கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீசின் அதிரடிக்கு ஆப்பு வைத்து இங்கிலாந்து அணி இமாலய வெற்றி - ஜோ ரூட் சதம் அடித்தார் + "||" + World Cup cricket England team won by 8 wickets

வெஸ்ட் இண்டீசின் அதிரடிக்கு ஆப்பு வைத்து இங்கிலாந்து அணி இமாலய வெற்றி - ஜோ ரூட் சதம் அடித்தார்

வெஸ்ட் இண்டீசின் அதிரடிக்கு ஆப்பு வைத்து இங்கிலாந்து அணி இமாலய வெற்றி - ஜோ ரூட் சதம் அடித்தார்
உலக கோப்பை கிரிக்கெட்டில், அதிரடி வீரர்களை உள்ளடக்கிய வெஸ்ட் இண்டீசுக்கு ஆப்பு வைத்து இங்கிலாந்து அணி இமாலய வெற்றியை ருசித்தது. ஜோ ரூட் சதம் விளாசினார்.
சவுதம்டன்,

10 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று சவுதம்டனில் நடந்த 19-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீசை எதிர்கொண்டது. மழை பாதிப்பின்றி தொடங்கிய இந்த ஆட்டத்தில் ‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் மோர்கன் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.


இதையடுத்து இவின் லீவிசும், ‘சிக்சர் மன்னன்’ கிறிஸ் கெய்லும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். கிறிஸ் வோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோரின் புயல்வேக பந்து வீச்சில் அவர்கள் தடுமாறினர். இவின் லீவிஸ் (2 ரன்) கிறிஸ் வோக்சின் யார்க்கரில் கிளன் போல்டு ஆனார். 15 ரன்னில் கேட்ச் கண்டத்தில் இருந்த தப்பி சிறிது நேரம் தாக்குப்பிடித்த கிறிஸ் கெய்ல் 36 ரன்களில் (41 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினார். விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப் (11 ரன்) வந்த வேகத்தில் நடையை கட்டினார்.

55 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தவித்த வெஸ்ட் இண்டீஸ் அணியை ஹெட்மயரும், நிகோலஸ் பூரனும் இணைந்து காப்பாற்றினர். வீழ்ச்சியின் பிடியில் இருந்து அணியை படிப்படியாக மீட்டெடுத்த இவர்கள் ஆடிய விதத்தை பார்த்த போது எப்படியும் அந்த அணி 270-280 ரன்களை எடுக்கலாம் என்று கணிக்கப்பட்டது.

ஆனால் இந்த கூட்டணி உடைந்ததும் ஆட்டத்தின் போக்கு தலைகீழானது. ஸ்கோர் 144 ரன்களாக (29.5 ஓவர்) உயர்ந்த போது ஹெட்மயர் 39 ரன்களில் (48 பந்து, 4 பவுண்டரி) பகுதி நேர பவுலர் ஜோ ரூட்டின் பந்து வீச்சில் அவரிடமே பிடிபட்டார். அடுத்து வந்த அதிரடி சூரர்கள் கேப்டன் ஜாசன் ஹோல்டர் (9 ரன்), ஆந்த்ரே ரஸ்செல் (21 ரன்), பிராத்வெய்ட் (14 ரன்) ஆகியோரும் இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பணிந்தனர்.

வலுவான ஸ்கோரை எட்ட வேண்டும் என்ற நினைப்பில் பெரும்பாலான வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அவசரகதியில் ஆடினர். அதுவே அவர்களுக்கு கடைசியில் பின்னடைவாகிப் போனது. அதிகபட்சமாக நிகோலஸ் பூரன் 63 ரன்கள் (78 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தார்.

50 ஓவர்களை கூட முழுமையாக ஆடாத வெஸ்ட் இண்டீஸ் அணி 44.4 ஓவர்களில் 212 ரன்களுக்கு முடங்கியது. அந்த அணி கடைசி 68 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை பறிகொடுத்தது கவனிக்கத்தக்கது. இங்கிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜோப்ரா ஆர்ச்சர், மார்க் வுட் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் 213 ரன்கள் இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி ஆடியது. ஜாசன் ராய் காயமடைந்திருப்பதால் ஜானி பேர்ஸ்டோவுடன், ஜோ ரூட் தொடக்க ஆட்டக்காரராக இறக்கப்பட்டார். நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் அவ்வப்போது ஷாட்பிட்ச் தாக்குதலை தொடுத்து மிரட்டிப்பார்த்தனர். ஆந்த்ரே ரஸ்செல் வீசிய ஒரு பவுன்சர் பந்து பேர்ஸ்டோவின் ஹெல்மெட்டை பதம் பார்த்தது. இதனால் ஹெல்மெட்டை மாற்ற வேண்டியதானது.

ஆனாலும் வெஸ்ட் இண்டீசின் பந்து வீச்சை திறம்பட எதிர்கொண்ட இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 95 ரன்கள் எடுத்து வலுவான அஸ்திவாரம் அமைத்து தந்தது. பேர்ஸ்டோ 45 ரன்களில் (46 பந்து, 7 பவுண்டரி) கேட்ச் ஆனார். இதன் பின்னர் ஆல்-ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் 2-வது விக்கெட்டுக்கு வந்தார். அவரும் நிலைத்து நின்று ஆட இங்கிலாந்தின் வெற்றிப்பயணம் சுலபமானது. அவர் தனது பங்குக்கு 40 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் அபாரமாக ஆடிய ஜோ ரூட் தனது 16-வது சதத்தை பூர்த்தி செய்தார். இந்த உலக கோப்பையில் ஜோ ரூட்டின் 2-வது சதம் இதுவாகும். ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிராக 107 ரன்கள் எடுத்திருந்தார்.

முடிவில் இங்கிலாந்து அணி 33.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 213 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பெற்றது. ஜோ ரூட் 100 ரன்களுடனும் (94 பந்து, 11 பவுண்டரி), பென் ஸ்டோக்ஸ் 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ஆல்-ரவுண்டராக ஜொலித்த ஜோ ரூட் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

4-வது ஆட்டத்தில் ஆடிய இங்கிலாந்து அணிக்கு இது 3-வது வெற்றியாகும். வெஸ்ட் இண்டீசுக்கு 2-வது தோல்வியாகும்.

கெய்ல் சாதனை

வெஸ்ட் இண்டீஸ் வீரர் 39 வயதான கிறிஸ் கெய்ல் இந்த ஆட்டத்தில் 31 ரன்கள் எடுத்த போது, சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையை இலங்கை முன்னாள் வீரர் சங்கக்கராவிடம் இருந்து தட்டிப்பறித்தார். இங்கிலாந்துக்கு எதிராக கெய்ல் இதுவரை 34 இன்னிங்சில் 1,632 ரன்கள் சேர்த்துள்ளார். அடுத்த இடத்தில் உள்ள சங்கக்கரா 1,625 ரன்கள் (41 இன்னிங்ஸ்) எடுத்திருக்கிறார்.