தேர்தல் செய்திகள்

அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது: தலைவர்கள் இன்று இறுதிக்கட்ட பிரசாரம் + "||" + Election campaign Leaders today Final campaign

அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது: தலைவர்கள் இன்று இறுதிக்கட்ட பிரசாரம்

அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது: தலைவர்கள் இன்று இறுதிக்கட்ட பிரசாரம்
அனல் பறக்கும் பிரசாரம் இன்று மாலையுடன் ஓயும் நிலையில் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.
சென்னை,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தலும், தமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ஒரே கட்டமாக நாளை மறுநாள் (வியாழக் கிழமை) நடக்கிறது. கடந்த ஒரு மாதமாக தமிழகம் முழுவதும் அனல் பறந்த தேர்தல் பிரசாரம் இன்று (செவ்வாய்கிழமை) மாலை 6 மணியுடன் ஓய்கிறது.


இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கட்சிகளின் வேட்பாளர்களும் வீதி, வீதியாக, வீடு, வீடாக தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ளனர். சுட்டெரிக்கும் கடும் வெயிலிலும் ஆங்காங்கே பிரசாரம் நடந்த வண்ணமாக உள்ளது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈரோட்டிலும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனியிலும் நேற்று தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய சென்னை பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தயாநிதி மாறனை ஆதரித்து திறந்தவெளி வேனில் அவர் பிரசாரம் மேற்கொண்டார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவியும், தே.மு.தி.க. பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் சென்னையில் தனித்தனியே பிரசாரம் மேற்கொண்டனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அ.மமு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோரும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டனர். இதற்கிடையே இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய உள்ளதால், தலைவர்கள் இன்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

அதன்படி, ஒரு மாதமாக தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருக்கும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் தன்னுடைய பிரசாரத்தை நிறைவு செய்கிறார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன் மகன் போட்டியிடும் தேனி தொகுதியில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி திருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின் தொடர்ந்து இடை விடாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். தற்போது அவர் தான் தேர்தல் பிரசாரம் தொடங்கிய, திருவாரூரிலே தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது தேர்தல் பிரசாரத்தை மார்ச் 20-ந் தேதி விழுப்புரத்தில் தொடங்கினார். தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட டாக்டர் ராமதாஸ் தன் மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடும் தர்மபுரியில் தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்கிறார். தர்மபுரி தொகுதியில் அவர் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வரும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ஈரோடு தொகுதியில் தன்னுடைய பிரசாரத்தை முடிக்கிறார். தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. இந்த ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது. அங்கு போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தியை ஆதரித்து வைகோ பேசுகிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மதுரையிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நாகப்பட்டினத்திலும், அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னையிலும் பிரசாரம் மேற்கொள்ள இருக்கின்றனர்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தென் சென்னை தொகுதியில் பிரசாரம் செய்கிறார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மதியம் 3 மணிக்கு சென்னை தியாகராயநகரில் நடக்கும் தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றி, தன்னுடைய பிரசாரத்தை நிறைவு செய்கிறார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் தென்காசியில் இறுதிக்கட்ட பிரசாரம் செய்கிறார்.