கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட்: வார்னரின் அபார சதத்தால் ஆஸ்திரேலிய அணி வெற்றி + "||" + World Cup Cricket: Australia won by 41 runs

உலக கோப்பை கிரிக்கெட்: வார்னரின் அபார சதத்தால் ஆஸ்திரேலிய அணி வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட்: வார்னரின் அபார சதத்தால் ஆஸ்திரேலிய அணி வெற்றி
உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 3-வது வெற்றியை பெற்றது. வார்னர் சதம் அடித்தார்.
டவுன்டான்,

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.


இந்த நிலையில் டவுன்டானில் நேற்று அரங்கேறிய 17-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, முன்னாள் சாம்பியன் பாகிஸ்தானுடன் மல்லுகட்டியது. ஆஸ்திரேலிய அணியில் இரு மாற்றமாக மார்கஸ் ஸ்டோனிஸ், ஆடம் ஜம்பா நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஷான் மார்ஷ், கேன் ரிச்சர்ட்சன் சேர்க்கப்பட்டனர்.

‘டாஸ்’ ஜெயித்த பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி டேவிட் வார்னரும், கேப்டன் ஆரோன் பிஞ்சும் ஆஸ்திரேலிய அணியின் இன்னிங்சை தொடங்கினர். எச்சரிக்கையுடன் ஆடிய இவர்கள் முகமது அமிரின் முதல் ஓவரை மெய்டனாக்கினர். படிப்படியாக ரன்வேகத்தை அதிகரிக்கச் செய்த இவர்கள் அணிக்கு வலுவான அஸ்திவாரம் அமைத்து தந்தனர். 16.4 ஓவர்களில் ஆஸ்திரேலியா 100 ரன்களை தொட்டது. உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக தொடக்க விக்கெட்டுக்கு ஒரு ஜோடி 100 ரன்களுக்கு மேல் எடுப்பது கடந்த 23 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.

முகமது ஹபீசின் ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்க விட்டு அசத்திய ஆரோன் பிஞ்ச் 82 ரன்களில் (84 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்) முகமது அமிரின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். பிஞ்ச்-வார்னர் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 146 ரன்கள் சேர்த்தது. அடுத்து வந்த முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் (10 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. இதைத் தொடர்ந்து மேக்ஸ்வெல் நுழைந்தார். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய வார்னர், பவுண்டரி அடித்து ஒரு நாள் கிரிக்கெட்டில் தனது 15-வது சதத்தை நிறைவு செய்தார். பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய பிறகு அவர் ருசித்த முதல் செஞ்சுரி இதுவாகும்.

ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுக்கு 223 ரன்கள் (33.2 ஓவர்) எடுத்திருந்ததை பார்த்த போது, அந்த அணி சுலபமாக 350 ரன்களை தாண்டும் போலவே தோன்றியது. ஆனால் இந்த ஜோடி பிரிந்ததும் நிலைமை தலைகீழானது. மேக்ஸ்வெல் 20 ரன்னிலும் (10 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்), வார்னர் 107 ரன்னிலும் (111 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினர். இதன் பிறகு முகமது அமிரின் துல்லியமான தாக்குதல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை மிரள வைத்தது. இமாலய ஸ்கோரை எட்ட வேண்டும் என்ற முனைப்புடன் அவசரகதியில் ஆடிய ஆஸ்திரேலிய வீரர்கள் கடைசி விக்கெட்டுகளை மளமளவென தாரை வார்த்து விட்டனர்.

ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் 307 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. அந்த அணி கடைசி 84 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை பறிகொடுத்தது கவனிக்கத்தக்கது. பாகிஸ்தான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர் 10 ஓவர்களில் 2 மெய்டனுடன் 30 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். ஒரு நாள் போட்டியில் அவர் 5 விக்கெட் வீழ்த்தியது இதுவே முதல் முறையாகும்.

பின்னர் 308 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சில் தடுமாறியது. பஹார் ஜமான் (0) கம்மின்சின் வேகத்தில் காலியானார். அடுத்து வந்த வீரர்களில் பாபர் அசாம் (30 ரன்), இமாம் உல்-ஹக் (53 ரன்), முகமது ஹபீஸ் (46 ரன்) ஓரளவு பங்களிப்பை அளித்தாலும் வலுவான பார்ட்னர்ஷிப் கிடைக்கவில்லை.

மிடில் வரிசையில் திண்டாடிய பாகிஸ்தான் 34 ஓவர் முடிந்திருந்த போது 7 விக்கெட்டுக்கு 200 ரன்களுடன் தத்தளித்தது. இதன் பின்னர் கேப்டன் சர்ப்ராஸ் அகமதுவும், வஹாப் ரியாசும் கைகோர்த்து ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு சிறிது நேரம் தண்ணி காட்டினர். வஹாப் சில சிக்சர்களும் விரட்டியடித்தார். கடைசி 6 ஓவரில் 45 ரன்கள் தேவைப்பட்டதால் பரபரப்பும் தொற்றிக்கொண்டது. ஸ்கோர் 264 ரன்களாக உயர்ந்த போது வஹாப் ரியாஸ் (45 ரன், 39 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) ஸ்டார்க்கின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அத்துடன் அவர்களின் நம்பிக்கையும் தளர்ந்தது. இன்னொரு பக்கம் போராடிய சர்ப்ராஸ் அகமது (40 ரன்) ரன்-அவுட்டில் வீழ்ந்தார்.

முடிவில் பாகிஸ்தான் அணி 45.4 ஓவர்களில் 266 ரன்களுக்கு அடங்கியது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4-வது லீக்கில் ஆடிய ஆஸ்திரேலியாவுக்கு இது 3-வது வெற்றியாகும். ஏற்கனவே ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளை சாய்த்து இருந்தது. பாகிஸ்தான் அணிக்கு இது 2-வது தோல்வியாகும். ஒட்டுமொத்த ஒரு நாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக பெற்ற 9-வது வெற்றியாகவும் இது பதிவானது.