தேசிய செய்திகள்

மூளை காய்ச்சலுக்கு குழந்தைகள் பலி: மத்திய, மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் + "||" + NHRC notice to Centre, states over deplorable condition of public health infra in country

மூளை காய்ச்சலுக்கு குழந்தைகள் பலி: மத்திய, மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

மூளை காய்ச்சலுக்கு குழந்தைகள் பலி: மத்திய, மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
மூளை காய்ச்சலுக்கு குழந்தைகள் பலியான விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பீகாரை கடந்த ஒரு மாதமாக மூளைக்காய்ச்சல் கடுமையாகத் தாக்கி  வருகிறது.

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் கண்டறியப்பட்டது. பின்னர் பாதிப்புகள் அறியப்பட்ட குழந்தைகள் முசாபர்பூரில் உள்ள அரசு ஸ்ரீகிருஷ்ணா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. முசாபர்பூரில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 66 குழந்தைகள், மூளைக்காய்ச்சலால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக முசாபர்பூரில் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு விடுப்பு அறிவிக்கப்பட்டது. இந்த காய்ச்சல் அருகில் உள்ள கயா மாவட்டத்துக்கும் பரவியுள்ளது. மூளைக்காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் இருக்கும் 130 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாநிலத்தில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது. மூளைக்காய்ச்சல் விவகாரத்தில் நிதிஷ்குமார் அரசு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. மேலும் சில மாநிலங்களிலும் இந்த பாதிப்பு உள்ளது. இதைத்தொடர்ந்து தேசிய மனித உரிமை ஆணையம் தனது  அதிகாரிகள் குழுவினருடன் டாக்டர்களையும் பீகார், உத்தரபிரதேசம், அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்புகிறது.

இந்த குழுவினர் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று உண்மையை கண்டறிய விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமீபகாலமாக சுகாதாரத்துறையில் உள்ள குறைபாடுகள் மற்றும் மருத்துவ பற்றாக்குறை காரணமாக மதிப்புமிக்க மனித உயிர்கள் பலியாவது வருத்தமளிக்கிறது. இதுபோன்ற இறப்புகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் அனைத்து மாநில தலைமை செயலாளர்கள் விளக்கம் அளிக்கவும் மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.