தேசிய செய்திகள்

மக்களவையில் மசோதா நிறைவேறியது : அரசின் சலுகைகள் பெற ஆதார் கட்டாயம் இல்லை - மத்திய அரசு உறுதி + "||" + Aadhaar is not compulsory to receive state concessions - Central Government

மக்களவையில் மசோதா நிறைவேறியது : அரசின் சலுகைகள் பெற ஆதார் கட்டாயம் இல்லை - மத்திய அரசு உறுதி

மக்களவையில் மசோதா நிறைவேறியது : அரசின் சலுகைகள் பெற ஆதார் கட்டாயம் இல்லை - மத்திய அரசு உறுதி
அரசின் சலுகைகள் பெற ஆதார் கட்டாயம் இல்லை என மத்திய அரசு உறுதியளித்து உள்ளது. இது தொடர்பாக மக்களவையில் நேற்று ஆதார் மசோதா நிறைவேறியது.

புதுடெல்லி,

ஆதார் எண்ணை ஒருவரின் அடையாளமாக பயன்படுத்த வகை செய்யும் ‘ஆதார் மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா’வை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். இந்த மசோதா மீது நேற்று விவாதம் நடந்தது.

இந்த விவாதத்துக்கு பதிலளித்து பேசும்போது ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:–

ஆதார் அட்டையை கடுமையாக அமல்படுத்தியதால் அரசின் கஜானாவில் உள்ள பணம் சேமிக்கப்பட்டு இருப்பதுடன், பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளிலும் அரசின் பணம் கணிசமாக பாதுகாக்கப்பட்டு உள்ளது.

அந்தவகையில் ஆதார் மூலம் 4.23 கோடி போலி கியாஸ் இணைப்புகள் மற்றும் 2.98 போலி ரே‌ஷன் கார்டுகள் நீக்கப்பட்டன. ரூ.7.48 லட்சம் கோடி நேரடியாக பயனாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு இருக்கிறது.

ஆதார் விதிமுறைகள் மிகுந்த பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் உருவாக்கப்பட்டு உள்ளது. சட்ட மந்திரியான நான் கூட தனிநபர் ஒருவரின் ஆதாரில் உள்ள தகவல்களை கேட்டால், என்மீதும் நடவடிக்கை எடுக்க முடியும்.

ஆதாரின் பயன்பாடு முக்கியமானதுதான், அதேநேரம் அது தன்னிச்சையானதும் கூட. ஆதார் இல்லாததாலோ அல்லது அதை வழங்க முடியாததாலோ யாருக்கும் அரசின் நலத்திட்ட பலன்கள் மற்றும் சலுகைகள் நிறுத்தப்படமாட்டாது. அரசின் சலுகைகள் பெற ஆதார் கட்டாயம் இல்லை. இதுகுறித்து ஒன்றுக்கு மேற்பட்ட முறை தெளிவுபடுத்தி இருக்கிறோம். ஆதாரின் அமைப்பு இதுகுறித்து தெளிவாக குறிப்பிட்டு உள்ளது.

ஆதார் எண்ணை ஒருவரின் அடையாளமாக பயன்படுத்த இந்த மசோதா வழிவகை செய்கிறது. இந்த மசோதா சாதி, மதம் என எந்த பாகுபாடும் காட்டாது. ஆதாரில் உள்ள தனிநபரின் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்படும். தகவல் இறையாண்மையை பாதுகாக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது.

இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

இதைத்தொடர்ந்து குரல் ஓட்டு மூலம் இந்த மசோதா நிறைவேறியது. இந்த மசோதாவில் சில திருத்தங்களை சேர்க்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிராகரித்தது.

முன்னதாக இந்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் உறுப்பினர் மணிஷ் திவாரி, இந்த மசோதாவின் சில அம்சங்கள் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும், குடிமக்களின் உரிமைகளை பறிப்பதாகவும் கூறினார்.

இதைப்போல மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசும்போது, மசோதா தொடர்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். மசோதாவை கடுமையாக எதிர்த்த அவர், ஆதார் திட்டம் காங்கிரஸ் அரசால் கொண்டு வந்தது எனவும் கூறினார்.

அதேநேரம் இந்த மசோதாவை ஆதரித்து பேசிய பிஜூ ஜனதாதள உறுப்பினர் பினாகி மிஸ்ரா, ஆதாரில் இணைக்கப்பட்டு உள்ள தனிநபர் விவரங்களை பாதுகாக்க சட்டம் கொண்டு வருமாறு கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே இந்திய மருத்துவ கவுன்சில் (திருத்தம்) மசோதா–2019–ஐ மாநிலங்களைவில் சுகாதாரத்துறை மந்திரி ஹர்சவர்தன் தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு கட்சி பேதமின்றி அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.