மாநில செய்திகள்

கோவையில் ஐ.எஸ். ஆதரவாளர்கள் 3 பேரின் வீடுகளில் போலீசார் சோதனை செல்போன்கள், சிம்கார்டுகள் பறிமுதல் + "||" + Police checked in 3 of the IS supporters

கோவையில் ஐ.எஸ். ஆதரவாளர்கள் 3 பேரின் வீடுகளில் போலீசார் சோதனை செல்போன்கள், சிம்கார்டுகள் பறிமுதல்

கோவையில் ஐ.எஸ். ஆதரவாளர்கள் 3 பேரின் வீடுகளில் போலீசார் சோதனை செல்போன்கள், சிம்கார்டுகள் பறிமுதல்
கோவையில் ஐ.எஸ். ஆதரவாளர்கள் என்று சந்தேகப்படும் 3 பேரின் வீடுகளில் மாநகர போலீசார் நேற்று சோதனை நடத்தினார்கள்.
கோவை, 

கோவையில் ஐ.எஸ். ஆதரவாளர்கள் என்று சந்தேகப்படும் 3 பேரின் வீடுகளில் மாநகர போலீசார் நேற்று சோதனை நடத்தினார்கள். இதில் செல்போன்கள், சிம்கார்டுகள் உள்பட மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இலங்கை குண்டுவெடிப்பு

இலங்கை தலைநகர் கொழும்பில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையன்று தேவாலயம், நட்சத்திர ஓட்டல்களில் சக்திவாய்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதில் 250-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். 500-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

இலங்கை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஜஹரான் ஹசிமினுடன் சமூக வலைத்தளங்கள் மூலம் கோவையை சேர்ந்த சிலர் தொடர்பு கொண்டிருந்ததை தேசிய புலனாய்வு அதிகாரிகள்(என்.ஐ.ஏ.) கண்டுபிடித்தனர்.

என்.ஐ.ஏ. அதிகாரிகள்

அதன்பேரில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று முன்தினம் கோவை வந்து 7 இடங்களில் சோதனை நடத்தினார்கள். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கோவையில் நேற்று ஐ.எஸ். ஆதரவாளர்கள் 3 பேர் வீடுகளில் கோவை மாநகர போலீசார் சோதனை நடத்தினார்கள்.

கோவையை சேர்ந்த 3 பேர் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு கொண்டுள்ளனர் என்ற ரகசிய தகவல் கோவை மாநகர நுண்ணறிவு போலீசாருக்கும், சிறப்பு நுண்ணறிவு போலீசாருக்கும் கிடைத்தன.

3 பேர் வீடுகளில் சோதனை

அதன்பேரில் கோவை தெற்கு உக்கடம் அன்புநகரை சேர்ந்த ஷாஜகான் (வயது 25), கோவை வின்சென்ட் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் முகமது உசேன் (25), கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியை சேர்ந்த ஷேக் சபியுல்லா(36) ஆகிய 3 பேரின் வீடுகளில் நேற்று காலை 5.30 மணி முதல் மாநகர போலீசார் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினார்கள்.

இவர்களில் ஷாஜகானும், ஷேக் சபியுல்லா ஆகிய 2 பேரும் மருத்துவ பிரதிநிதிகளாக பணியாற்றி வருகிறார்கள். சோதனை நடந்த ஒவ்வொரு இடத்திலும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர்.

செல்போன்கள், சிம்கார்டுகள் பறிமுதல்

நேற்று காலை முதல் மாலை வரை 3 இடங்களில் நடந்த இந்த சோதனையில் ஏராளமான செல்போன்கள், சிம் கார்டுகள், கணினி ஹார்டு டிஸ்க்குகள், பென் டிரைவ், மெமரி கார்டுகள் போன்ற மின்னணு சாதனங்களும், வங்கி கணக்கு ஆவணங்கள், தடை செய்யப்பட்ட அமைப்புகளை பற்றிய கையேடுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தடை செய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் சமூக வலைத்தளங்கள் மூலம் இவர்கள் 3 பேரும் தொடர்பில் இருந்துள்ளனர். மேலும் ஐ.எஸ். அமைப்பின் கொள்கைகள், தீவிரவாத செயல்களை இளைஞர்களிடம் சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பி வந்துள்ளனர்.

இவர்கள் ஐ.எஸ். அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட்டதற்கும் ஆதாரங்கள் உள்ளன. இவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 21-ந் தேதி இலங்கையில் நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜஹரான் ஹசிமினின் ஆதரவாளர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமா?

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களை நடத்திய ஜஹரான் ஹசிமினின் செயல்களை புகழ்ந்தும், பாராட்டியும் சமூக வலைத்தளங்களில் இவர்கள் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

இவர்கள் ஐ.எஸ். அமைப்பிற்கு அடித்தளம் அமைத்து அந்த அமைப்பின் சார்பில் கோவையில் தீவிரவாத தாக்குதல் நடத்தவும் சதி திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து இவர்கள் 3 பேர் மீதும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டப்பிரிவு (உபா) 18, 38, 39-ன் கீழ் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.