மாநில செய்திகள்

வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு + "||" + 2 days in Chennai rain

வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
சென்னை, 

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கி உள்ளது. இதையொட்டி தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்து வருகிறது. ஆனால் இதர மாவட்டங்களில் வறட்சியே நீடிக்கிறது.

இந்த பகுதிகளை சேர்ந்த மக்கள், மழையை எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். அதிலும் தலைநகர் சென்னை, தண்ணீர் தட்டுப்பாட்டால் தவிக்கிறது. நிலத்தடி நீர் மட்டமும் குறைந்துவிட்டதால், மழையை நம்பியே சென்னைவாசிகள் இருக்கின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் ஆறுதலான வார்த்தையை வெகுநாட்களுக்கு பிறகு கூறி இருக்கிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-

சென்னையில் 2 நாட்கள் மழை

தமிழகத்தில் 15-ந்தேதிக்கு (நாளை) பிறகு வெயிலின் தாக்கம் குறையும். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, நெல்லை, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்மாவட்டங்களில் வறண்ட வானிலை தான் நிலவும்.

திருவள்ளூர், காஞ்சீபுரம், சென்னை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் மற்றும் அரியலூரில் நாளை (இன்று) அனல் காற்று வீசும். சென்னையை பொறுத்தவரை, வெப்பச்சலனம் காரணமாக 15-ந்தேதி (நாளை) மற்றும் 16-ந்தேதி (நாளை மறுதினம்) ஆகிய 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மழை அளவு

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், வால்பாறை, குளச்சலில் தலா 2 செ.மீ., பேச்சிப்பாறை, குழித்துறை, பெரியாறு, செங்கோட்டையில் தலா 1 செ.மீ மழை பெய்துள்ளது.