மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க. அமோக வெற்றி பெறும் மு.க.ஸ்டாலின் பேச்சு + "||" + DMK in local elections Will succeed

உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க. அமோக வெற்றி பெறும் மு.க.ஸ்டாலின் பேச்சு

உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க. அமோக வெற்றி பெறும் மு.க.ஸ்டாலின் பேச்சு
உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
அரவக்குறிச்சி, 

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜியை வெற்றி பெற செய்ததற்கும், கரூர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜோதிமணியை வெற்றி பெற செய்ததற்கும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக மு.க.ஸ்டாலின் கார் மூலம் கரூரில் இருந்து அரவக்குறிச்சிக்கு புறப்பட்டு சென்றார். காலை 7.30 மணிக்கு புங்கம்பாடி பிரிவு சாலையில் திரண்டிருந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது அவர்கள், நீங்கள் ஆட்சிக்கு வராததுதான் எங்களுக்கு பெரும் குறையாக உள்ளது. நீங்கள் ஆட்சிக்கு வந்திருந்தால் நகைக்கடன் தள்ளுபடி, இளைஞர், பெண்களுக்கு வேலைவாய்ப்பு, விவசாயக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட நலத்திட்டங்கள் கிடைத்திருக்கும். எப்போது தேர்தல் வந்தாலும் உங்களை முதல்-அமைச்சராக்குவோம் என்று தெரிவித்தனர்.

அனைத்து இடங்களிலும் வெற்றி

அவர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் அனைத்து இடங்களிலும் தி.மு.க. அமோக வெற்றிபெறும். அப்போது உங்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். அப்போது மக்கள் பிரதிநிதிகளை நீங்கள் தேடிச்செல்ல வேண்டாம். அவர்கள் உங்களை தேடிவந்து உங்கள் குறைகளை தீர்ப்பார்கள். ஆங்காங்கே தாலுகா அளவில் பயிற்சி மையம் ஏற்படுத்தி அரசுத்தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். ஜெயித்தாலும், தோற்றாலும் மக்களோடு மக்களாக நின்று மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவது தி.மு.க. தான்” என்றார்.

அப்போது திருமணமான மணமக்கள் மணக்கோலத்தில் அங்கு வந்தனர். இதையடுத்து மு.க.ஸ்டாலின் அவர்களை வாழ்த்தி, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

திருமண நிதியுதவி

இதையடுத்து அங்கிருந்து புறப்பட்டு பள்ளப்பட்டி ராஜாப்பேட்டை பகுதிக்கு சென்ற மு.க.ஸ்டாலினுக்கு அங்கு திரண்டிருந்த இஸ்லாமியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு 14 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் திருமண நிதியுதவியை மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர் தி.மு.க. சார்பில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி பள்ளியை அவர் தொடங்கிவைத்தார்.

பின்பு நகர தி.மு.க. அலுவலகம் முன்பு திரண்டிருந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அப்போது பொதுமக்கள் மு.க.ஸ்டாலினுடன் செல்பி எடுத்தனர். அவரும் அனைவருக்கும் இன்முகத்துடன் செல்பி எடுக்க அனுமதி அளித்தார். பின்பு அனைவருக்கும் நன்றி தெரிவித்து கரூருக்கு புறப்பட்டு சென்றார். அப்போது செல்லும் வழியில் அரவக்குறிச்சியிலுள்ள ஒரு பேக்கரி கடையில் பொதுமக்களுடன் அமர்ந்து டீ குடித்தார்.

இதைத்தொடர்ந்து பவித்திரம் ஜெயந்திநகர், தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்து, குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.