மாநில செய்திகள்

தி.மு.க. மீது மீண்டும், மீண்டும் பழிபோடுவதை நிறுத்தவேண்டும் - மு.க.ஸ்டாலின் + "||" + Stop blaming - MK Stalin

தி.மு.க. மீது மீண்டும், மீண்டும் பழிபோடுவதை நிறுத்தவேண்டும் - மு.க.ஸ்டாலின்

தி.மு.க. மீது மீண்டும், மீண்டும் பழிபோடுவதை நிறுத்தவேண்டும் - மு.க.ஸ்டாலின்
நீட் தேர்வு மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் பெறமுடியாமல் கோட்டை விட்ட வரலாற்று பிழை யை மறைக்க தி.மு.க. மீது மீண்டும், மீண்டும் பழி போடுவதை நிறுத்தவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ்- தி.மு.க.தான். எதிர்ப்பு எழுந்ததால் பழியை எங்கள் மீது போடுகிறார்கள் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பச்சை பொய்யை கொஞ்சமும் கூசாமல் திரும்ப திரும்ப சொல்லி வருவதற்கு தி.மு.க.வின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான நீட் தேர்வை முதன் முதலில் எதிர்த்தது முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதிதான். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தாலும் உடனடியாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி குலாம் நபி ஆசாத்துக்கு கடிதம் எழுதி எதிர்ப்பு தெரிவித்ததோடு, சென்னை ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்து நீட் தேர்வுக்கு தடையும் பெற்றார்.

ஆகவே தி.மு.க. ஆட்சி இருந்தவரை நீட் தேர்வு தமிழகத்திற்குள் நுழையவில்லை. அது மட்டுமல்ல, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்த போதே நீட் தேர்வை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டே தீர்ப்பளித்து விட்டது. ஆனால் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியும், மத்தியில் பா.ஜ.க. ஆட்சியும் இருந்தபோதுதான் நீட் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் முழு விசாரணை நடைபெறும் முன்பே தீர்ப்பு திரும்பப்பெறப்பட்டு, நீட் தேர்வு தமிழக மாணவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. இப்போது நீட் தேர்வை தடுத்து நிறுத்த முடியாமல் மத்திய பா.ஜ.க. அரசுக்கு அடி பணிந்து அ.தி.மு.க. ஆட்சி தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

தி.மு.க. ஆட்சியில்...

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நுழைவுத்தேர்வு வேண்டாம் என்று கொள்கை முடிவு எடுத்தது எங்கள் அம்மாதான் (ஜெயலலிதா) என்கிறார். ஆனால் பிரியதர்சினி என்ற மாணவி போட்ட வழக்கில் அந்த கொள்கை முடிவு எடுத்த 9.6.2005 தேதியிட்ட அரசு ஆணை, ஜெயலலிதா ஆட்சியிலேயே சென்னை ஐகோர்ட்டால் ரத்து செய்யப்பட்டதை மறைத்துவிட்டார். ஆனால் கருணாநிதி தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும் 2006-ல் முதல்-அமைச்சரானவுடன் தனது அரசின் கவர்னர் உரையிலும், பிறகு தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் அறிக்கையிலும் நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்படும் என்று அறிவித்து, அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் டாக்டர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்தார்.

அந்த கமிட்டி அளித்த அறிக்கையை ஏற்று, 6.12.2006 அன்று ஒரு மசோதாவை தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றி நுழைவுத்தேர்வை சட்டம் மூலம் ரத்து செய்தார். கல்வி ‘கான்கரன்ட்’ பட்டியலில் இருப்பதால், இந்த மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி 3.3.2007 அன்று ஜனாதிபதியின் ஒப்புதலையும் பெற்றது தி.மு.க. ஆட்சிதான். இதை எதிர்த்து தொடரப்பட்ட அஸ்வின் குமார் வழக்கில் அந்த சட்டம் செல்லும் என்று தீர்ப்பு வெளிவந்ததும் தி.மு.க. ஆட்சியில்தான். பிறகு அதன் மீது செய்யப்பட்ட மேல்முறையீட்டை சுப்ரீம் கோர்ட்டே நிராகரித்து தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்ததும் தி.மு.க. ஆட்சி இருந்தபோதுதான்.

பழி போடுவதை நிறுத்தவேண்டும்

நீட் தேர்வு தமிழகத்துக்குள் நுழைய விடாமல் தடுத்ததும் தி.மு.க. ஆட்சிதான். நுழைவுத்தேர்வை சட்டப்பூர்வமாக ரத்து செய்து, பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற காரணமாக இருந்ததும் தி.மு.க. ஆட்சிதான் என்பதை முதல்- அமைச்சருக்கும், வாய்க்கு வந்தபடி பொய் சொல்லி அரசியல் வாழ்க்கை நடத்தும் அமைச்சர்களுக்கும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இனிமேலாவது வடிகட்டிய பொய்யை தயக்கமில்லாமல் வழங்கி, தங்கள் மீதுள்ள கரையை அ.தி.மு.க. அரசு நீட் தேர்வு மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல் பெற முடியாமல் கோட்டை விட்ட வரலாற்று பிழையை மறைக்க, தி.மு.க. மீது மீண்டும், மீண்டும் பழி போடுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நியூட்ரினோ ஆய்வு மையம்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேனி மாவட்டத்தில் ‘நியூட்ரினோ’ ஆய்வு மையம் அமைக்க அனுமதி வழங்கி உள்ளதாக மத்திய அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் அறிவித்திருப்பது, தமிழக மக்களுக்கும் குறிப்பாக தேனி பகுதி மக்களுக்கும் அதிர்ச்சி அளிக்கிறது. தேனி மாவட்ட மக்களின் எதிர்ப்பை மீறி, உயர்நீதிமன்றத்திலும், பசுமைத் தீர்ப்பாயத்திலும் இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மத்திய அரசு தன்னிச்சையாக இது போன்ற முடிவினை எடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதால் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுவதுடன், மிக மோசமான கதிரியக்க ஆபத்துகளையும் விளைவிக்கும் என்று தேனி மாவட்ட மக்கள் நீண்ட காலமாக போராடி வருகிறார்கள்.

எச்சரிக்கை

இது போன்ற சூழ்நிலையில், தமிழக மக்களின் பாதுகாப்பு பற்றி சிறிதும் அக்கறையின்றி மத்திய பா.ஜ.க. அரசு, இந்த திட்டத்தை ‘சிறப்புத் திட்டமாகவும்’ ‘பி’ திட்டமாகவும் அறிவித்து இந்தத் திட்டத்திற்கு பச்சைக் கொடி காட்டியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. முல்லைப்பெரியாறு, மேற்கு மலைத் தொடர்ச்சி ஆகியவற்றிற்கு அருகில் நியூட்ரினோ திட்டத்தை அனுமதித்து, சுற்றுப்புறச்சூழல், வன விலங்குகள் மற்றும் வனப் பகுதிகளுக்கும் தேனி வாழ் மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. தற்போதுள்ள அ.தி.மு.க. அரசு, இத்திட்டத்திற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதியையும், நகர்ப்புறத்துறை நியூட்ரினோ கட்டுமானத்திற்கான அனுமதியையும் வழங்கியுள்ளதா? என்ற கேள்வியும் எழுகிறது.

ஆகவே தேனி மாவட்டம் தேவாரம் அருகில் உள்ள பொட்டி புரத்தில் ‘நியூட்ரினோ ஆய்வகம்’ அமைக்கும் பணியை, தமிழக மக்களின் பாதுகாப்பு கருதி மத்திய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும். முதல்- அமைச்சர் பழனிசாமியும், தேனித் தொகுதியில் இருந்து துணை முதல்-அமைச்சராகியுள்ள ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் இந்தத் திட்டத்திற்கு எதிராக உரிய அழுத்தம் கொடுத்து, மத்திய அரசை இத்திட்டத்தை கைவிட வைக்க வேண்டும். இல்லாவிட்டால் தேனி மாவட்ட மக்களுடைய கொதிப்பையும், எதிர்க்குரலையும் சந்திக்க வேண்டிய நெருக்கடி அ.தி.மு.க. அரசுக்கு ஏற்படும் என்பதை இப்போதே எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐஐடி மாணவி பாத்திமா மரணம் : வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தொடர்பாக வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
2. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2081 கோடி வாடகை பாக்கியை குறைக்க 'பேரம்' நடப்பதாக செய்தி -மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 2,081 கோடி ரூபாய் வாடகை பாக்கியை குறைக்க பேரம் நடப்பதாக செய்தி வெளியாகி உள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3. கருணாநிதி நினைவிடத்தில் திருமணம் நடத்தி வைத்தது ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம்
தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் திருமணம் நடத்தி வைத்தது குறித்து மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
4. பணமதிப்பிழப்பு நடவடிக்கை: வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கி பொருளாதாரத் துயரத்தை விரைவுபடுத்தியது -மு.க.ஸ்டாலின்
பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கி பொருளாதாரத் துயரத்தை விரைவுபடுத்தியது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
5. நீட் தேர்வு: நீதிமன்றம் காட்டும் வழியில் மத்திய, மாநில அரசுகள் செல்ல வேண்டும் - மு.க.ஸ்டாலின்
நீட் தேர்வு விஷயத்தில் நீதிமன்றம் காட்டும் வழியில் மத்திய, மாநில அரசுகள் செல்ல வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.