மாநில செய்திகள்

ஐகோர்ட்டு தீர்ப்புகளை மக்கள் புரிந்துகொள்வதற்கு வசதியாக தமிழில் மொழி பெயர்த்து வழங்க வேண்டும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தல் + "||" + President Ramnath Govind urges to translate Tamil

ஐகோர்ட்டு தீர்ப்புகளை மக்கள் புரிந்துகொள்வதற்கு வசதியாக தமிழில் மொழி பெயர்த்து வழங்க வேண்டும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தல்

ஐகோர்ட்டு தீர்ப்புகளை மக்கள் புரிந்துகொள்வதற்கு வசதியாக தமிழில் மொழி பெயர்த்து வழங்க வேண்டும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தல்
ஐகோர்ட்டு தீர்ப்புகளை மக்கள் புரிந்துகொள்வதற்கு வசதியாக தமிழில் மொழிபெயர்த்து வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தினார்.
சென்னை, 

சென்னை, தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.

டாக்டர் பட்டம்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில கவர்னருமான பி.சதாசிவம், சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானி ஆகியோருக்கு டாக்டர் பட்டம் வழங்கினார்.

விழாவில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள், மூத்த வக்கீல்கள், அரசு வக்கீல்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி பாராட்டு

விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:-

சட்டம் மற்றும் நீதித்துறையில் சிறப்பாக சேவை புரிந்ததற் காக 3 நீதிபதிகளுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு பல்கலைக்கழகம் 3 நீதிபதிகளுக்கு ஒரே நேரத்தில் டாக்டர் பட்டம் வழங்குவது இதுவே முதல் முறை ஆகும்.

இந்த 3 நீதிபதிகளும் சிறப்பாக பணியாற்றி இருக்கின்றனர். இவர்களை வாழ்த்து கிறேன். சட்டத்துறையில் இவர்களது பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் டாக்டர் பட்டம் வழங்கிய சட்டப் பல் கலைக்கழகத்தின் முடிவையும் பாராட்டுகிறேன்.

சட்டத்துறையில் அறிவாற்றலை மேம்படுத்தவும், சட்டக்கல்வி மற்றும் சமூக நீதியை முன்னெடுத்துச் செல்லவும் தமிழ்நாடு அரசு, இந்த சட்டப்பல்கலைக்கழகத்தை 1997-ம் ஆண்டு உருவாக்கியுள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தை முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் தொடங்கி வைத்துள்ளார்.

நற்பெயர்

20 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்தப் பல்கலைக் கழகம், சட்டக்கல்வி மற்றும் சட்ட ஆராய்ச்சிக்கு புதுப்பொலிவை சேர்த்துள்ளது. நமது அரசியல் சட்டத்தின் தலைமை சிற்பி டாக்டர் அம்பேத்கரின் பெயரைக் கொண்டுள்ள இந்த பல்கலைக்கழகம் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில் நற்பெயரை பெற்றுள்ளது. இதன் மூலம் பல்கலைக்கழகம் எதற்காக நிறுவப்பட்டதோ, அந்த நோக்கங்கள் நிறைவேறியுள்ளன.

நான் ஒரு சட்ட மாணவன் மற்றும் வழக்கறிஞர் என்கிற முறையில், நாட்டின் வளர்ச்சியில் சட்டக்கல்வியின் முக்கியத்துவத்தையும், முக்கியமாக சட்டப்பல்கலைக்கழகங்களின் பங்களிப்புகளையும் வலியுறுத்த விரும்புகிறேன்.

சாமானிய மக்கள்

சட்டத்தின் உள்கட்டமைப்பு, நீதிக்கான அணுகுமுறை ஆகியவற்றை சாமானிய மக்களும் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு நாம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம் என்ற கேள்வி எழுகிறது. சட்ட அறிவை மேம் படுத்துவது, சட்டவிதிகளை எளிமை ஆக்குவது தற்போதைய தேவையாக உள்ளது.

நீதியை மக்களிடம் கொண்டு செல்வது மட்டுமல்ல, வழக்கில் தொடர்புடையவர்கள் புரிந்து கொள்ளக் கூடிய மொழியிலும் அது இருக்க வேண்டும்.

தீர்ப்புகளின் சான்றிதழ் பெற்ற நகல்களை உள்ளூர் அல்லது பிராந்திய மொழிகளில் ஐகோர்ட்டுகள் வெளியிடுவதற்கு முறையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று நான் 2017-ம் ஆண்டு கொச்சியில் நடைபெற்ற கேரள ஐகோர்ட்டின் வைர விழா நிறைவு நிகழ்ச்சியின்போது வலியுறுத்தினேன்.

தமிழில் தீர்ப்பு

அதன்பின்னர், சத்தீஷ்கார் ஐகோர்ட்டின் அப்போதைய தலைமை நீதிபதியும், தற்போது கொல்கத்தா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாகவும் உள்ள டி.பி.ராதா கிருஷ்ணனிடம், இந்த கருத்தை வலியுறுத்தினேன். அவர் சில நாட்களிலேயே இந்த திட்டத்தை அமல்படுத்தினார். அதன்படி, தற்போது சத்தீஷ்கார் ஐகோர்ட்டு வழங்கும் ஆங்கில தீர்ப்புகளை, இந்தி மொழியில் மொழிபெயர்ப்பு செய்து தொடர்புடையவர்களுக்கு வழங்கி வருகின்றனர். இந்த ஆலோசனையை வேறு சில ஐகோர்ட்டுகளும் செயல்படுத்துகின்றன.

அதுபோல, சான்றளிக்கப்பட்ட தீர்ப்பின் நகல்கள் கேரள ஐகோர்ட்டில் மலையாளத்திலும். சென்னை ஐகோர்ட்டில் தமிழிலும் மொழி பெயர்த்து வழங்கலாம். மக்களுக்கு நீதி விரைவாகவும், மலிவாகவும் கிடைக்கச் செய்வதில் வக்கீல் களுக்குத்தான் முக்கிய பொறுப்பு உள்ளது. வக்கீல்கள் நீதிமன்றத்தின் சட்ட அதிகாரிகள் ஆவார்கள்.

தாமதப்படுத்த வாய்தா...

நமது சட்ட முறை அதிக செலவினம் கொண்டது; தாமதப்படுகிறது என்றெல்லாம் சொல்லப்படுகிறது.

‘வாய்தா’ என்னும் கருவி, அவசர கால நடவடிக்கைக்காக பயன்படுத்த வேண்டும். ஆனால், இது வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதற்கு தவறாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் வழக் கில் தொடர்புடையவர்கள் நீதி பெறுவதற்கு அதிகம் செலவிட வேண்டியது உள்ளது. செல்வந்தர் ஒருவரும், ஏழை ஒருவரும் ஒரே மாதிரியாக சட்டத்தை அணுக முடியவில்லை என்றால், அது நமது குடியரசு முறையை கேலிக்கூத்தாக்கிவிடும். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அனைவரும் சமம்

முன்னதாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

நீதிக்கு முன் அனைவரும் சமம் என்ற கொள்கையை உறுதியாக கடைபிடிக்கும் மாநிலம் தமிழ்நாடுதான். நீதி கேட்ட பசுவுக்காக, அதன் கன்றை கொன்ற தனது மகனை தேர்க்காலில் இட்டு கொன்ற மனுநீதிச்சோழன்; நீதி தவறியதற்காக தனது உயிரை விட்ட பாண்டிய மன்னன்; புறாவுக்காக தனது தொடையில் இருந்து சதையை அறுத்துக்கொடுத்த சிபிச்சக்கர வர்த்தி போன்ற நீதிக்கு தலைவணங்கிய எண்ணற்ற மன்னர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்துள்ளனர்.

தெற்கு ஆசிய நாடுகளில், சட்டக்கல்விக்கு என்று தனியாக ஒரு பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில்தான் முதல் முதலாக தொடங்கப்பட்டது. ஆசியாவிலேயே மிகக்குறைவான கல்விக்கட்டணத்தில் தரமான சட்டக்கல்வியை வழங்குவதும் தமிழகத்தில்தான். தமிழகத்தில் டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகத்தின் கீழ் 13 சட்டக்கல்லூரிகள் உள்ளன. அதில் 11 சட்டக்கல்லூரிகள் அரசு சட்டக்கல்லூரிகளாகும். கடந்த ஆண்டு 3 புதிய அரசு சட்டக் கல்லூரிகள் தொடங்கினோம். இந்த ஆண்டிலும் மேலும் 3 புதிய அரசு சட்டக்கல்லூரிகள் தொடங்கப்படும். சட்டத்தின் பயன்கள் அனைத்தும் ஏழை மக்களை சென்றடைய வேண்டும் என்று ஜெயலலதா கூறினார். இந்த இலக்கை அடைய நீதிமன்றங்களும், நீதிபதிகளும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பையும் வழங்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பி.சதாசிவம் பேச்சு

டாக்டர் பட்டம் பெற்ற சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதியும், கேரளா மாநில கவர்னருமான பி.சதாசிவம் நன்றி தெரிவித்து பேசினார். அப்போது அவர், “நான் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன். 1970-ம் ஆண்டு சட்டக்கல்லூரியில் அடியெடுத்து வைத்த நாள் முதல், ஒவ்வொரு நொடியையும் படிப்புக்காக செலவழித்து, சட்ட ஞானத்தை வளர்த்தேன். இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்புத்தகம் தான் எனக்கு புனித நூல்” என்று குறிப்பிட்டார்.

மேலும், “அரசியலில் இருந்து தள்ளி இருப்பது, நேரம் தவறாமை, கடுமையான உழைப்பு, கோர்ட்டு பணியில் முழுமையாக ஈடுபடுதல் என்ற கொள்கை முடிவுடன் 1973-ம் ஆண்டு என் வக்கீல் தொழிலை தொடங்கினேன். என்னுடைய மூத்த வக்கீல், கோர்ட்டு பணிதான் முக்கியம். சாப்பாடு உள்ளிட்டவை எல்லாம் அதன்பின்னர்தான் என்று அறிவுரை வழங்கினார். அவரது அறிவுரையை வக்கீலாக மட்டுமல்ல, ஐகோர்ட்டு நீதிபதியாகவும், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாகவும் இருந்தபோது தீவிரமாக பின்பற்றினேன். எனக்கு டாக்டர் பட்டம் வழங்கியதற்கு நன்றி” என்று கூறினார்.

நீதிபதி பாப்டே, தஹில்ரமானி

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எஸ்.ஏ. பாப்டே பேசும்போது, “ஒரு மனிதனுக்கு விருது கிடைக்கிறது என்றால், அது அவருக்கு கிடைப்பதாக அர்த்தம் இல்லை. அவரை உருவாக்கிய பெற்றோர், ஆசிரியர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோருக்கு கிடைப்பதாகத்தான் அர்த்தம். எனக்கு வழங்கப்பட்ட இந்த டாக்டர் பட்டத்தை பெற்றோர், ஆசிரியர், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் உரித்தாக்குகிறேன்”என்றார்.

இதே போன்று, தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானியும், அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசினார்.