்தெந்த அளவு எழுத்துகளை கொண்டு விளம்பரம் அளிக்க வேண்டும் என்பதற்கான தனி விளக்கங்கள், தேர்தல் நடத்தை விதிகளில் அளிக்கப்பட்டுள்ளன. குற்ற வழக்குகள் இல்லாதவர்கள் விளம்பரம் அளிக்கத் தேவையில்லை.

புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி இன்னும் நிறைவடையவில்லை. தேர்தலுக்கு முன்பு 100 சதவீத அட்டைகளையும் வழங்கிவிட முடியாது. ஆனால் இந்த அட்டை இல்லாமலேயே தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள 11 ஆவணங்களைக் காட்டி ஓட்டுபோடலாம். வாக்காளர் 2-வது துணைப்பட்டியல் ஏப்ரல் 15 அல்லது 16-ந்தேதியில் வெளியிடப்படும்.

அமைச்சர் மீது புகார்

அதிக அளவில் தங்கம் கொண்டு செல்லும்போது சில ஆவணங்களை வைத்துக்கொள்ள வேண்டும். அதை வருமான வரித்துறையின் ஜி.எஸ்.டி. பிரிவினர் சோதனையிடுவார்கள். அதில் தவறுகள் இருக்கும்பட்சத்தில் வருமான வரித்துறை அதை நடவடிக்கைக்கு உட்படுத்துவார்கள்.

அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டால் பணம் கிடைக்கும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசியதாக அவர் மீது தி.மு.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியின் அறிக்கையைப் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

ராகுல்காந்தி நிகழ்ச்சி

சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி நடத்திய நிகழ்ச்சி பற்றி ஏற்கனவே மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை அளித்திருந்தார். கல்லூரியின் அனுமதியின் பேரில் கூட்டம் நடத்தியதால் அதில் தேர்தல் நடத்தை விதிமீறல் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, அவர் பேசிய பேச்சு குறித்து அறிக்கை தரக் கோரியுள்ளேன். அது இன்னும் வரவில்லை.

எம்.எல்.ஏ. மரணம்

வாக்குச்சாவடிகள் அனைத்தும் அதிகபட்சமாக 2 கி.மீ. தூரத்துக்குள்ளேயே அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தூரமாக இருப்பதாக புகார்கள் எதுவும் வரவில்லை.

சூலூர் தொகுதி எம்.எல்.ஏ. மரணம் குறித்து சட்டசபையில் இருந்து எனக்கு இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. அது வரப்பெற்றதும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அனுப்பி, பின்னர் அந்த இடம் காலித் தொகுதியாக அறிவிக்கப்படும்.

சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள் அனைத்தையும் தேர்தல் ஆணையம் பரிசீலிப்பதில்லை. தேர்தல் நடத்தை விதிகள் மீறப்படுவதாக புகார்கள் வரும் வீடியோக்களை மட்டும் ஆய்வு செய்வோம்.

தேர்தல் பணியாற்ற யாரும் கட்டாயப்படுத்தப்படுவதில்லை. அரசு ஊழியர் என்ற முறையில் அரசுப் பணியோடு தேர்தல் பணியையும் கடமையாகச் செய்ய வேண்டியது உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படாதது ஏன்? தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படாதது ஏன்? என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.