மாநில செய்திகள்

தேசிய பசுமைத்தீர்ப்பாயம் விதித்த ரூ.100 கோடி அபராதத்துக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு + "||" + Court order dismissing case of Tamil Nadu government

தேசிய பசுமைத்தீர்ப்பாயம் விதித்த ரூ.100 கோடி அபராதத்துக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு

தேசிய பசுமைத்தீர்ப்பாயம் விதித்த ரூ.100 கோடி அபராதத்துக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு
தேசிய பசுமைத்தீர்ப்பாயம் விதித்த ரூ.100 கோடி அபராதத்தை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
சென்னை, 

சென்னையில் அடையாறு, பக்கிங்காம் மற்றும் கூவம் ஆகிய நீர்நிலைகளை தமிழக அரசு முறையாக பராமரிக்கவில்லை என்றும், அதனால் தான் 2015-ம் ஆண்டு சென்னை வெள்ளத்தில் மிதந்தது என்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஜவஹர்லால் சண்முகம் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், சென்னையில் உளள நீர்நிலைகளை பராமரிக்காத தமிழக பொதுப்பணித்துறைக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. இந்த தொகையை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் வழங்க வேண்டும். நீர்நிலைகளை முறையாக தூர்வாரி பராமரிப்பது குறித்து 2 மாதங்களுக்கு ஒருமுறை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுடன், தமிழக தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும் என்றும் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

ரத்துசெய்ய வேண்டும்

ரூ.100 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சி.சரவணன் ஆகியோர் விசாரித்தனர். அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘பக்கிங்காம், கூவம், அடையாறு உள்ளிட்ட நீர்நிலைகளை மறுசீரமைப்பு செய்ய 2015-ம் ஆண்டு ரூ.1,616 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அதில் முதற்கட்டமாக ரூ.604 கோடி ஒதுக்கப்பட்டது.

இதுதொடர்பாக தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்த அறிக்கைகள் மற்றும் ஆவணங்கள், எடுத்த நடவடிக்கைகளை தேசிய பசுமை தீர்ப்பாயம் கவனத்தில் கொள்ளாமல் ரூ.100 கோடி அபராதம் விதித்துள்ளது. இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்பதால் இந்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்’ என்று வாதிட்டார்.

சென்னைக்கு வரப்பிரசாதம்

இதற்கு மனுதாரர் ஜவஹர்லால் சண்முகம் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார்.

அவர், “சென்னையை சுற்றிலும் ஓடக்கூடிய பக்கிங்காம் கால்வாய், கூவம் மற்றும் அடையாறு உள்ளிட்ட அனைத்து நதிகளும் கழிவுநீர் சாக்கடையாகத்தான் ஓடிக்கொண்டு இருக்கின்றன. சென்னைக்கு கிடைத்த வரப்பிரசாதமான நீர்நிலைகளை ஆட்சியாளர்கள் முறையாக பராமரித்து தூர்வாராத காரணத்தால் தான் சென்னை மாநகரமே வெள்ளக்காடானது. மீண்டும் அதுபோல ஒரு நிலை வரக்கூடாது. நீர்நிலைகளை முறையாக பராமரிக்காத பொதுப்பணித்துறைக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்தது சரிதான். இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

உகந்தது அல்ல

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நேற்று பிறப்பித்த தீர்ப்பில், ‘தேசிய பசுமை தீர்ப்பாய சட்டம் 2010 பிரிவு 22-ன்படி அதன் உத்தரவுகளை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மட்டுமே வழக்கு தொடர முடியும். எனவே தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் ரூ.100 கோடி அபராதத்தை எதிர்த்து தமிழக அரசு இங்கு தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால் தள்ளுபடி செய்கிறோம்’ என்று கூறியுள்ளனர்.