மாநில செய்திகள்

தமிழகத்தில் முதல்முறையாக சாதனை: ஒரே நாளில் 5,070 மெகாவாட் காற்றாலை மின்சாரம் உற்பத்தி + "||" + Adventure for the first time in Tamil Nadu Wind power generation

தமிழகத்தில் முதல்முறையாக சாதனை: ஒரே நாளில் 5,070 மெகாவாட் காற்றாலை மின்சாரம் உற்பத்தி

தமிழகத்தில் முதல்முறையாக சாதனை: ஒரே நாளில் 5,070 மெகாவாட் காற்றாலை மின்சாரம் உற்பத்தி
தமிழகத்தில் முதல் முறையாக காற்றாலைகள் மூலம் ஒரே நாளில் 5 ஆயிரத்து 70 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து சாதனை படைக்கப்பட்டு உள்ளது.
சென்னை,

தமிழகத்தில் 8 ஆயிரத்து 468.11 மெகாவாட் காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட காற்றாலைகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை காற்று பலமாக வீசும் என்பதால் இந்த காலகட்டத்தில் சராசரியாக 3 ஆயிரத்து 500 முதல் 4 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் புதிய வரலாறு படைக்கும் வகையில் கடந்த சில நாட்களாக காற்றாலை மின்சாரம் உற்பத்தி அதிகளவில் இருந்து வருகிறது. குறிப்பாக கடந்த 17-ந் தேதி 4 ஆயிரத்து 589 மெகாவாட், 18-ந் தேதி 4 ஆயிரத்து 169, 19-ந் தேதி 4 ஆயிரத்து 769, 20-ந் தேதி அதிகபட்சமாக 5 ஆயிரத்து 70 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. முதன் முறையாக அதிகபட்சமாக 5 ஆயிரத்து 70 மெகாவாட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டது. இது சாதனை அளவு ஆகும்.

இதுகுறித்து இந்திய காற்றாலைகள் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கே.கஸ்தூரி ரெங்கையன் கூறியதாவது:-

தமிழகத்தில் கடந்த 10 நாட்களாகவே பருவக்காற்று வீசத்தொடங்கியிருக்கிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக மழையும் பெய்து வருவதால் காற்றின் வேகத்தால் அதிகளவு காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாகவே 4 ஆயிரத்து 500 மெகாவாட்டுக்கு மேல் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

அதில் கடந்த 20-ந் தேதி இதுவரை இல்லாத அளவு காற்றாலை மூலம் ஒரே நாளில் 5 ஆயிரத்து 70 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இதன் மூலம் காற்றாலை வரலாற்று சாதனையை படைத்து உள்ளது. உற்பத்தியாளர்களான எங்களுக்கு பெருமையாக உள்ளது. தமிழகத்தின் தற்போதைய மின்சார தேவையில் 3-ல் ஒரு பங்கு மின்சாரத்தை காற்றாலைகள் உற்பத்தி செய்து வருகிறது. இந்த ஆண்டு வரும் அக்டோபர் மாதம் வரை காற்று நன்றாக வீசும் என்று வானிலை தகவல் கூறுகிறது. நாங்களும் அதைத்தான் எதிர்பார்க்கிறோம்.

அகில இந்திய அளவில் அனைத்து வகை மின்சார உற்பத்தி கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.5 என்பது ரூ.4 ஆக குறைந்துவிட்டது.

இதற்கு காற்றாலை உள்ளிட்ட அனைத்து வகை மின்உற்பத்தியும் அதிகரித்திருப்பது தான் காரணமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து தமிழக எரிசக்தி துறை அதிகாரிகள் கூறியதாவது:-
தேசிய அளவில் காற்றாலை மின்சார உற்பத்தியில் தமிழகம் முதல் இடத்தில் இருந்து வருகிறது. நெல்லை, கன்னியாகுமரி, பல்லடம், உடுமலை, கயத்தாறு மற்றும் தேனி உள்ளிட்ட பகுதிகளில் 8 ஆயிரத்து 468.11 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன்கொண்ட 11,800 காற்றாலைகள் இயங்கி வருகின்றன.

தற்போது பருவக்காற்று வீசத்தொடங்கி இருப்பதால் 25 முதல் 30 சதவீதம் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல் பகலில் வெப்பத்தின் அளவு அதிகமாக இருப்பதால் சூரியசக்தி மூலம் சராசரியாக 2 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி மூலம் சராசரியாக 35 சதவீதம் மின்சாரம் பெறப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பருவக்காற்று வீசி வருவதால் காற்றலை மின்உற்பத்தி தொடங்கி உள்ளது. இதனால் அனைத்து பகுதிகளுக்கும் தடையற்ற மின்சாரம் வினியோகம் செய்யவும் மின்சார வாரியம் திட்டமிட்டு உள்ளது. அனல் மின் உற்பத்தியை சற்று குறைத்துக்கொண்டு, காற்றாலை மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக காற்றாலைகள் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை அதிகளவு மின்சாரம் உற்பத்தி செய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அதிகமான நாட்கள் உற்பத்தி செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் உபரி மின்சாரத்தை வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.