மாநில செய்திகள்

“எந்த மொழியையும் திணிக்கவும் கூடாது, எதிர்க்கவும் கூடாது” துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு + "||" + No language should be imposed or opposed

“எந்த மொழியையும் திணிக்கவும் கூடாது, எதிர்க்கவும் கூடாது” துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு

“எந்த மொழியையும் திணிக்கவும் கூடாது, எதிர்க்கவும் கூடாது” துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு
எந்த மொழியையும் திணிக்கவும் கூடாது, எதிர்க்கவும் கூடாது என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.
சென்னை, 

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று மாலை திருச்சி ஸ்ரீரங்கநாத சுவாமி திருக்கோவிலில் மேற்கொள்ளப்பட்ட புராதான புனரமைப்பை நினைவுகூறும் விதமாக ‘ஸ்ரீரங்கநாத சுவாமி திருக்கோவில், ஸ்ரீரங்கம்: எதிர்கால தலைமுறையினருக்காக அதன் பழமை பாரம்பரியத்தை பாதுகாத்தல்’ என்ற தலைப்பில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தலைமை தாங்கினார். இதில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், க.பாண்டியராஜன், சேவூர் ராமச்சந்திரன், நாங்குநேரி ஸ்ரீமத் வனமாமலை ஜீயர், ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள், டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் தலைவரும், ரங்கநாத சுவாமி திருக்கோவில் அறங்காவலர் குழுவின் தலைவருமான வேணு ஸ்ரீனிவாசன், ஆடிட்டர் குருமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் நூலை வெளியிட்டு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:-

பாதுகாக்க வேண்டும்

நம்முடைய பழமைவாய்ந்த கலைகளை பாதுகாத்து நமது அடுத்த தலைமுறைக்கு கொண்டுசேர்ப்பது நமது தேசிய கடமை ஆகும். இந்தியாவின் சிற்ப கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த ஸ்ரீரங்கம் கோவில், பொலிவிழந்து பராமரிப்பின்றி இருந்தநிலையில் தமிழக இந்து சமய அறநிலைய துறை நியமித்த இந்திய கலாசாரம், பாரம்பரிய அறக்கட்டளை மற்றும் வேணுகோபாலசாமி கைங்கரியம் அறக்கட்டளையும் இணைந்து கோவிலை புனரமைத்து இருக்கிறார்கள்.

புராதான சின்னங்களையும், கலைகளையும் பாதுகாக்க சமீப காலங்களாக அரசும், தனியாரும் இணைந்து முயற்சித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசும், மக்களும் மற்றும் தொண்டு நிறுவனங்களும் இணைந்து கலாசாரம் மற்றும் பாரம்பரியமிக்க கலையினை பாதுகாக்க வேண்டும்.

நிறைவேற்ற முடியவில்லை

ஜெயலலிதாவுக்கும், எனக்குமான நட்பு மிகவும் ஆழமானது. அவர் நான் மத்திய மந்திரியாக இருந்தபோது ஒரு கோரிக்கை விடுத்தார். ஸ்ரீரங்கத்தை பாரம்பரியமிக்க நகரமாக அறிவிக்க கேட்டார். ஆனால் நான் ஏற்கனவே தமிழ்நாட்டில் இருந்து காஞ்சீபுரத்தையும், நாகப்பட்டினத்தையும் தேர்வு செய்து அனுப்பிவிட்டேன். அதனால் அவருடைய கோரிக்கையை என்னால் நிறைவேற்ற முடியவில்லை.

அதன் பிறகு நான் துணை ஜனாதிபதி ஆகிவிட்டேன். அவரும் இப்போது உயிருடன் இல்லை. அவர் வைத்த கோரிக்கை இன்றளவும் நிறைவேற்றப்படவில்லை.

பொறுப்பு அதிகம்

இந்துக்கள் என்றால் தற்போது முகம்சுழிப்பு ஏற்படுகிறது. 80 சதவீதம் இந்துக்கள் இங்கு இருக்கும்போது முகம்சுழிப்பு என்பது தேவையற்ற ஒன்று. நம்முடைய கலாசாரம் அனைத்தையும் பாதுகாக்க நாம் மறந்துவிடுகிறோம். அவை அனைத்தையும் நாம் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு கொண்டுசேர்க்க வேண்டும்.

இந்தியா ஒரு வளமான நாடு. இந்திய நாடு பலரால் தாக்கப்பட்டது. ஆனால் பதிலுக்கு நாம் தாக்கியது கிடையாது. நம்முடைய பகிர்தலும், பராமரித்தலும் நம்முடைய சித்தாந்தமாக இருந்திருக்கிறது. நம்மை ஆண்டவர்கள், நம் மீது படை எடுத்தவர்கள் இந்தியாவை கொள்ளை அடித்து சென்றார்கள்.

கோவில் நிலங்களை யாரும் ஆக்கிரமிக்க கூடாது. இது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும். நம்முடைய ஆராதனை முறைகள் வெவ்வேறு மொழியாக இருக்கலாம். ஆனால் அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல வேண்டும்.

திணிக்கக்கூடாது

நமது மொழி, கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும். நாம் எந்த மொழியையும் திணிக்கவும் கூடாது. எதிர்க்கவும் கூடாது. நம்முடைய தாய்மொழியை மறந்துவிடவும் கூடாது. ஜனாதிபதியோ, பிரதமரோ, நானோ கான்வெண்ட் பள்ளிக்கு சென்றவர்கள் இல்லை. சாதாரண பள்ளியில் தான் படித்தோம்.

நம்முடைய மக்கள் எல்லாவற்றையும் அரசே செய்யும் என்று எதிர்பார்க்கிறார்கள். இதில் இருந்து மக்கள் வெளியே வரவேண்டும். சென்னையில் வெள்ளம் வந்தபோது மக்கள் தவித்தார்கள். ஆனால் இப்போது தண்ணீருக்காக தவிக்கிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.