தேசிய செய்திகள்

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை அடுத்துஅம்பானி நிறுவனத்துக்கு பிரான்ஸ் அரசு ரூ.1,044 கோடி வரி தள்ளுபடியா?பத்திரிகை தகவலால் பரபரப்பு + "||" + Rafael fighter aircraft contract To Ambani Government of France Bill tax return

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை அடுத்துஅம்பானி நிறுவனத்துக்கு பிரான்ஸ் அரசு ரூ.1,044 கோடி வரி தள்ளுபடியா?பத்திரிகை தகவலால் பரபரப்பு

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை அடுத்துஅம்பானி நிறுவனத்துக்கு பிரான்ஸ் அரசு ரூ.1,044 கோடி வரி தள்ளுபடியா?பத்திரிகை தகவலால் பரபரப்பு
ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை அடுத்து அம்பானி நிறுவனத்துக்கு பிரான்ஸ் அரசு ரூ.1,044 கோடி வரி தள்ளுபடி வழங்கியதாக வெளியான பத்திரிகை தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லி,

பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து இந்திய விமானப்படைக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு முடிவு எடுத்தது. 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ந் தேதி இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.


ஆனால், இந்த பேரத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி புகார் எழுப்பி வருகிறது.

குறிப்பாக மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு ஒரு ரபேல் போர் விமானத்தின் விலை ரூ.526 கோடி என இறுதி செய்திருந்த நிலையில், நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு ரூ.1,670 கோடி என முடிவு எடுத்து இருக்கிறது; ரபேல் போர் விமான தயாரிப்பில் டசால்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதற்கு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்ததில் முறைகேடு நடந்து இருக்கிறது என்பது காங்கிரஸ் கட்சியின் முக்கிய குற்றச்சாட்டுகள்.

இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் அதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள மறு ஆய்வு மனுக்கள், இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் வெளியான புதிய ஆவணங்களின் அடிப்படையில் விசாரிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு 10-ந்தேதி அறிவித்தது, ஒரு திருப்பமாக அமைந்தது.

இந்த நிலையில் ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் அனில் அம்பானியின் பிரான்ஸ் நிறுவனத்துக்கு அந்த நாட்டு அரசு வரித்தள்ளுபடி வழங்கி உள்ளதாக அந்த நாட்டின் லீ மாண்டி செய்தித்தாள், செய்தி வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த பரபரப்பு தகவல்கள் வருமாறு:-

பிரான்ஸ் நாட்டில் அனில் அம்பானிக்கு ரிலையன்ஸ் பிளேக் அட்லாண்டிக் பிரான்ஸ் என்ற பெயரில் பிராந்திய கேபிள் நெட்வொர்க் மற்றும் பிற தொலைதொடர்பு கட்டமைப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனம், பிரான்ஸ் அரசுக்கு 2007 முதல் 2010-ம் ஆண்டு வரையில் 60 மில்லியன் யூரோ வரி செலுத்த வேண்டும். ஆனால் ரிலையன்ஸ் நிறுவனம் 7.6 மில்லியன் யூரோ மட்டும்தான் செலுத்த முடியும் என்று கூறியது. இதற்கிடையே 2010 முதல் 2012-ம் ஆண்டு வரை ரிலையன்ஸ் நிறுவனம் செலுத்த வேண்டிய வரி பற்றி பிரான்ஸ் அரசு வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து மேலும் 91 மில்லியன் யூரோ செலுத்த வேண்டும் எனறு கூறி உள்ளனர்.

ரிலையன்ஸ் நிறுவனம் மொத்தம் 151 மில்லியன் யூரோ செலுத்த வேண்டும் என்று 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரான்ஸ் அரசு வரித்துறை அதிகாரிகள் அறிவித்தனர்.

ஆனால் 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு பிரான்ஸ் அரசுடன் பிரதமர் நரேந்திர மோடி ஒப்பந்தம் செய்து சில மாதங்கள் ஆன நிலையில், பிரான்ஸ் அரசு வரித்துறை அதிகாரிகள் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் 151 மில்லியன் யூரோ பெறுவதற்கு பதிலாக வெறும் 7.3 மில்லியன் யூரோவை தீர்வு தொகையாக (செட்டில்மென்ட்) பெற்றுக்கொண்டு மற்றவற்றை தள்ளுபடி செய்து விட்டனர். இவ்வாறு பிரான்ஸ் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுபற்றி ரிலையன்ஸ் செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவிக்கையில், “ பிரான்ஸ் அரசு கேட்ட வரி நிலைத்து நிற்கத்தகுந்தது அல்ல; சட்டவிரோதமானதும்கூட. இது தொடர்பான தீர்வில், எந்த தவறும் நடக்கவில்லை” என கூறினார்.

மேலும், “2008-2012 அதாவது 10 ஆண்டுகளுக்கு முன்பாக பிளேக் பிரான்ஸ் நிறுவனம் 2.7 மில்லியன் யூரோ (சுமார் ரூ.20 கோடி) நஷ்டத்தில் இயங்கியது. பிரான்ஸ் அரசு வரி அதிகாரிகள் ரூ.1100 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்றார்கள். சட்டப்படி, பிரான்ஸ் வரி தீர்வு நடைமுறையின்படி இறுதி தீர்வாக (செட்டில்மென்ட்) ரூ.56 கோடி செலுத்தப்பட்டது” என்றும் குறிப்பிட்டார்.

இதையொட்டி மத்திய அரசின் ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “ ஒரு தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட வரிச்சலுகைக்கும், இந்திய அரசின் ரபேல் போர் விமானங்கள் கொள்முதலுக்கும் முடிச்சு போட்டு தகவல்கள் வெளியாகி இருப்பதை பார்க்கிறோம். வரி சலுகையின் காலமோ, தற்போதைய அரசின் ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் விவகாரமோ முற்றிலும் தொடர்பு இல்லாதவை” என கூறப்பட்டுள்ளது.