மாநில செய்திகள்

110-ன் கீழ் முதல்-அமைச்சர் அறிவிப்புகளை வெளியிடலாமா? சபாநாயகருடன் மு.க.ஸ்டாலின் கடும் வாக்குவாதம் + "||" + Can the chief-Minister issue notification under 110?

110-ன் கீழ் முதல்-அமைச்சர் அறிவிப்புகளை வெளியிடலாமா? சபாநாயகருடன் மு.க.ஸ்டாலின் கடும் வாக்குவாதம்

110-ன் கீழ் முதல்-அமைச்சர் அறிவிப்புகளை வெளியிடலாமா? சபாநாயகருடன் மு.க.ஸ்டாலின் கடும் வாக்குவாதம்
விதி எண் 110-ன் கீழ் முதல்-அமைச்சர் புதிய அறிவிப்புகளை வெளியிடலாமா? என்பது தொடர்பாக சபாநாயகருடன், மு.க.ஸ்டாலின், துரைமுருகன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னை,

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விதி எண் 110-ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு, பேசினார். அவர் பேசி முடித்ததும், தி.மு.க. உறுப்பினர் ஆஸ்டின் எழுந்து விதியின் 110-ன் கீழ் முதல்-அமைச்சர் அறிவிப்புகளை வெளியிடுவது குறித்து ‘பாயிண்ட் ஆப் ஆர்டர்’ கொண்டு வந்தார். இந்த நேரத்தில் தி.மு.க. உறுப்பினர் ஆஸ்டின் தெரிவித்த கருத்துக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் எழுந்து பேசினார்.

துரைமுருகன்:-விதி எண் 110-ன் கீழ் வெளியிடப்படும் அறிவிப்புகளுக்கு விவாதம் செய்யக்கூடாது. ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் பாயிண்ட் ஆப் ஆர்டர் கேட்டால் என்ன தவறு?. இந்த அவையில், ஒரு பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பவும், அதற்கு விளக்கம் கேட்கவும் உறுப்பினர்களுக்கு உரிமை உண்டு.

சபாநாயகர் தனபால்:- விதி எண் 110-ன் கீழ் முதல்-அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு பேசும்போது, யாரும் அதில் குறுக்கிட கூடாது, விமர்சிக்கக் கூடாது என்று விதி உள்ளது. அதுபற்றி யாரும் விவாதிக்க கூடாது. எனவே உறுப்பினர் ஆஸ்டின் குறிப்பிட்டதை அவைக் குறிப்பில் இருந்து நீக்கி இருக்கிறேன்.

பல்வேறு அறிவிப்புகளை வெளியிடலாமா?

துரைமுருகன்:- முதல்-அமைச்சர் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பதை அமைச்சர்கள் பாராட்டி பேசுகிறார்கள். ஆனால் உறுப்பினர் கருத்து சொல்லக்கூடாது என்பதை ஏற்க முடியாது.

சபாநாயகர்:-விதி எண் 110-ன் கீழ் முதல்- அமைச்சர் பேசியதற்கு பாராட்டு தெரிவிக்கலாம். விமர்சிக்க கூடாது.

துரைமுருகன்:-நீங்கள் சொல்வதை மறுக்கவில்லை. பாயிண்ட் ஆப் ஆர்டரை ஏற்பதும், மறுப்பதும் உங்கள் விருப்பம். ஆனால் விதி எண் 110-ல் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது, ஒரு பொருள் பற்றி மட்டும் தான் அறிவிக்க வேண்டும், ஆனால் முதல்-அமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுகிறார். அதை சுட்டிக்காட்டும் வகையில்தான் எங்கள் உறுப்பினர் பாயிண்ட் ஆப் ஆர்டர் கொண்டு வந்தார்.

எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின்:- விதிமுறையை சுட்டிக்காட்டுவதற்காகத்தான் எங்கள் உறுப்பினர் அதை கூறினார். அவருடைய உரிமை மறுக்கப்படக்கூடாது.

உரிமை பாதுகாக்கப்படும்

சபாநாயகர்:-எல்லோருடைய உரிமையும் பாதுகாக்கப்படும். விமர்சிக்கக் கூடாது என்ற எனது உத்தரவை மீறியதால் தான் அவரது பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

துரைமுருகன்:-எனக்கு இருக்கிற உரிமை, இந்த அவை திசை மாறும்போது, அதை சுட்டுக்காட்டுவது தான். அதை தான் உறுப்பினர்கள் பாயிண்ட் ஆப் ஆர்டர் கொண்டு வந்து அதை சுட்டிக்காட்டுகிறார்கள். அந்த உரிமை உறுப்பினர்களுக்கு உண்டு. இதை தாங்கள் (சபாநாயகர்) கவனத்தில் கொள்ள வேண்டும்.

சபாநாயகர்:-இதற்கு மேல் விவாதம் வேண்டாம்.

இவ்வாறு விவாதம் நடந்தது.