தேர்தல் செய்திகள்

தமிழக உரிமைகள் மீட்க அ.தி.மு.க. கூட்டணியை வெற்றி பெற செய்யுங்கள்வாக்காளர்களுக்கு, டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் + "||" + Restore Tamil rights ADMK Coalition Make Success For voters, Dr. Ramadoss request

தமிழக உரிமைகள் மீட்க அ.தி.மு.க. கூட்டணியை வெற்றி பெற செய்யுங்கள்வாக்காளர்களுக்கு, டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்

தமிழக உரிமைகள் மீட்க அ.தி.மு.க. கூட்டணியை வெற்றி பெற செய்யுங்கள்வாக்காளர்களுக்கு, டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்
தமிழக உரிமைகள் மீட்கப்பட அ.தி.மு.க. கூட்டணியை வெற்றி பெற செய்யுங்கள் என்று டாக்டர் ராமதாஸ், வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,

தமிழக வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க., த.மா.கா., புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம், புரட்சி பாரதம், என்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணி வளர்ச்சியையும், தமிழகத்தின் உரிமைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பதையும் முழக்கமாக வைத்து இந்த தேர்தலை சந்திக்கிறது.


மாநிலங்கள் உரிமைகள் மீட்டெடுக்கப்பட்டால் தான் தமிழ்நாட்டு மக்கள் கண்ணியமாகவும், தலைநிமிர்ந்தும் வாழ முடியும். பா.ஜ.க.வும் கூட்டுறவுடன் கூடிய கூட்டாட்சி தான் எங்கள் கொள்கை என்று கூறி மாநிலங்களுக்கு உரிமை வழங்க முன் வந்திருக்கிறது.

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால் தமிழ்நாட்டில் காவிரி உள்ளிட்ட ஆற்றுநீர் பாசன உரிமைகள் வென்றெடுக்கப்படும். ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படும். தமிழ்நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.25 லட்சம் கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்கள் மத்திய அரசு உதவியுடன் செயல்படுத்தப்படும்.

தமிழக அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் அனைத்தையும் முதல்-அமைச்சரிடம் நேரில் பேசி நிறைவேற்ற செய்வேன். மலைவாழ் மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் மற்ற கோரிக்கைகளை நிறைவேற்ற அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி நடவடிக்கை எடுக்கும்.

சென்னை- சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பா.ம.க. மேற்கொள்ளும்.

சென்னை-விழுப்புரம்- சேலம், சென்னை-வேலூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்தி விபத்தில்லா சாலைகளாக மாற்றுவோம். 3 மாநிலங்களை இணைக்கும் புதுச்சேரி-திண்டிவனம்-கிருஷ்ணகிரி சாலையை 4 வழிச்சாலையாக மேம்படுத்தும் பணிகளையும் அ.தி.மு.க. கூட்டணி விரைந்து நிறைவேற்றும்.

தி.மு.க. அணி வெற்றி பெற்றால் தமிழகத்தில் உள்ள அப்பாவி மக்களின் நிலங்கள் தி.மு.க.வினரால் பறிக்கப்படும். 2006-11-ம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் மட்டும் தி.மு.க.வினரால் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள 12 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன.

இது எட்டு வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட இருந்த நிலங்களை விட இருமடங்கு அதிகம். இப்படிப்பட்டதொரு கொடுங்கோலர்களுக்கு வாக்களிப்பது என்பது நமது தலையை நாமே கொள்ளிக்கட்டையால் சொறிந்து கொள்வதற்கு ஒப்பாகும்.

தி.மு.க.வினர் அடுத்தடுத்து 3 தேர்தல்களில் தோல்வி அடைந்து எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் போதே, சாப்பிட்டதற்கு பணம் கேட்டதற்காக பிரியாணி கடையை உடைத்து சூறையாடுவது, அழகு நிலையத்துக்குள் நுழைந்து அங்குள்ள பெண்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்குவது, செல்போன் கடை, தேநீர் கடை, சாலைகளில் பூ விற்கும் பெண்கள் ஆகியோரை தாக்குவது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல்களில் படுதோல்வி அடைந்து வரும் நிலையிலேயே இப்படி என்றால், தேர்தலில் வெற்றி பெற்றால் இன்னும் எத்தகைய வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவார்கள் என்பதை நினைத்து பார்க்கவே பெரும் அச்சமாக உள்ளது.

தமிழ்நாடு அமைதியாகவும், நல்லிணக்கத்துடன் வாழ வேண்டியது அவசியம். தமிழகத்தில் பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதுகாப்புடன் வாழ வேண்டியது கட்டாயம் ஆகும். தமிழ்நாடு இழந்த உரிமைகள் அனைத்தையும் மீட்டெடுக்க வேண்டியது அவசர தேவை ஆகும். இந்த அனைத்தும் சாத்தியமாக வேண்டும் என்றால் 18-ந்தேதி (நாளை) நடைபெறும் தேர்தலில் தர்மபுரி, விழுப்புரம், அரக்கோணம், கடலூர், ஸ்ரீபெரும்புதூர், மத்தியசென்னை, திண்டுக்கல் ஆகிய 7 தொகுதிகளில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர்களுக்கு ‘மாம்பழம்’ சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

அதேபோல் 20 நாடாளுமன்ற தேர்தல், 18 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க., வேலூரில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி, தென்காசி தொகுதியில் களமிறங்கியுள்ள புதிய தமிழகம் ஆகியவற்றின் வேட்பாளர்களுக்கு ‘இரட்டை இலை’ சின்னத்திலும், 5 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ‘தாமரை’ சின்னத்திலும், 4 இடங்களில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர்களுக்கு ‘முரசு’ சின்னத்திலும், தஞ்சாவூர் தொகுதியில் த.மா.கா. சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ‘ஆட்டோ’ சின்னத்திலும், புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ‘ஜக்கு’ சின்னத்திலும் வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.