மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் புதிய காவலர் குடியிருப்புகள் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார் + "||" + New police settlements across Tamil Nadu

தமிழகம் முழுவதும் புதிய காவலர் குடியிருப்புகள் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

தமிழகம் முழுவதும் புதிய காவலர் குடியிருப்புகள் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
தமிழகம் முழுவதும் புதிதாக கட்டப்பட்டுள்ள காவலர் குடியிருப்புகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
சென்னை, 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தூத்துக்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலக கட்டிடங்கள், சிவகங்கை மாவட்டம் - காளையார்கோவில் மற்றும் சிங்கம்புணரி, கிருஷ்ணகிரி மாவட்டம் - சூளகிரி ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலக கட்டிடங்கள் மற்றும் வட்டாட்சியர் குடியிருப்பு கட்டிடங்கள் ஆகியவற்றை தலைமைச் செயலகத்தில் காணொலிக்காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்துவைத்தார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் சென்னை எழிலகத்தில், புதிதாக கட்டப்படவுள்ள பேரிடர் மேலாண்மை அலுவலகம், பயிற்சி நிலையம் மற்றும் மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கட்டிடத்திற்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாடு நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குனரகத்தில் காலியாகவுள்ள 101 நிலஅளவர் மற்றும் 157 வரைவாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 14 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

காவலர் குடியிருப்புகள்

கோயம்புத்தூர் மாவட்டம், கோவைப்புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் 4-ம் அணிக்காக கட்டப்பட்டுள்ள 137 காவலர் குடியிருப்புகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

பெரம்பலூர் துரைமங்கலத்தில் 76 காவலர் குடியிருப்புகள், திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் 9-ம் அணிக்காக 48 காவலர் குடியிருப்புகள் என 124 காவலர் குடியிருப்புகள்;

சென்னை சிட்லபாக்கம் மற்றும் திருமங்கலம், ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை, தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள 4 காவல் நிலையங்கள்;

காஞ்சீபுரத்தில் கட்டப்பட்டுள்ள குற்றப் புலனாய்வுத்துறை பிரிவு அலுவலக கட்டிடம்; சேலம் அன்னதானபட்டியில் கட்டப்பட்டுள்ள ஆயுதப்படைக்கான நிர்வாக கட்டிடம்; வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் கட்டப்பட்டுள்ள துணைக்காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டிடம்;

தீயணைப்புத் துறையினர்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினருக்கான 13 குடியிருப்புகள் என மொத்தம், 36 கோடியே 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை கட்டிடங்களை அவர் திறந்துவைத்தார்.

தமிழ்நாடு அரசின் சிறைத்துறை, இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து புழல் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் சில்லரை விற்பனை நிலையத்தையும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

ஆண்டு மலர் வெளியீடு

காஞ்சீபுரம் மாவட்டம், மேலக்கோட்டையூர், “உங்கள் சொந்த இல்லம்” திட்டப் பயனாளிகள் மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பணிபுரியும் காவல்துறை பணியாளர்களின் நலன் கருதி, காஞ்சீபுரம் மாவட்டம், மேலக்கோட்டையூரில் “காவலர் பொதுப்பள்ளி” நிறுவுவதற்காக தமிழ்நாடு அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. அதன் முதற்கட்டமாக கட்டப்படவுள்ள காவலர் பொதுப்பள்ளி கட்டிடத்திற்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

2018-ம் ஆண்டில் தமிழ்நாடு காவல்துறை கையாண்ட வழக்குகள் மற்றும் சிறப்பு நிகழ்வுகள் குறித்த செய்திகளை தொகுத்து புதிதாக தயாரிக்கப்பட்ட “ஆண்டு மலர் 2018” என்ற புத்தகத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி மற்றும் காவல்துறை தலைமை இயக்குனர் டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.