தேசிய செய்திகள்

பணப்பட்டுவாடா புகாரை தொடர்ந்து வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து - ஆம்பூர், குடியாத்தம் சட்டசபை தொகுதிகளில் திட்டமிட்டபடி நாளை வாக்குப்பதிவு + "||" + Vellore constituency will be canceled due to the cash withdrawal complaint - voting tomorrow in Assembly constituencies of Ambur and Gudiyatham

பணப்பட்டுவாடா புகாரை தொடர்ந்து வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து - ஆம்பூர், குடியாத்தம் சட்டசபை தொகுதிகளில் திட்டமிட்டபடி நாளை வாக்குப்பதிவு

பணப்பட்டுவாடா புகாரை தொடர்ந்து வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து - ஆம்பூர், குடியாத்தம் சட்டசபை தொகுதிகளில் திட்டமிட்டபடி நாளை வாக்குப்பதிவு
பணப்பட்டுவாடா புகாரை தொடர்ந்து வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதே நேரம் ஆம்பூர், குடியாத்தம் சட்டசபை தொகுதிகளில் திட்டமிட்டபடி நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
புதுடெல்லி,

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நாளை (18-ந் தேதி) ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது.

இந்த தேர்தலில் ஓட்டுக்காக பெருமளவு பணப்பட்டுவாடா இருக்கும் என தகவல்கள் வெளியானதால் பறக்கும் படைகள் அமைத்து தேர்தல் கமிஷன் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தது. வருமான வரித்துறை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தனர்.


இந்த நிலையில், தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடும் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ரகசிய தகவல்கள் கிடைத்ததின் அடிப்படையில் தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கையில் இறங்கியது.

கடந்த மாதம் 27-ந் தேதி இரவு வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள துரை முருகன் இல்லம், அவரது மகன் கதிர் ஆனந்த் நடத்தும் என்ஜினீயரிங் கல்லூரி, பள்ளிக்கூடத்தில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் ரூ.10 லட்சம் ரொக்க பணமும், ஆவணங்களும் சிக்கியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

தொடர்ந்து துரை முருகனுக்கு மிகவும் நெருக்கமானவர்களின் இல்லங்களில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக தகவல் அறிந்து, மறுபடியும் வருமான வரி அதிகாரிகள் கடந்த 1-ந் தேதி சோதனைகள் நடத்தினர். அந்த சோதனைகளில் கட்டு கட்டாக ரூ.10 கோடிக்கும் அதிகமான தொகை சிக்கியதாக தகவல்கள் வெளியாகின. இந்த தொகை, வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக வைக்கப்பட்டிருந்ததற்கு ஆதாரங்கள் சிக்கியதாகவும் தெரிகிறது.

மேலும் கதிர் ஆனந்த், அவருக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இது தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் சிறப்பு செலவின பார்வையாளர் ஆகியோர் அறிக்கை அளித்தனர்.

அந்த அறிக்கையை தேர்தல் கமிஷன் தீவிரமாக பரிசீலித்தது. அதன்முடிவில் வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்வது என முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான பரிந்துரை அறிக்கையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு தேர்தல் கமிஷன் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) இரவு முறைப்படி அனுப்பிவைத்தது.

அதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்வதற்கு அவர் ஒப்புதல் அளித்தார்.

வேலூர் தொகுதியில் நேற்று மாலை தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில், அந்த தொகுதியின் தேர்தல் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. இது குறித்த அதிகாரபூர்வ தகவலை தேர்தல் கமிஷன் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஏழு கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டதில், ஒரு தொகுதிக்கு தேர்தல் ரத்து செய்யப்படுவது இதுவே முதல் முறை.

அதே நேரத்தில் வேலூர் மாவட்டத்தில் காலியாக இருந்த ஆம்பூர், குடியாத்தம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் திட்டமிட்டபடி நாளை (18-ந் தேதி) நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதசாகு அறிவித்தார். அங்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

தற்போது வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்ததற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வந்துள்ளது. அந்த தொகுதிக்குட்பட்ட ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வரவில்லை.

வேலூர் தொகுதியில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக, அது சம்பந்தமான வழக்குப்பதிவு செய்யப்பட்டு அதுகுறித்த அறிக்கைகள் இந்திய தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த அறிக்கைகளின் அடிப்படையில் இந்திய தேர்தல் கமிஷன் இந்த முடிவை எடுத்துள்ளது. இதுதான் அங்கு தேர்தல் ரத்து செய்யப்படுவதற்கு காரணமாக உள்ளது.

தற்போது நாடாளுமன்ற தேர்தல் மட்டுமே நிறுத்தப்பட்டு உள்ளதால், அங்கு நடைபெறும் இடைத்தேர்தலில் வாக்குச்சாவடிகளில் ஒரு ஓட்டு எந்திரம் மட்டுமே வாக்குப்பதிவு நாளின்போது வைக்கப்படும். நாடாளுமன்ற தொகுதிக்கு என்று தனி அதிகாரிகளும், அங்கு இடைத்தேர்தல் நடக்கும் சட்டமன்ற தொகுதிக்கு என்று தனி அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

தற்போது நாடாளுமன்ற தேர்தல் நிறுத்தப்பட்டிருந்தாலும் அங்குள்ள ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்கள் தடையின்றி நடத்தப்படுவதற்கு அங்குள்ள மாவட்ட தேர்தல் அதிகாரி உடனடியாக ஏற்பாடுகளை செய்வார்.

வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தல் நிறுத்தப்பட்டாலும் அங்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டும். மீண்டும் அங்கு நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தப்படும்போது அதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் கமிஷன் வெளியிடும். வழக்கு தொடர்பான தொடர் நடவடிக்கைகளை வருமான வரித்துறையினர் மேற்கொள்வார்கள்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலை நிறுத்துவற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்றுத்தான் இந்திய தேர்தல் கமிஷன் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பிரசாரம் ஓய்ந்த நிலையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது அரசியல் கட்சிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.