மாநில செய்திகள்

தூத்துக்குடியில் ரூ.634 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை தொழில்துறைக்கு புதிய சலுகைகள்சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு + "||" + New concessions to industry Edappadi Palanisamy Announced in Assembly

தூத்துக்குடியில் ரூ.634 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை தொழில்துறைக்கு புதிய சலுகைகள்சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தூத்துக்குடியில் ரூ.634 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை தொழில்துறைக்கு புதிய சலுகைகள்சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தூத்துக்குடியில் ரூ.634 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்கப்படும் என்பது உள்பட தொழில்துறைக்கு புதிய சலுகைகள் சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
சென்னை, 

தமிழக சட்டசபையில் நேற்று பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தொழில் வளர் தமிழகம்

உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள், தமிழ் சங்கங்கள், தொழில் அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்தி “முதலீட்டு தூதுவர்களை” உருவாக்கி, தமிழ்நாட்டில் முதலீடு செய்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்தம் ஆலோசனைகள் பெறவும், முதலீடுகளை ஈர்க்கவும், “யாதும் ஊரே” என்ற தனி சிறப்பு பிரிவு மற்றும் வலைத்தளம் ரூ.60 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கிடவும், தொழில் துவங்க முன்வரும் முதலீட்டாளர்களை வல்லுநர்களைக் கொண்டு அடையாளம் காணவும், ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா, சீனா, தைவான், பிரான்சு, இஸ்ரேல் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு என தனித்தனியாக சிறப்பு அமைவுகள் அமைக்கப்படும். மேலும், தலைநகர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் புதிய பிரிவு ஒன்று துவங்கப்படும். “தொழில் வளர் தமிழகம்” என்ற பெயரில் புதிய அடையாள முத்திரையுடன், நவீன உத்திகளைப் பயன்படுத்தி கூட்டங்கள், கருத்தரங்குகள், இணையவழி பரப்புரை மற்றும் விளம்பரங்கள், தகவல் பரிமாற்றங்கள் போன்றவை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஆண்டுதோறும் ரூ.10 கோடி செலவில் நடத்தப்படும்.

தூத்துக்குடியில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை

தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப 20 ஏக்கர் அல்லது அதற்கு மேலாக நிலம் அளிக்க விரும்பும் தனியார் நில உரிமையாளர்களுடன் அத்தகைய தொழில் முதலீடு செய்ய விரும்பும் தொழில் முனைவோர்களை இணைக்கும் பாலமாக ரூ.1 கோடி மதிப்பீட்டில் ஒரு வலைத்தளம் உருவாக்கப்படும்.

“தொழில் தோழன்” என்ற தொழில் நிறுவனங்களுக்கான ஒருங்கிணைந்த இணைய அடிப்படையிலான குறைதீர் வழிமுறை ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும். அதிகபட்சமாக 4 வாரங்களுக்குள் அப்புகார் மீது நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காணப்படும். தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, சிப்காட் நிறுவனம் தூத்துக்குடி மாவட்டம், முல்லக்காடு கிராம பகுதியில் ரூ.634 கோடி திட்ட மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் ஆலையை அமைக்கும்.

ரூ.50 கோடியில் தொழிற்கூட கட்டிடங்கள்

ஏற்றுமதிக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி உடனடியாக தொழில் துவங்குவதற்கு ஏதுவாக காஞ்சீபுரம் மாவட்டம் வல்லம் - வடகால் மற்றும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் பூங்காக்களில் அனைத்து வசதிகளுடன் கூடிய தொழிற்கூட கட்டிடங்கள், தலா ரூ.50 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

சிப்காட் தொழில் பூங்காக்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் பணியாளர்களுக்கு, அவ்விடத்திலேயே குடியிருப்பு வசதியினை ஏற்படுத்த நடப்பாண்டில் சிப்காட் வல்லம் - வடகால் மற்றும் ராணிப்பேட்டை தொழில் பூங்காக்களில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

தொழிற் பூங்கா உருவாக்கம்

சிப்காட் சிறுசேரி தகவல் தொழில் நுட்பப் பூங்காவில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் இதர ஏற்றுமதியாளர்கள் பயன்பெறும் வகையில், கருத்தரங்கு கூடங்கள், பயிற்சி மையங்கள் போன்ற வசதிகள் அடங்கிய வணிக வசதிகள் மையம் ஒன்று ரூ.40 கோடி திட்ட மதிப்பீட்டில் 50 ஆயிரம் சதுரடி பரப்பளவில் கட்டப்படும்.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் தொழில் மயமாக்க ஏதுவாக, குறைந்தபட்சம் 100 ஏக்கர் அல்லது அதற்கும் மேலாக நிலம் வைத்துள்ள தனியார் நில உரிமையாளர்களுடன் இணைந்து கூட்டாண்மை முறையில், தொழிற் பூங்காக்களை சிப்காட் நிறுவனம் உருவாக்கும். இவ்வாறு உருவாக்கப்படும் தொழிற் பூங்காக்களுக்கு, சிப்காட் தொழிற்பூங்காக்களுக்கான சலுகைகள் நீட்டித்து வழங்கப்படும்.

வட்டி மானியம் உயர்வு

குறு மற்றும் சிறு நிறுவனங்கள் தங்களது உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், தொழில்களை விரிவுபடுத்தவும், லாபகரமாக தொழில்களை தொடரவும், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் தற்பொழுது வழங்கப்பட்டு வரும் 3 சதவீதம் வட்டி மானியம் 6 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். வட்டி மானியத்தை 6 சதவீதமாக உயர்த்துவதன் மூலம் ஆண்டுதோறும் சுமார் 400 புதிய குறு மற்றும் சிறு நிறுவனங்கள் தொடங்குவதற்கும், சுமார் 1,200 குறு மற்றும் சிறு நிறுவனங்கள் விரிவாக்குவதற்கும், இதன் மூலம் கூடுதலாக சுமார் 10 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் வழிவகுக்கும். இதற்கான கூடுதல் மானியத் தொகை ரூ.33 கோடியை ஆண்டு தோறும் அரசே ஏற்கும்.

கோயம்புத்தூரில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் இடத்தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, அருகில் உள்ள 9 ஏக்கர் நிலத்தில் சுமார் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் கூடுதலாக ஒரு தொழில்நுட்ப வளாகம் ரூ.200 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப்படும்.

வான்வெளி பூங்கா

தமிழ்நாட்டில் வான்வெளி மற்றும் உயர் தொழில்நுட்ப சாதனங்களின் உற்பத்தி வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் வான்வெளி மற்றும் பாதுகாப்புப் பூங்காவில் நிறுவப்பட உள்ள உயர் கணினி மற்றும் பொறியியல் வடிவமைப்பு மையத்தில் புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் முனைவோருக்கான சிறப்பு மையம், ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் சுமார் ரூ.100 கோடி திட்ட மதிப்பீட்டில் நிறுவப்படும்.

தமிழ்நாட்டில் சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், உயர்தர மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை நிறுவி உற்பத்தியை பெருக்க, தகுதியான இயந்திர தளவாடங்களின் மதிப்பில் 25 சதவீத முதலீட்டு மானியமாக தற்போது வழங்கப்பட்டும் வரும் ரூ.30 லட்சம் என்ற மானிய உச்சவரம்பை உயர்த்தி, ரூ.50 லட்சமாக வழங்கப்படும். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு தோராயமாக ரூ.20 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.

பொதுத்துறை நிறுவனங்களான பவர்கிரிட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் சமூக பங்களிப்புடன் காஞ்சீபுரம் மாவட்டம் பெரும்பாக்கம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் செம்போடை ஆகிய 2 இடங்களில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் ரூ.26 கோடி செலவில் துவக்கப்படும்.

தமிழ்நாடு மின்னாளுமை முகமையால் சுமார் ரூ.40.80 கோடி செலவில் நம்பிக்கை இணைய கட்டமைப்பு ஒன்று அமைக்கப்படும். இத்தொழில்நுட்பத்தில் சேகரிக்கப்படும் தகவல்கள் மற்றும் தரவுகளை மாற்ற இயலாத காரணத்தால், அரசின் தரவுகள் அனைத்தும் பாதுகாப்பாக வைத்திட இயலும்.

விண்ணப்பிக்காமல் பிறப்பு, இறப்பு சான்றிதழ்

அரசுத் துறையில் பல்வேறு சேவைகளைப் பெற பொதுமக்கள் அத்துறை சார்ந்த அலுவலகங்களுக்குச் சென்று விண்ணப்பித்து பெறுவது மட்டுமல்லாமல், அரசு இ-சேவை மையங்கள் இணையதளம் மற்றும் கைபேசி செயலி வாயிலாகவும் விண்ணப்பித்து பெற்று வருகின்றனர். தமிழ்நாடு மின்னாளுமை முகமையால் “மக்கள் எண்” உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, ஒவ்வொரு நபருக்கும் பிறப்பு முதல் இறப்பு வரையிலான சட்டப்படியான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள் குடிமக்கள் பெட்டகத்தில் இருந்து விண்ணப்பிக்காமலேயே குறிப்பறிந்து, தானாகவே வழங்கப்படும். இதனைப் பெற்றிட, தனிநபர் தன்னுடைய கைபேசி எண்ணை பயனர் குறியீடாகவும், ஒரு முறை கடவுச் சொல்லைப் பயன்படுத்தியும் பெற்றுக்கொள்ளலாம்.

“மக்களைத் தேடி அரசு” என்ற இந்தத் திட்டம் ரூ.90 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.