தேசிய செய்திகள்

கூட்டணி வியூகத்தால் பாரதீய ஜனதாவுக்கு 300 தொகுதிவரை கிடைக்கும் : கருத்து கணிப்பில் தகவல் + "||" + NDA Continues To Be Well Ahead Of UPA In Seat And Vote Share: Survey

கூட்டணி வியூகத்தால் பாரதீய ஜனதாவுக்கு 300 தொகுதிவரை கிடைக்கும் : கருத்து கணிப்பில் தகவல்

கூட்டணி வியூகத்தால் பாரதீய ஜனதாவுக்கு 300 தொகுதிவரை கிடைக்கும் : கருத்து கணிப்பில் தகவல்
மக்களவைத் தேர்தலுக்கு முன் பாஜக செய்த கூட்டணியால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 300 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக சிவோட்டர்ஸ், ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் சார்பில் எடுக்கப்பட்ட 2-ம் கட்ட கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
புதுடெல்லி,

'தி சிவோட்டர் மற்றும் ஐஏஎன்எஸ்' செய்தி நிறுவனம் இணைந்து, 2-வதுகட்ட மக்களவைத் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளை நடத்தியது. கடந்த ஜனவரி 1-ம் தேதியில் இருந்து 543 தொகுதிகளில் உள்ள 70 ஆயிரம் மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டு இந்த முடிவுகள்  வெளியிடப்பட்டன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

உத்தரபிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி இணைந்து மகா கூட்டணியை அமைத்துள்ளன. காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இந்த போட்டியால் உ.பி.யில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதனால், கடந்த தேர்தலைப் போல் அல்லாமல் இந்த முறை பாஜக, 35.4 சதவீத வாக்குகளை மட்டுமே பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. கடந்த முறை 80 இடங்களில் 72 இடங்களில் வென்ற பாஜககூட்டணி இந்த முறை 28 இடங்களை மட்டுமே வெல்ல வாய்ப்புள்ளது.

பீகார் மாநிலத்தில் 52.6 சதவீத வாக்குகளை பாஜக கூட்டணி  பெறும். நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி இணைந்து 40 தொகுதிகளில் 36 இடங்களைக் கைப்பற்ற முடியும்.

ராஜஸ்தான் மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 50.7 சதவீத வாக்குகளுடன், 25 தொகுதிகளில் 17 தொகுதிகளில் வெற்றி பெறலாம் எனவும், காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளிலும் வெல்ல வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியை இழந்தபோதிலும்கூட மக்களவைத் தேர்தலில் அதிகமான இடங்களைப் பெறக்கூடும். மாநிலத்தில் உள்ள 29 தொகுதிகளில் 23 தொகுதிகளில் பாஜகவும், 6 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் வெல்லக்கூடும்.

இந்த இரு மாநிலங்களிலும் சமீபத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தபோதிலும் அங்கு காங்கிரஸ் கட்சி பெரியஅளவுக்கு வெற்றி பெறாது எனத் தெரிய வந்துள்ளது.

பாஜக வலுவாக இருக்கும் குஜராத் மாநிலத்தில் 58.2 சதவீத வாக்குகளை பாஜக பெறும். மாநிலத்தில் உள்ள 26 இடங்களில் 24 தொகுதிகளில் பாஜக வெல்லும் என்றும் 2 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் 48.1 சதவீத வாக்குகளை பாஜக கூட்டணி பெறக்கூடும். அங்குள்ள 48 தொகுதிகளில் 34 தொகுதிகளில் பாஜக, சிவசேனா கூட்டணியும், 14 இடங்களில் காங்கிரஸ் கூட்டணியும் வெற்றி பெறக்கூடும்.

அரியானாவில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 42.6 சதவீத வாக்குகளைப் பெறக்கூடும். இங்குள்ள 10 தொகுதிகளில் 7 தொகுதிகளில் பாஜக கூட்டணியும், 3 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் வெல்ல சாத்தியம் உண்டு.

தமிழகம் மற்றும் கேரளாவில் பாஜக கூட்டணி மிகவும் பலவீனமடைந்துள்ளது. தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி 35.8 சதவீத வாக்குகளைப் பெற்றபோதிலும்  பாஜக கூட்டணி 8 இடங்களில் மட்டுமே வெல்ல வாய்ப்புள்ளது. மீதமுள்ள 31 இடங்களில் திமுக காங்கிரஸ் கூட்டணி 44.4 சதவீத வாக்குகளுடன் 31 இடங்களைக் கைப்பற்ற முடியும்.

கேரள மாநிலத்தில் பாஜக 19.6 சதவீத வாக்குகள் பெற்றாலும், அங்குள்ள 20 தொகுதிகளில் ஒரு தொகுதியை கூட பாஜகவால் வெல்ல முடியாது. காங்கிரஸ் கட்சிக்கு 46 சதவீத வாக்குகளும் 17 இடங்களும் கிடைக்கக்கூடும். மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுஜனநாயகக் கூட்டணிக்கு 3 இடங்கள் மட்டுமே கிடைக்கலாம்.

கர்நாடக மாநிலத்தில் பாஜகவுக்கும், காங்கிரஸ் -மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணிக்கும் இடையே கடுமையாக போட்டி இருக்கும் எனத் தெரிய வந்துள்ளது. இங்குள்ள 28 தொகுதிகளில் 44.2 சதவீத வாக்குகளைப் பெற்று பாஜக 15 இடங்களையும், 43 சதவீத வாக்குகளைப் பெற்று காங்கிரஸ் கூட்டணி 13 இடங்களிலும் வெல்லலாம்.

தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி மொத்தமுள்ள 17 இடங்களில் 16 இடங்களையும், ஏஐஎம்ஐஎம் கட்சி ஒரு இடத்திலும் வெல்லும். வாக்கு சதவீதத்தில் 42 சதவீதத்தை டிஆர்எஸ் கட்சி பெறும் , காங்கிரஸ் கட்சி 28 சதவீதத்தைப் பெற்றாலும் ஒரு இடத்தில்கூட வெல்ல முடியாது.

ஆந்திர மாநிலத்தில் 25 தொகுதிகளில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம் கட்சிக்கு 15 இடங்களும், ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்களும் கிடைக்கலாம். இங்கும் காங்கிரஸ், பாஜகவுக்கு எந்தவிதமான தொகுதிகளும் கிடைக்க வாய்ப்பில்லை.

மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ்,பாஜக இடையே கடும் போட்டி இருக்கக்கூடும். திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 41.6 சதவீத வாக்குகள் பெற்று 42 தொகுதிகளில் 34 தொகுதிகளில் வெல்ல வாய்ப்புண்டு. 35 சதவீத வாக்குகளைப் பெறும் பாஜக கூட்டணி 8 இடங்களைப் பெறக்கூடும். கடந்த முறை 2 எம்.பி.க்களை பெற்ற பாஜக இந்த முறை 8 இடங்களைப் பெறக்கூடும். ஆனால், காங்கிரஸ் கட்சிக்கும், இடதுசாரிகளுக்கும் எந்த இடமும் கிடைக்காது எனத் தெரிய வந்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 இடங்களில் ஆளும் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சி 11 இடங்களையும், பாஜக 10 இடங்களையும் கைப்பற்றக்கூடும்.

உத்தர பிரேதேசத்தில் பகுஜன்சமாஜ், சமாஜ்வாதி இணைந்து மெகா கூட்டணி அமைக்காவிட்டால், பாஜக கூட்டணி 80 இடங்களில் 72 இடங்களைப் பெறும். தனித்துப்போட்டியிட்டால் சமாஜ்வாதி 4 இடங்களையும், காங்கிரஸ், பகுஜன் சமாஜ் தலா 2 இடங்களை மட்டுமே பெற முடியும்.

இதேபோல டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜகவே மீண்டும் வெல்ல வாய்ப்புள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி, ஆம்ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தால் 4 இடங்களையும், பாஜக 3 இடங்களிலும் வெல்லக்கூடும்.

சிவோட்டர்ஸ், ஐஏஎன்எஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் தேர்தலுக்கு முந்தைய பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காமல் 261 இடங்கள் வரை கிடைக்கும் என்று தெரியவந்தது. இப்போது 2-வது கட்ட கருத்துக்கணிப்பில் பாஜக தனித்து 264 இடங்களையும், கூட்டணியுடன் சேர்ந்து 305 இடங்களை பெறும்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 141 இடங்களிலும், மற்ற கட்சிகள் 97 இடங்களிலும் வெல்லக்கூடும்.

ஒருவேளை தேர்தலுக்குபின் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் (10இடங்கள்), டிஆர்எஸ் கட்சி(16), பிஜு ஜனதா தளம்(10), மிசோ தேசிய முன்னணி ஒரு இடம், ஆகிய கட்சிகளை கூட்டணியில் சேர்க்க வாய்ப்பு உண்டு. இந்த கட்சிகள் மூலம் 36 இடங்கள் கிடைக்க வாய்ப்புண்டு.

தேர்தலுக்கு முன் பாஜக மிகவும் சாதுர்யமாக மகாராஷ்டிராவில் சிவசேனா, அசாமில் போடோலாந்து மக்கள் முன்னணி, பஞ்சாபில் சிரோன்மணி அகாலிதளம், தமிழகத்தில் அதிமுக, உ.பியில் அப்னாதளம் ஆகியவற்றுடன் ஏற்பட்ட கூட்டணி மூலம் பா.ஜ.க.  கூடுதலாக 47 இடங்கள் பெறக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. “ராகுல் காந்தி பிரதமராக ஆதரவு!” மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவகவுடா
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமரானால், அவருக்கு ஆதரவாக இருக்க போவதாக, முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான தேவகவுடா தெரிவித்துள்ளார்.
2. 5 மணி நிலவரப்படி தொகுதி வாரியாக வாக்கு சதவீதம்
5 மணி நிலவரப்படி தொகுதி வாரியாக வாக்கு சதவீதம் விவரம் வெளியாகி உள்ளது.
3. தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.73 சதவீதம் வாக்குப்பதிவு
தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.73 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது.
4. 3 மணி நிலவரப்படி தமிழகத்தில் 52.02 சதவீத ஓட்டுப்பதிவு
3 மணி நிலவரப்படி தமிழகத்தில் 52.02 சதவீத ஓட்டுப்பதிவாகி உள்ளது.
5. 1 மணி நிலவரப்படி தொகுதி வாரியாக வாக்கு சதவீதம்
1 மணி நிலவரப்படி தொகுதி வாரியாக வாக்கு சதவீதம் விவரம் வெளியாகி உள்ளது. #LokSabhaElections2019