மாநில செய்திகள்

தலைமை குறித்து கருத்து தெரிவிக்க கூடாது : அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் + "||" + Do not comment on the leadership Palaniasamy-O.Panneerselvam emphasizing the admk

தலைமை குறித்து கருத்து தெரிவிக்க கூடாது : அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

தலைமை குறித்து கருத்து தெரிவிக்க கூடாது : அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
அ.தி.மு.க.வினர் கட்சி தலைமை குறித்து கருத்து எதுவும் தெரிவிக்க கூடாது என்று கட்சியினருக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.
சென்னை, 

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. அதன்படி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இருந்து வருகின்றனர். அவர்கள் தலைமையில் அ.தி.மு.க. நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் ஏற்பட்ட தோல்வி கட்சியில் சலசலப்பை உண்டாக்கியது.

மதுரை மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ராஜன் செல்லப்பா, அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை தான் வேண்டும். இது குறித்து விவாதிக்க பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார். அவரின் கருத்துக்கு ஆதரவு அளிப்பதாக குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.வும் பெரம்பலூர் மாவட்ட செயலாளருமான குன்னம் ராமச்சந்திரன் தெரிவித்தார். இரண்டு மாவட்ட செயலாளர்கள் கட்சி தலைமைக்கு எதிராக குரல் எழுப்பியதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டசபை விரைவில் கூட உள்ள நிலையில், கட்சியில் ஏற்பட்டுள்ள சலசலப்பை சரி கட்ட அ.தி.மு.க. தலைமை தீவிரமாக இறங்கியது. உடனடியாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பிதழும் அனுப்பி வைக்கப்பட்டது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஆலோசனை கூட்டம் நேற்று காலை கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது.

அழைப்பிதழுடன் வந்தவர்கள் மட்டும் கூட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகள் யாரும் கூட்டத்திற்கு கைப்பேசி கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. கூட்டம் 10.30 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். அவைத்தலைவர் மதுசூதனன் முன்னிலை வகித்தார். துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவைத்தலைவர் மதுசூதனன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் மட்டும் பேசினர். கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து காரசாரமாக விவாதிக்கப்படும் என்று கருதப்பட்டது. ஆனால் அது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை. கூட்டம் சுமார் 1½ மணி நேரம் மட்டுமே நடந்த இந்த கூட்டத்தில், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட யாரையும் பேச அனுமதிக்கவில்லை. மாறாக கோரிக்கைகளை மனுக்களாக எழுதி தரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘ஆட்சியும், கட்சியையும் காப்பாற்ற நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தலைமை குறித்து யாரும் பொது வெளியில் பேச வேண்டாம். ஊடகங்களை சந்திக்க வேண்டாம். இங்கே யாரும் அது குறித்து பேச வேண்டாம். நீங்கள் சொல்ல விரும்பியதை மனுவாக எழுதி கொடுங்கள். அதனை பரிசீலித்து உரிய முடிவு எடுக்கப்படும். தற்போது நாம் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இது முக்கியமான தேர்தல். அதில் நாம் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும்’ என்றார்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, விரைவில் கட்சியின் ஒருங்கிணைப்பு குழுவில் கூடுதல் நிர்வாகிகள் சேர்க்கப்படுவார்கள். இதன்மூலம் தொண்டர்களுக்கும், கட்சிக்கும் இடையே நெருக்கம் அதிகமாகும். நம்முடைய கவனம் உள்ளாட்சி தேர்தலிலேயே இருக்க வேண்டும். நமக்குள் பிரச்சினை உருவாக்கி, எதிரிகளுக்கு வெற்றியை அளித்து விடக்கூடாது, ஊடகங்களில் யாரும் பேச வேண்டாம் என்று தெரிவித்தார்.

இந்த கூட்டம் முடிவில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதலுடன் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அ.தி.மு.க. சார்பில் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் வழியாகவும், இன்னபிற சமூகத் தொடர்பு சாதனங்கள் வழியாகவும் கருத்துகளை தெரிவிக்கும் பணிக்கென செய்தித் தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர்கள் எந்த ஒரு விவகாரத்திலும் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதையும், கட்சியின் சிந்தனை ஓட்டம் எத்தகையது என்பதனையும் நிர்வாகிகளின் ஒப்புதலைப் பெற்ற கருத்துகளை மட்டுமே தெரிவிப்பதற்கு உரிமை பெற்றவர்கள்.

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்று முடிந்து அடுத்தகட்ட அரசியல் பணிகள் தொடங்கி இருக்கும் இந்த வேளையில், செய்தித் தொடர்பாளர்கள், தலைமைக்கழகத்தில் இருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை எந்த ஒரு ஊடகத்திலும், பத்திரிகையிலும், சமூகத் தொடர்பு சாதனங்களிலும் எத்தகைய கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மற்றவர்கள் யாரும் பத்திரிகைகளிலோ, ஊடகங்களிலோ, இன்னபிற சமூகத் தொடர்பு சாதனங்களிலோ தங்கள் கருத்துகளை அ.தி.மு.க.வின் கருத்துகளாகத் தெரிவிப்பது கூடாது. அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அ.தி.மு.க. 1½ கோடி உறுப்பினர்களைக் கொண்ட மாபெரும் மக்கள் இயக்கம். ஒழுக்கமும், கட்டுப்பாடும் இந்த இயக்கத்தின் இரு கண்களாக எப்பொழுதும் இருந்து வந்திருக்கின்றன என்பதை மனதில் கொண்டு அனைவரும் எங்களது இந்த வேண்டுகோளை ஏற்று ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

* நாடாளுமன்ற தேர்தல், 22 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலிலும், அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை இந்த கூட்டம் தெரிவித்து கொள்கிறது.

* தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் இந்த கூட்டம் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறது.

* நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அறுதிப்பெரும்பான்மைக்கும் கூடுதலான இடங்களில் வெற்றி பெற்று, பிரதமர் நரேந்திரமோடி தொடர்ந்து 2-வது முறையாக, மீண்டும் பிரதமராக பதவியேற்றதற்கு, மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் இந்த கூட்டம் தெரிவித்து கொள்கிறது. இந்திய தேசத்தின் பிரதமரை வழிமொழியும் வாய்ப்பினை அ.தி.மு.க.வுக்கு அளித்தமைக்கு இந்த கூட்டம் தனது மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறது.

* தமிழ்நாட்டில் விரைவில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் சிறப்புடன் பணியாற்றி, ஜெயலலிதா தலைமையில் பெற்றதை போன்ற மகத்தான வெற்றியை பெற்றிட இந்த கூட்டம் உறுதி ஏற்கிறது. உள்ளாட்சி மன்றத் தேர்தல் பணிகளை உடனடியாக தொடங்கி மக்கள் மனங்களை வென்றெடுக்க இந்தக்கூட்டம் சூளுரைக்கிறது.

போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அ.தி.மு.க. தலைமை அலுவலத்தை சுற்றி சில இடங்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தும் வகையில் ‘பொதுச்செயலாளர் பதவியை ஏற்க வாருங்கள் எடப்பாடியாரே...’ என்று போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை நீடிக்கும்

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் உள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு, அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. இந்தநிலையில் அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை வேண்டுமா? ஒற்றை தலைமை வேண்டுமா? என்பது குறித்து விவாதிக்க அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்புடனும், பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட அந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து விவாதிக்கப்படவில்லை, மாறாக நிர்வாகிகளின் கருத்துகள் எழுத்துப்பூர்வமாக பெறப்பட்டது.

கூட்டம் முடிந்து வெளியே வந்த மாவட்ட செயலாளர்களும், எம்.எல்.ஏ.க்களும் ஒற்றை தலைமை பற்றி பேசவில்லை என்று தெரிவித்தனர். இதன்மூலம் அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை நீடிக்கும் என்பது உறுதியாகி உள்ளது. இதனை அமைச்சர்கள் ஜெயக்குமார், ராஜேந்திரபாலாஜி ஆகியோரும் தெளிவுப்படுத்தினர். அவர்கள் கூறும்போது, அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை தான் நீடிக்கும் என்றனர். இதைத்தொடர்ந்து ஒற்றை தலைமை என்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரம் தெரிவித்தது. 

113 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

அ.தி.மு.க.வுக்கு 123 (சபாநாயகரையும் சேர்த்து) எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்களில் சபாநாயகர் தவிர்த்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பிரபு, கலைச்செல்வன், ரத்தினசபாபதி ஆகிய 3 எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை. மேலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் என்பதாலும், மாற்று கட்சியினர் என்பதாலும் அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை. அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஓ.எஸ்.மணியன், குன்னம் ராமச்சந்திரன் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. 123 பேரில் 113 பேர் மட்டும் பங்கேற்றனர்.