மாநில செய்திகள்

3 மாவட்ட கலெக்டர்களுக்கு பசுமை விருது எடப்பாடி பழனிசாமி வழங்கினார் + "||" + Green Award for 3 District Collectors

3 மாவட்ட கலெக்டர்களுக்கு பசுமை விருது எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

3 மாவட்ட கலெக்டர்களுக்கு பசுமை விருது எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட 3 மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பசுமை விருதுகளை வழங்கினார்.
சென்னை, 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2014-15-ம் ஆண்டு சுற்றுச்சூழல் துறையின் மானிய கோரிக்கையில் திருவள்ளூரில் இயங்கும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட பொறியாளர் அலுவலகம் மற்றும் ஆய்வகத்திற்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, திருவள்ளூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம் மற்றும் ஆய்வகக் கட்டிடத்தை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 13-ந் தேதி (நேற்று) காணொலி காட்சி மூலமாக திறந்துவைத்தார்.

கலெக்டர்களுக்கு விருது

மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றும் மாவட்ட கலெக்டர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடனும், மாசு தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்கும் தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை பாராட்டும் வகையிலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஆண்டுதோறும் மூன்று கலெக்டர்கள், மூன்று தொழில் நிறுவனங்கள் மற்றும் மூன்று கல்வி நிறுவனங்களை தேர்வு செய்து பசுமை விருதுகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில், மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றியதற்காக 2018-ம் ஆண்டுக்கான பசுமை விருதுகளை நீலகிரி மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யாவுக்கும், முன்னாள் மதுரை மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவராவுக்கும், முன்னாள் திருநெல்வேலி கலெக்டர் சந்தீப் நந்தூரிக்கும் இந்த விருதுகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

மாசு தடுத்த நிறுவனங்கள்

மேலும், மாசு தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்கிய தொழில் நிறுவனங்களுக்கான 2018-ம் ஆண்டிற்கான பசுமை விருதுகளை அதானி மரைன் இன்பிராஸ்டரக்சர் டெவலப்பர் பிரைவேட் லிமிடெட், ஜெயவிஷ்ணு டெக்ஸ் பிராசசர்ஸ் பிரைவேட் லிமிடெட், தி ராம்கோ சிமெண்ட்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கும், சுற்றுச்சூழல் மேம்பாட்டில் சிறந்து விளங்கிய கல்வி நிறுவனங்களுக்கான 2018-ம் ஆண்டிற்கான பசுமை விருதுகளை காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மெப்கோ ஸ்லங்க் பொறியியல் கல்லூரி மற்றும் ராம்கோ வித்யாலயா ஆகிய கல்வி நிறுவனங்களுக்கும் வழங்கினார்.

நலச் சங்கங்கள்

மக்கும் கழிவிலிருந்து உரம் அல்லது மீத்தேன் எரிவாயு தயாரித்தல், மக்காத கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு அனுப்புதல், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு வசதி ஏற்படுத்துதல், மரம் நடுதல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துதல் ஆகியவற்றில் சிறப்பாக செயலாற்றியதற்காக 2018-ம் ஆண்டிற்கான பசுமை விருதுகளை தி சென்ட்ரல் பார்க் சவுத், சபரி டெரஸ் அபார்ட்மெண்ட் ஓனர்ஸ் அசோசியேஷன், சீபராஸ் பொலிவார்ட், ரமணீயம் ஈடன், டக்ஸ்ரா அசோசியேஷன் ஆகிய அங்கீகரிக்கப்பட்ட குடியிருப்போர் நலச் சங்கங்களுக்கும் அவர் விருதுகளை வழங்கினார்.

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களின் தடையாணையை சிறப்பாக செயல்படுத்த உறுதுணையாக இருந்த மண்டல ஒருங்கிணைப்பாளர்களான உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையர் பெ.அமுதா, திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஷல்பா பிரபாகர் சதீஷ் ஆகியோருக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு பசுமை விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.