மாநில செய்திகள்

ஈரோட்டில் தேர்தல் பிரசாரம்: ம.தி.மு.க.வை ஸ்டாலினிடம் வைகோ அடகு வைத்துவிட்டார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு + "||" + Election campaign in Erode Chief Minister Edappadi Palaniswamy is hard hit

ஈரோட்டில் தேர்தல் பிரசாரம்: ம.தி.மு.க.வை ஸ்டாலினிடம் வைகோ அடகு வைத்துவிட்டார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

ஈரோட்டில் தேர்தல் பிரசாரம்: ம.தி.மு.க.வை ஸ்டாலினிடம் வைகோ அடகு வைத்துவிட்டார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு
ம.தி.மு.க.வை ஸ்டாலினிடம் வைகோ அடகு வைத்து விட்டார் என்று ஈரோட்டில் தேர்தல் பிரசாரம் செய்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக தாக்கி பேசினார்.
ஈரோடு,

அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அவர் நேற்று ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கு என்கிற ஜி.மணிமாறனுக்கு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு ஈரோடு கஸ்பாபேட்டை, பன்னீர்செல்வம் பூங்கா, சூளை பகுதிகளில் பேசினார்.


முன்னதாக காங்கேயத்தில் இருந்து திறந்த வேனில் வந்த அவருக்கு கஸ்பாபேட்டை பகுதியில் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்பு அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் மத்தியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்தவேனில் நின்று கொண்டே வாக்கு சேகரித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இங்கே தேர்தல் பிரசார பொதுக்கூட்டமா?, வெற்றி விழா கூட்டமா? என்று நினைக்கும் அளவுக்கு கடல்போல மக்கள் திரண்டு இருக்கிறீர்கள். நீங்கள் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மணிமாறனுக்கு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.

நம்முடைய தலைமையில் அமைந்திருப்பது மெகா கூட்டணி. மக்கள் விரும்பும் கட்சிகளின் கூட்டணி. தி.மு.க. தலைமையில் ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி, கொள்கை இல்லாத கட்சிகளின் கூட்டணி அமைந்திருக்கிறது. நம்முடைய கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவித்து இருக்கிறோம். ஆனால் தி.மு.க. கூட்டணியில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மட்டுமே காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் என்று அறிவித்து உள்ளார். அந்த கட்சியில் உள்ள வேறு எந்த கட்சியும் அவரை பிரதமர் வேட்பாளர் என்று கூறவில்லை. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூட தேர்தலுக்கு பின்னர்தான் பிரதமரை தேர்ந்து எடுப்போம் என்று கூறி உள்ளார். மற்ற கூட்டணி கட்சிகளும் அப்படியே நினைக்கின்றன. எனவே அந்த கூட்டணி குழப்பம் நிறைந்த கூட்டணி.

நமது அரசு தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை செய்து உள்ளது. ஆனால், மு.க.ஸ்டாலின் என்ன வளர்ச்சித்திட்டம் கொண்டு வந்தீர்கள் என்று கேட்கிறார். ஜெயலலிதா இருந்தபோது அறிவித்த அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி இருக்கிறோம்.

அதே ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக அறிவித்து இருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கர்நாடகாவில் பேசும்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டுவோம், காவிரி மேலாண்மை வாரியத்தை கலைப்போம் என்று கூறி இருக்கிறார். 50 ஆண்டுகள் நமது உரிமைக்காக போராடி, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டு ஆணைத்தை அமைத்து இருக்கிறோம்.

ஆனால் காவிரி மேலாண்மை வாரித்தை கலைப்போம் என்று ஸ்டாலின் அறிவித்து உள்ள பிரதமர் வேட்பாளர் கூறுகிறார். காவிரி தண்ணீர்தான் நமக்கு ஒரே நீர் ஆதாரம். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டினால் 63 டி.எம்.சி. தண்ணீர் தேக்கப்படும். அப்போது காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வராது. தமிழகம் பாலைவனம் ஆகும். எனவே தமிழகத்துக்கு தண்ணீர் வருவதை தடுக்கும் தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் பதிலடி கொடுக்க வேண்டும்.

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்றி இருக்கிறோம். ஆனால் ஸ்டாலின் அவர்களே, உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். உங்கள் கூட்டணியில் நீங்கள் அறிவித்த பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி கர்நாடகாவில் அணை கட்டுவோம் என்று கூறி இருக்கிறாரே இதற்கு நீங்கள் என்ன பதில் கூறுகிறீர்கள். இதை நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இந்த தொகுதியில் ம.தி.மு.க. கட்சி வேட்பாளரை நிறுத்தி இருக்கிறது. ம.தி.மு.க. கட்சியை வைகோ நடத்தி வருகிறார். தி.மு.க.வில் இருந்து பிரிந்து வந்தபோது ஸ்டாலின் ஒரு வார்டு கவுன்சிலருக்கு கூட தகுதியில்லாதவர் என்று விமர்சித்தவர் வைகோ. அதுமட்டுமா?, தி.மு.க. ஒரு கார்ப்பரேட் நிறுவனம், இலங்கை தமிழர்களை கொன்றொழித்தவர் கருணாநிதி. மீத்தேனுக்கு கையொப்பமிட்டவர் துரோகி ஸ்டாலின், தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி மக்களை ஏமாற்றி மோசடி செய்கிறது.

வாய்திறந்தால் ஈழத்தமிழர்கள், இலங்கை தமிழர்கள் என்று பேசும் வைகோ, இன்று கூனிக்குறுகி, தி.மு.க. முன்பு மண்டியிட்டு பிச்சை எடுத்து தி.மு.க. கூட்டணியில் போட்டியிடுகிறார்.

பச்சோந்திகளை பார்த்திருக்கிறோம். அதுபோன்று நிறம் மாறுபவர் வைகோ. அவர் ஒரு திறமையான பேச்சாளர், திறமையான அரசியல்வாதி என்று நினைத்திருந்தேன். ஆனால் இவ்வளவு தரம் தாழ்ந்து போவார் என்று நினைக்கவில்லை.

தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. போட்டியிடுகிறது. ஒரு கட்சியின் வேட்பாளர் அந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது என்றால் அவர் அந்த கட்சியின் உறுப்பினராக இருக்க வேண்டும். இங்கு போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் எந்த கட்சியின் உறுப்பினர். அவர் ம.தி.மு.க. உறுப்பினர் என்பதா? தி.மு.க. உறுப்பினர் என்பதா? ம.தி.மு.க. கட்சியினர் எப்படி கூறி அவருக்கு வாக்கு சேகரிப்பார்கள்.

ஒரு சீட்டுக்காக வைகோ அவருடைய கட்சியை தி.மு.க.விடம் அடகுவைத்து விட்டார் என்பது வெட்கமாக இருக்கிறது. துண்டை இழுத்து இழுத்து அவர் பேசும்போது அவரை ரசித்து இருக்கிறேன். ஆனால் இப்போது அவரது செயல்கள் அசிங்கமாக இருக்கிறது.

தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது தமிழகத்தின் மின்சார தேவை 9 ஆயிரத்து 500 மெகாவாட். அதைக்கூட தி.மு.க. அரசால் கொடுக்க முடியவில்லை. இப்போது நமது தேவை 16 ஆயிரம் மெகாவாட். இந்த மின்சாரத்தை முழுமையாக தயாரித்து தொழிற்சாலைகள், விவசாயிகள் என்று அனைவருக்கும் தடையில்லாமல் கொடுக்கிறோம். அதுமட்டுமின்றி இன்னும் 50 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது என்ற அடிப்படையில் திட்டங்கள் தீட்டி மின்சாரம் உற்பத்தி செய்து மின்மிகை மாநிலமாக, உபரி மின்சார உற்பத்தி செய்பவர்களாக இருக்கிறோம். ஆனால் இதை எல்லாம் தெரியாமல் கொச்சைப்படுத்துவதையும், கேவலமாக பேசுவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஸ்டாலின் வாய் திறந்தாலே பொய்யாக பேசுகிறார். உண்மையே பேசுவதில்லை.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பல அறிவிப்புகளை கொடுத்து இருக்கிறார். அவர் ஏதோ ஆட்சியில் இருப்பது போலவும், நடப்பது சட்டமன்ற தேர்தல் போலவும் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். இது நாடாளுமன்ற தேர்தல். இது பிரதமரை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல். ஆனால், ஆட்சியிலேயே இல்லாதவர் வாக்குறுதிகள் கொடுக்கிறார். இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அவருடன் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், எம்.எல்.ஏ.க்கள் தோப்பு என்.டி.வெங்கடாசலம், கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணி ஆகியோர் இருந்தனர்.