மாநில செய்திகள்

தமிழை ஒழிக்க நினைக்கும் மத்திய அரசின் முயற்சி பலிக்காது நூல் வெளியீட்டு விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு + "||" + The Central Government's attempt to eradicate Tamil will not work

தமிழை ஒழிக்க நினைக்கும் மத்திய அரசின் முயற்சி பலிக்காது நூல் வெளியீட்டு விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழை ஒழிக்க நினைக்கும் மத்திய அரசின் முயற்சி பலிக்காது நூல் வெளியீட்டு விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழை ஒழித்துக்கட்ட நினைக்கும் மத்திய அரசின் முயற்சி பலிக்காது என்று சென்னையில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை, 

வெற்றி தமிழர் பேரவை சார்பில் கவிஞர் வைரமுத்து எழுதிய ‘தமிழாற்றுப்படை’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணாசாலை காமராஜர் அரங்கத்தில் நடந்தது.

விழாவுக்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நூலை வெளியிட்டார். முதல் பிரதியை முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பெற்றுக்கொண்டார்.

ஒலி நூலை (சி.டி. பதிவு) ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி விமலா முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.

விழாவில் மு.க.ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:-

சிகரத்தை தொட்டவர்

கவிஞர் வைரமுத்து எழுதிய நூல் வெளியீட்டு விழாக்கள் அனைத்திலும் கருணாநிதி கலந்து கொண்டார். இந்த விழாவில், அவர் நம்மோடு இல்லை. இருந்தபோதிலும் தமிழாற்றுப்படை புத்தகத்தில் 24 தமிழ் ஆளுமைகள் பற்றிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அதில், கருணாநிதியின் தமிழ் ஆளுமையும் இடம் பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் வைரமுத்து தனது புத்தகத்தில் கருணாநிதியை நினைவு கூர்ந்துள்ளார். அதாவது, ‘நீங்கள் (கருணாநிதி) இல்லாமல் வெளியிடப்படும் இந்த நூலில் நீங்கள் (கருணாநிதி) இருக்கிறீர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

வைரமுத்து எழுதிய நூலில் மட்டுமல்ல. அவரது எழுத்து, எண்ணம், கருத்து போன்ற அனைத்திலும் கருணாநிதி இருக்கிறார். கருணாநிதி தான் எனது ஆசான் என்று வைரமுத்து எப்போதும் சொல்வார். எழுத்தாற்றலால் சிகரத்தை தொட்டவர். தமிழ் தான் வைரமுத்துவின் முதல் காதலி. எழுத்தாற்றல் மூலம் தமிழை கடைக்கோடி தமிழனுக்கும் கொண்டு செல்கிறார்.

பலிக்காது

தமிழாற்றுப்படை புத்தகத்தில் ஆத்திகம், நாத்திகம் பேதமின்றி தமிழ் மொழிக்காக பணியாற்றியவர்களை விருப்பு, வெறுப்பின்றி மிக தெளிவாக எடுத்து சொல்லி இருக்கிறார். கருணாநிதியின் முயற்சியால் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்ததை பதிவு செய்து இருக்கிறார்.

தமிழகத்தில் வடமொழி ஆதிக்கத்தை புகுத்த திட்டமிட்ட சதி நடக்கிறது. தமிழகத்தில் மும்மொழி திட்டத்தை திணிக்கும் நிலை வந்துள்ளது. இதனால் போராடக்கூடிய நிலைக்கு வந்துள்ளோம். அதற்கான ஆயுதமாக இதுபோன்ற புத்தகங்கள் இருக்கும். தமிழை ஒழித்துக்கட்ட நினைக்கும் மத்திய அரசின் முயற்சி பலிக்காது.

இவ்வாறு அவர் பேசினார்.

அதன்பின்னர் ப.சிதம்பரம், வைகோ மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதி விமலா ஆகியோர் பேசினர்.

முடிவில், வைரமுத்து ஏற்புரை வழங்கி பேசியதாவது:-

இன்றைய அறிவியல், சட்டம் போன்றவைகளை எல்லாம் பண்டைய கால தமிழ் ஆளுமைகள் ஏற்கனவே சொல்லியுள்ளனர் என்பதுதான் தமிழுக்கு உள்ள பெருமை. தமிழ் மொழி ஒருபோதும் அழியாது. அது அழிந்துவிட நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

மொழியின் பெருமிதம்

சிங்கப்பூர் நாட்டின் மக்கள்தொகை 60 லட்சம். அங்கு ஆட்சிமொழிகளாக 4 மொழிகள் உள்ளன. சுவிட்சர்லாந்து நாட்டின் மக்கள்தொகை 80 லட்சம். அங்கு 4 மொழிகள் ஆட்சிமொழிகளாக உள்ளன. தென்ஆப்பிரிக்கா நாட்டின் மக்கள்தொகை 5 கோடி. அங்கு 13 மொழிகள் ஆட்சிமொழிகளாக உள்ளன.

இந்தியாவில் 130 கோடிக்கு மேல் மக்கள்தொகை உள்ளது. ஆனால் இந்தி மொழி மட்டுமே ஆட்சி மொழியாக உள்ளது. இந்தியாவில் தமிழ் மொழி 8-வது பட்டியலில் உள்ளது. தமிழ் மொழி உள்ளிட்ட 22 மொழிகளையும் இந்தியாவில் ஆட்சிமொழியாக்கினால் என்ன?

ஒருமைப்பாட்டின் மீது ஆட்சியாளர்கள் நம்பிக்கை வைத்திருந்தால் 22 மொழிகளையும் ஆட்சிமொழியாக்கிவிடலாமே, ஏன் தயங்க வேண்டும்? மொழியின் பெருமிதத்தை நாம் உணர வேண்டும். அதை உணராமல் இருப்பதுதான் அந்த மொழி அழிவுக்கு காரணமாகி விடுகிறது என்பதை எல்லோரும் உணர வேண்டும்.

எல்லாமே கருணாநிதி

எனக்கு எல்லாமே கருணாநிதி தான். இதனால்தான் சூரியன் உதிக்கும் முன்பே இந்த புத்தகத்தை கருணாநிதி சமாதியில் வைத்து அவரை வணங்கிவிட்டு வந்தேன்.

அவர் இடத்தில், அவரது தனயன் மு.க.ஸ்டாலின் இருந்து இந்த புத்தகத்தை வெளியிட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மு.க.ஸ்டாலின் வளர்ச்சிக்கு தடை வந்துவிடுமோ? என்பதற்காக வைகோ வெளியேற்றப்பட்டார் என்ற வசை இருந்தது. தற்போது அது அழிக்கப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலினால் தான் வைகோவிற்கு தற்போது எம்.பி. பதவி கிடைத்துள்ளது. நீங்கள் இருவரும் காலம் முழுவதும் ஒன்றாக இருந்து இந்த தமிழ் சமுதாயத்திற்கு பணியாற்ற வேண்டும் என்பது எனது ஆவல் மட்டுமல்ல, 8 கோடி தமிழர்களின் விருப்பம்.

இவ்வாறு அவர் பேசினார்.