மாநில செய்திகள்

சென்னையில் தேர்தல் அதிகாரிகளுக்கு வாக்கு எண்ணிக்கை பயிற்சி + "||" + Election officials Voting number training

சென்னையில் தேர்தல் அதிகாரிகளுக்கு வாக்கு எண்ணிக்கை பயிற்சி

சென்னையில் தேர்தல் அதிகாரிகளுக்கு வாக்கு எண்ணிக்கை பயிற்சி
சென்னையில் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
சென்னை, 

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கைக்கு இன்னும் 6 நாட்களே உள்ளன. ஓட்டு எண்ணிக்கை பணிக்கான அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு, கேரளா, குஜராத் மற்றும் புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றில் ஓட்டு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகள் குறித்த பயிற்சி முகாம் சென்னையில் நேற்று நடந்தது.

இதில் இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர்கள் உமேஷ் சின்கா, சந்தீப் சக்சேனா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவும் இதில் கலந்துகொண்டார்.

மாதிரி ஓட்டு எண்ணிக்கை மையம் 

இதன்பின்பு, தென்சென்னை தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ள கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை துணை ஆணையர்கள் பார்வையிட்டனர்.

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு முன்மாதிரி ஓட்டு எண்ணிக்கை மையம் ஏற்படுத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியதன் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை மையம் முன்மாதிரி ஓட்டு எண்ணிக்கை மையமாக அமைக்கப்பட்டிருந்தது.

இந்த மையத்தில் செய்யப்பட்டிருந்த வசதிகளை பார்வையிட்ட துணை தேர்தல் ஆணையர்கள், மாதிரி ஓட்டு எண்ணிக்கை மையம் மிகச்சிறப்பாக அமைக்கப்பட்டிருப்பதாக தமிழக தேர்தல் அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர். சுமார் ½ மணி நேரம் மையத்தை பார்வையிட்ட துணை ஆணையர்கள், தமிழக அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகளையும் வழங்கினர்.

சிறப்பு வசதி 

இதன்பின்பு, சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளருமான பிரகாஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

ஓட்டு எண்ணிக்கையின் போது என்னென்ன விதிமுறைகள் கடைபிடிக்க வேண்டும் என்றும், ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படும்போது எந்த மாதிரியான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது.

ஒரு சட்டமன்ற தொகுதியில் 5 ஒப்புகை சீட்டு எந்திரங்கள் ‘ரேண்டமாக’ எடுக்கப்பட்டு ஓட்டுகள் எண்ணப்படும். ஒப்புகை சீட்டுகளை எண்ணுவதற்காக தனியாக வங்கிகளில் இருக்கும் காசாளர் அறையை போன்று ஒரு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஓட்டு சிலிப் வெளியே செல்ல முடியாத வகையில் இந்த அறை அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து ஓட்டு எண்ணிக்கை மையங்களிலும் இந்த சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.

ஒரு எந்திரத்துக்கு 30 நிமிடம் 

ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் முடிவை அறிவிக்க சுமார் 30 முதல் 35 நிமிடங்கள் வரை ஆகலாம். ஒப்புகை சீட்டு எந்திரத்தை பொறுத்தமட்டில் ஒரு எந்திரத்தில் உள்ள ஓட்டு சீட்டுகளை எண்ணி முடிக்க சுமார் ஒரு மணி நேரம் ஆகலாம். இது அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையை பொறுத்து மாறுபடும்.

தபால் ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்டதும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் ஓட்டுகள் எண்ணப்படும்.

வேறுபாடு 

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டுகளுக்கும், மொத்தம் பதிவானதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஓட்டு எண்ணிக்கைக்கும் சில நேரங்களில் சிறிய வேறுபாடு இருக்கலாம். அதற்கு பல காரணங்கள் உள்ளது.

கண்ட்ரோல் யூனிட் பழுது, தொழில்நுட்ப பிரச்சினை போன்ற காரணங்களினால் சில மையங்களில் 3 அல்லது 4 மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

இதன் காரணமாக வேறுபாடு இருக்கலாம். இதுபோன்ற சூழ்நிலையில் என்னென்ன விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியும், பெருநகர சென்னை மாநகராட்சியின் தெற்கு மண்டல துணை ஆணையாளருமான டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உடன் இருந்தார்.