தேர்தல் செய்திகள்

தமிழக உரிமைகளை பறித்த பா.ஜனதாவுக்கு பாடம் புகட்ட வேண்டும் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் + "||" + Snatched Tamil rights Lets have a lesson for BJP KS Azhagiri request

தமிழக உரிமைகளை பறித்த பா.ஜனதாவுக்கு பாடம் புகட்ட வேண்டும் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

தமிழக உரிமைகளை பறித்த பா.ஜனதாவுக்கு பாடம் புகட்ட வேண்டும் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்
மேகதாதுவில் அணை கட்ட விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் கொடுத்து தமிழகத்தின் உரிமைகளை பறித்த பா.ஜ.க. அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கும், மாநிலத்தில் நடைபெற்று வரும் அ.தி.மு.க. ஆட்சிக்கும் எதிராக வீசி வரும் கடும் எதிர்ப்பு அலையை தாங்க முடியாமல் அந்த அணியினர் நவீன கோயபல்ஸ் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். தி.மு.க.-காங்கிரஸ் 2004-ம் ஆண்டு இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை அமைத்தது. அந்த காலக்கட்டத்தில் இந்தியாவை வளர்ச்சி பாதையில் அழைத்து சென்றோம். தமிழகமும் பல்வேறு வளர்ச்சி பெற்று முன்னேறியது.


தற்போது பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. அமைத்துள்ள கூட்டணி திரைமறைவு பேரத்தின் அடிப்படையில் அமைந்த சந்தர்ப்பவாத கூட்டணியாகும். அ.தி.மு.க. அரசு மீது கவர்னரிடம் 25 ஊழல் குற்றச்சாட்டுக்கள் கூறிய பா.ம.க. 70 நாட்கள் கழித்து யார் மீது சி.பி.ஐ. விசாரணை வைக்க வேண்டும் என்று கோரியதோ, அவர்களுடன் கூட்டணி சேர்ந்தது. எனவே இந்த கூட்டணிக்கு எந்த கொள்கையும் கிடையாது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறுகிற சூழல் ஏற்பட்டு இருப்பதை தாங்கிக்கொள்ள முடியாமல் எடப்பாடி பழனிசாமியும், டாக்டர் அன்புமணி ராமதாசும், கடைந்தெடுத்த அவதூறு பிரசாரத்தை கையாண்டு வருகிறார்கள். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் என்றும், காவிரி மேலாண்மை வாரியம் கலைக்கப்படும் என்றும் ராகுல்காந்தி கூறியதாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கையின் மூலம் தெரிவித்து இருக்கிறார்.

ராகுல்காந்தி இப்படி பேசியதாக கூறப்படுகின்ற அவதூறு பேச்சுக்கு என்ன ஆதாரம்? என்ன அடிப்படை? எந்த ஊடகத்தில் வந்தது?, இதற்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆதாரத்தை காட்டுவாரா?. ராகுல்காந்தி பேசாத பேச்சுக்கு ஆதாரம் காட்ட முடியுமா?. இப்படியெல்லாம் பேசி தமிழக மக்களை ஏமாற்றலாம் என்று நினைத்தால் அது பகல் கனவாக தான் முடியும்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி கொடுத்தது யார்?. மத்திய பா.ஜ.க. நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்கரியின் கட்டுப்பாட்டில் இருக்கிற மத்திய நீர்வள ஆணையம் தான் கர்நாடக அரசுக்கு கடந்த 2018 நவம்பர் 26-ந்தேதி அனுமதி அளித்தது. காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு இறுதி தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியத்தின் அனுமதி இல்லாமல் காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவிதமான கட்டுமான பணிகளையும் செய்ய கூடாது என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டை கர்நாடக அரசு மீறுவதற்கு துணை போனது பா.ஜ.க. அரசு என்பதை அன்புமணியால் மறுக்க முடியுமா?.

மேகதாதுவில் அணை கட்ட விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் கொடுத்து தமிழ்நாட்டின் உரிமைகளை பறித்து, துரோகம் செய்த பா.ஜ.க.வுக்கு பாடம் புகட்ட வேண்டிய பொறுப்பு தமிழக வாக்காளர்களுக்கு இருக்கிறது. தமிழகத்திற்கு துரோகம் செய்து, வஞ்சித்த பா.ஜ.க.வோடு கூட்டணி அமைத்துள்ள அ.தி.மு.க.-பா.ம.க.வுக்கு உரிய தண்டனையை கொடுக்க வேண்டிய வாய்ப்பாக வருகிற நாடாளுமன்ற தேர்தல் அமைந்திருக்கிறது. தமிழகத்தின் உரிமைகளை தாரை வார்த்த பா.ஜ.க.வை ஆதரிக்கின்ற கட்சிகளை தமிழக மக்கள் புறக்கணித்து, நிராகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.