மாநில செய்திகள்

அ.தி.மு.க. அரசு பெரும்பான்மையாக உள்ளதை மு.க.ஸ்டாலின் உணர்ந்து இருக்கிறார்அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி + "||" + Minister Jayakumar Interview

அ.தி.மு.க. அரசு பெரும்பான்மையாக உள்ளதை மு.க.ஸ்டாலின் உணர்ந்து இருக்கிறார்அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

அ.தி.மு.க. அரசு பெரும்பான்மையாக உள்ளதை மு.க.ஸ்டாலின் உணர்ந்து இருக்கிறார்அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
அ.தி.மு.க. அரசு பெரும்பான்மையாக உள்ளதை மு.க.ஸ்டாலின் உணர்ந்து இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை,

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

கூட்டத்தில், சட்டமன்றத்தில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது நடந்து கொள்ள வேண்டிய முறை குறித்து, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எம்.எல்.ஏ.க் களுக்கு அறிவுரை வழங்கினர்.

தவறாமல் பங்கேற்க வேண்டும்

குறிப்பாக, சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் அனைத்து நாட்களும் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும், ஒவ்வொரு நாளும் கூட்டம் முடியும் வரை அனைவரும் சட்டமன்றத்தில் அமர்ந்து இருக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அ.தி.மு.க.வில் இணைந்தனர்

கூட்டம் முடிந்ததும், அ.ம.மு.க. கட்சியை சேர்ந்த வடசென்னை மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் எஸ்.ஆர்.அன்பு, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் எம்.கே.எஸ்.கலையரசன் உள்பட அ.ம.மு.க. நிர்வாகிகள் பலர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் தங்களை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வடசென்னை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், அண்மையில் அ.தி.மு.க.வில் இணைந்த ஏ.சசிரேகா ஆகியோர் செய்திருந்தனர்.

எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முடிந்து வெளியே வந்த அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மு.க.ஸ்டாலினுக்கு நன்றி

முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வகுத்து தந்த வழிமுறைப்படி சட்டமன்றத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவுறுத்தினர்.

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வலியுறுத்த மாட்டோம் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதன் மூலம் அ.தி.மு.க. அரசு பெரும்பான்மை உள்ள அரசு என்பதை அவர் உணர்ந்து இருக்கிறார். அவர் உணர்ந்ததற்கு நன்றி.

குடிமராமத்து பணி

தமிழகத்தில் குடிமராமத்து பணிக்காக ஏற்கனவே ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு பணிகள் நடைபெற்றுள்ளன. தற்போதைய வறட்சிக்காக ரூ.1,500 கோடிக்கும் மேல் தமிழகம் முழுவதும் ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழக அரசு மேற்கொண்டுள்ள குடிமராமத்து பணியின் காரணமாக கனமழை காலத்தில் அதிக அளவில் மழைநீர் தேக்கப்பட்டு, நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும். என்ன நோக்கத்துக்காக குடிமராமத்து பணி மேற்கொள்ளப்பட்டதோ அந்த நோக்கம் நிச்சயம் நிறைவேறும்.

டி.டி.வி.தினகரனுக்கு முக்கியத்துவம்

டி.டி.வி.தினகரனுக்கு ஊடகங்கள்தான் முக்கியத்துவம் அளித்தன. ஒன்றும் இல்லாத அவரை உயர்த்தி பிடிக்கிறீர்கள். அது ஒரு கட்சியே இல்லை. அதை பொருட்படுத்த வேண்டிய தேவை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.