பலவீனமான நிலையில் வாயு புயல் குஜராத்தில் கரையை கடந்ததால் ஒருசில இடங்களில் மழை பெய்தது.
அரபிக்கடலில் உருவான வாயு புயல் 13–ந் தேதி குஜராத் மாநிலத்தில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டது.
அதனால், முன்னெச்சரிக்கையாக, லட்சக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். ஆனால் வாயு புயலின் திசை மாறியது. கடல்பகுதியிலே நீண்ட நாளாக வாயு புயல் நின்றது. வாயு புயல் பலவீனம் அடைந்து, குறைந்த காற்றழுத்த பகுதியாக மாறி இன்று காலை கட்ச் கடலோரத்தில் வலுவிழந்த நிலையில் கரையை கடந்தது. தகோத், காந்திநகர், ராஜ்கோட், ஜாம்நகர், சபர்கந்தா மாவட்டங்களின் சில பகுதிகளில் மழை பெய்தது. கட்ச், சவுராஷ்டிரா மற்றும் வடக்கு குஜராத் பிராந்தியங்களில் நாளை வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. துறைமுகங்களுக்கான எச்சரிக்கை தளர்த்தப்பட்டது. ஆனால், மீனவர்களுக்கான எச்சரிக்கை நீடிக்கிறது.