உலக செய்திகள்

உபயோகிப்பாளர்களின் தகவல்கள் திருட்டு விவகாரம் ‘பேஸ்புக்’ நிறுவனத்துக்கு ரூ.35 ஆயிரம் கோடி அபராதம்? + "||" + Facebook will reportedly be fined a record $5 billion over privacy mishaps

உபயோகிப்பாளர்களின் தகவல்கள் திருட்டு விவகாரம் ‘பேஸ்புக்’ நிறுவனத்துக்கு ரூ.35 ஆயிரம் கோடி அபராதம்?

உபயோகிப்பாளர்களின் தகவல்கள் திருட்டு விவகாரம் ‘பேஸ்புக்’ நிறுவனத்துக்கு ரூ.35 ஆயிரம் கோடி அபராதம்?
உபயோகிப்பாளர்களின் தகவல்கள் திருட்டு தொடர்பாக ‘பேஸ்புக்’ நிறுவனத்துக்கு ரூ.35 ஆயிரம் கோடி அபராதம் விதிக்க முடிவாகி உள்ளது.
வாஷிங்டன்,

சமூக ஊடகங்களில் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்துக்கு தனி இடம் இருக்கிறது. இந்தியா உள்பட உலக நாடுகளில் இளைய தலைமுறையினர் தொடங்கி மூத்த குடிமக்கள் வரை அனைவராலும் விரும்பப்படுகிற சமூக வலைத்தளமாக ‘பேஸ்புக்’ உள்ளது.

இந்த சமூக வலைத்தளத்தின் உபயோகிப்பாளர்கள் 8 கோடியே 70 லட்சம் பேரின் தகவல்கள், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனத்தால் திருடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு அம்பலத்துக்கு வந்து உலகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அமெரிக்காவில் நடந்த ஜனாதிபதி தேர்தலிலும், இங்கிலாந்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக இந்த தகவல் திருட்டு நடைபெற்றதாக தெரிய வந்தது.

நெருக்கடி

இது ‘பேஸ்புக்’ வலைத்தள நிறுவனத்துக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதில், அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணை நடத்தியது. அப்போது ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கேட்டார்.

மேலும், இனி தவறுகள் நேராதபடிக்கு பாதுகாப்பு அம்சங்கள் பலப்படுத்தப்படும் என அப்போது அவர் குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில் ‘பேஸ்புக்’ நிறுவனத்துக்கு கடந்த அக்டோபர் மாதம் இங்கிலாந்து தரவு பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு 5 லட்சம் பவுண்ட் (சுமார் ரூ.4 கோடியே 35 லட்சம்) அபராதம் விதித்தது.

அமெரிக்கா விசாரணை

இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து அமெரிக்காவில் எப்.டிசி. என்று அழைக்கப்படுகிற மத்திய வர்த்தக ஆணையம் கடந்த மார்ச் மாதம் முதல் விசாரணை நடத்தி வந்தது.

இந்த விசாரணையில், ‘பேஸ்புக்’ வலைத்தளத்தின் உபயோகிப்பாளர்கள் 8 கோடியே 70 லட்சம் பேரின் தகவல்கள், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தால் முறையற்ற விதத்தில் திருடப்பட்டு இருப்பது உறுதியானது.

ரூ.35 ஆயிரம் கோடி அபராதம்

இதையடுத்து ‘பேஸ்புக்’ நிறுவனத்துக்கு 5 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.35 ஆயிரம் கோடி) அபராதம் விதிக்க முடிவானது. மத்திய வர்த்தக ஆணையத்தில் இந்த முடிவுக்கு ஆதரவாக 3 பேரும், எதிராக 2 பேரும் வாக்களித்தனர். பெரும்பான்மை முடிவு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு அமெரிக்க நீதித்துறை ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால் அதற்கு இன்னும் எவ்வளவு காலம் ஆகும் என தெரியவில்லை. அப்படி நீதித்துறையும் ஒப்புதல் அளித்து விட்டால் ‘பேஸ்புக்’ நிறுவனம் ரூ.35 ஆயிரம் கோடி அபராதம் செலுத்தியாக வேண்டும்.

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், அமெரிக்காவில் ஒரு தகவல் தொழில் நுட்ப நிறுவனத்துக்கு மத்திய வர்த்தக ஆணையம் விதிக்கும் அதிகபட்ச அபராதம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ‘பேஸ்புக்’ நிறுவனம், இந்த விவகாரத்தில் தனக்கு மத்திய வர்த்தக ஆணையம் 5 பில்லியன் டாலர் வரையில் அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறி இருந்தது நினைவுகூரத்தக்கது.

ஆசிரியரின் தேர்வுகள்...