மாநில செய்திகள்

சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க ரெயிலில் குடிநீர் வந்தது சுத்திகரிக்கப்பட்டு உடனடியாக வினியோகம் + "||" + Drinking water came on the train

சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க ரெயிலில் குடிநீர் வந்தது சுத்திகரிக்கப்பட்டு உடனடியாக வினியோகம்

சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க ரெயிலில் குடிநீர் வந்தது சுத்திகரிக்கப்பட்டு உடனடியாக வினியோகம்
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு நேற்று ரெயில் மூலம் குடிநீர் வந்து சேர்ந்தது. அந்த நீர் உடனடியாக சுத்திகரித்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.
சென்னை, 

தமிழகம் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு வறட்சியின் கோரப்பிடியில் சிக்கிக்கொண்டுள்ளது.

பெரும்பாலான ஏரி, குளங்கள் வறண்டு போய்விட்டன.

குடிநீர் தட்டுப்பாடு

தலைநகர் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழ வரம் ஆகிய ஏரிகள் தண்ணீர் இன்றி காய்ந்து கிடக்கின்றன.

நிலத்தடி நீரும் அதள பாதாளத்துக்கு சென்று விட்டதால், சென்னைவாசிகள் குடிநீருக்கு படாதபாடு பட்டுக்கொண்டிருக்கின்றனர். வசதியுள்ளவர்கள் கேன் வாட்டர்களை வாங்கி ஓரளவு தண்ணீர் பிரச்சினையை சமாளித்தாலும், நடுத்தர மற்றும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் கடும் கஷ்டத்துக்கு உள்ளானார்கள். லாரி தண்ணீரை எதிர்பார்த்தே காத்திருக்கும் நிலை உருவானது. குறிப்பாக, அடுக்கு மாடி குடியிருப்புவாசிகள் லாரி தண்ணீரை கூடுதல் விலை கொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஜோலார்பேட்டையில் இருந்து குடிநீர்

குடிநீருக்காக ஆங்காங்கே போராட்டம் தலைதூக்கிய நிலையில், எதிர்க்கட்சிகளும் தண்ணீர் பிரச்சினையை கையில் எடுத்து போராடத் தொடங்கியதால், அரசுக்கு பெரும் தலைவலியாக அமைந்தது. இந்த நிலையில், குடிநீர் பிரச்சினையை தீர்க்க அரசு பல்வேறு வழிகளில் நடவடிக்கையை மேற்கொண்டது. விவசாய கிணறுகள், கல்குவாரிகளில் இருந்தும் தண்ணீர் எடுக்கப்பட்டு, சுத்திகரித்து பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.

இதனால், தண்ணீர் பிரச்சினை ஓரளவு குறைந்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு குடிநீர் வினியோகிக்க முடியாத நிலை இருந்து வந்தது. இந்த நிலையில், வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள மேட்டு சக்கரக்குப்பம் நீரேற்று நிலையத்தில் இருந்து காவிரி நீரை சென்னைக்கு ரெயில் மூலம் கொண்டுவர அரசு திட்டம் தீட்டியது. இதற்காக ரூ.66 கோடி நிதியையும் அரசு உடனடியாக ஒதுக்கியது.

ஏற்பாடுகள் தீவிரம்

அதனைத் தொடர்ந்து, ஜோலார்ப்பேட்டை மேட்டு சக்கரக்குப்பம் நீரேற்று நிலையத்தில் இருந்து ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்துக்கு தண்ணீரை கொண்டு வருவதற்காக குழாய் அமைக் கும் பணிகள் நடைபெற்றது. 10 நாட்களாக இரவு, பகலாக நடைபெற்று வந்த இந்த பணியினை சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கண் காணித்து வந்தனர்.

அதே நேரத்தில், சென்னைக்கு ரெயில் மூலம் கொண்டுவரப்படும் நீரை வில்லிவாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து குழாய் வழியாக எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இதற்காக வில்லிவாக்கம் ரெயில் நிலையத்தில் 600 மீட்டர் நீளத்துக்கு குழாய்கள் அமைக்கப்பட்டன.

50 டேங்கர்கள்

இதற்கிடையே குடிநீர் கொண்டுவர டேங்கர்களும் தயார் செய்யப்பட்டன. மேற்கு மத்திய ரெயில்வே பகுதியான வதோதராவில் இருந்து எண்ணெய் ஏற்றி செல்லும் 70 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 50 டேங்கர்கள் கடந்த மாதம் (ஜூன்) 25-ந் தேதி ராஜஸ்தானில் உள்ள கோட்டா ரெயில் பெட்டிகள் பராமரிப்பு நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் அந்த டேங்கர்கள் 8 மணி நேரம் நீராவியால் சுத்திகரிக்கப்பட்டது. அதில் இருந்த எண்ணெய் திட்டுகளையும் ஊழியர்கள் அகற்றினார்கள்.

அதன்பின்னர், சுத்தம் செய்யப்பட்ட டேங்கர்களில் தண்ணீர் நிரப்பப்பட்டு, அந்த தண்ணீர் பரிசோதிக்கப்பட்டது. தண்ணீருக்கு பாதிப்பு இல்லை என்று தெரிந்த பிறகே, டேங்கர்களுக்கு வர்ணம் பூசப்பட்டு, இம்மாதம் 6-ந் தேதி தெற்கு ரெயில்வே வசம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின்னர், 50 டேங்கர்களும் தண்ணீர் நிரப்புவதற்காக ஜோலார்பேட்டை கொண்டுவரப்பட்டது.

உடனடியாக வினியோகம்

அங்கு ஏற்கனவே தண்ணீர் நிரப்பும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்ததால், உடனடியாக டேங்கர்களில் குழாய்கள் மூலம் தண்ணீர் ஏற்றப்பட்டன. ஒவ்வொரு டேங்கரும் 70 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டதாக இருந்தாலும், அதில் 50 ஆயிரம் லிட்டர்களே ஏற்றப்பட்டன. 50 டேங்கர்களிலும் சேர்த்து மொத்தம் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் நிரப்பப்பட்டது. இந்த நிலையில், ஜோலார்பேட்டையில் இருந்து நேற்று காலை 7.20 மணிக்கு இந்த ரெயில் புறப்பட்டது. 50 டேங்கர்களையும் இருபுறம் இயக்கும் வகையில் முன்னால் ஒரு ரெயில் என்ஜினும், பின்னால் மற்றொரு ரெயில் என்ஜினும் இணைக்கப்பட்டிருந்தது.

இந்த ரெயில் காலை 11.35 மணிக்கு சென்னை வில்லிவாக்கம் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. குடிநீருடன் வந்த ரெயிலை தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், க.பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் வரவேற்றனர். டேங்கர்களில் உள்ள தண்ணீர் உடனடியாக குழாய்கள் மூலம் கீழ்ப்பாக்கத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. உடனடியாக, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வினியோகிக்கப்பட்டது.

மேலும் ஒரு ரெயில் வருகிறது

மேற்கொண்டும் சென்னைக்கு ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் மூலம் குடிநீர் கொண்டுவரப்பட இருக்கிறது. இதற்காக மேலும், 50 டேங்கர்கள் பொருத்தப்பட்ட ரெயில் ராஜஸ்தானில் இருந்து விரைவில் சென்னைக்கு கொண்டுவரப்பட இருக்கிறது. இந்த தகவலை தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னைக்கு ரெயில் மூலம் குடிநீர் கொண்டுவரப்பட்ட நிலையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

6 மாதத்துக்கு வழங்கப்படும்

ஜோலார்பேட்டையில் இருந்து 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 50 டேங்கர்கள் மூலமாக தினசரி 4 நடை என மொத்தம் 10 மில்லியன் லிட்டர் குடிநீர் சென்னை மாநகருக்கு வழங்கப்படும். இதன் முதல் நடையாக 2.5 மில்லியன் லிட்டர் தண்ணீர் ஜோலார்பேட்டையில் இருந்து வில்லிவாக்கம் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வில்லிவாக்கத்தில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் அனுப்பப்பட்டு, புழல் ஏரியில் இருந்து வரும் தண்ணீர் குழாயில் இணைக்கப்படும். பின்னர் இந்த தண்ணீர் கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும். அடுத்த 6 மாத காலத்திற்கு இவ்வாறு ரெயில் மூலம் குடிநீர் கொண்டுவரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வீணான குடிநீர்

முன்னதாக, ஜோலார்பேட்டையில் நேற்று முன்தினம் டேங்கர்களில் தண்ணீர் நிரப்பப்பட்டபோது, டேங்கரின் முழு கொள்ளளவான 70 ஆயிரம் லிட்டர் அளவுக்கும் தண்ணீர் நிரப்பப்பட்டது. ஆனால் ஒரு டேங்கரில் 50 ஆயிரம் லிட்டர் அளவுக்கு தண்ணீர் இருந்தால் மட்டுமே ரெயிலை இயக்க முடியும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர்.

இதனால், ஒவ்வொரு டேங்கரில் இருந்தும் 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்த தண்ணீர் அப்பகுதியில் ஆறுபோல் ஓடியது.

இதற்கு முன்பு 2001-ம் ஆண்டு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, மேட்டூர் மற்றும் ஈரோட்டில் இருந்து இதேபோல் ரெயில் மூலம் குடிநீர் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.