மாநில செய்திகள்

மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு + "||" + Opposition to the neutrino program

மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு

மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு
மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நியூட்ரினோ ஆய்வு திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தேனி, 

தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிப்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட டி.புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள அம்பரப்பர் மலையில் ரூ.1,500 கோடி செலவில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்பட உள்ளது. இந்திய அணுசக்தி ஆணையமும், இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையும் இணைந்து இந்த ஆய்வை மேற்கொள்ள உள்ளது.

நியூட்ரினோ ஆய்வில் வெற்றி பெற்றால் பிரபஞ்சம் எப்படி உருவானது? என்பதை கண்டறிய வாய்ப்பு இருப்பதாகவும், எக்ஸ்ரேயை விட ஆயிரம் மடங்கு பயனை பெற முடியும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பூமி அதிர்ச்சி, எரிமலை உருவாதல், சுனாமி போன்ற நிகழ்வுகளை முன்கூட்டியே அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதற்கு இந்த ஆராய்ச்சி பலன் அளிக்கும் என்பதும் விஞ்ஞானிகளின் கருத்து.

எதிர்ப்பு

அதே நேரத்தில் இந்த திட்டத்துக்கு விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பாறைகளை வெடிவைத்து தகர்க்கும் போது சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்றும், விளை நிலங்கள் பாதிக்கப்படும் என்றெல்லாம் கூறி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பசுமைத் தீர்ப்பாயம் இந்த திட்டத்துக்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை வழங்கிய அனுமதியை ரத்து செய்து 2 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த ஆய்வு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு மீண்டும் உறுதி அளித்துள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் இதுதொடர்பான கேள்விக்கு மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ‘நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆய்வகத்தால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எந்த கதிர்வீச்சு அபாயமும் ஏற்படாது’ என்று கூறியுள்ளார்.

போராட்டம்

இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வரும் நிலையில், இதை செயல்படுத்த மத்திய அரசு உறுதியாக உள்ளது. இது விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட போவதாக தேனி மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.