மாநில செய்திகள்

தபால்துறை போட்டித்தேர்வுகளில் தமிழுக்கு இடமில்லையா? அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் + "||" + Does Tamils have no place in postal competitions?

தபால்துறை போட்டித்தேர்வுகளில் தமிழுக்கு இடமில்லையா? அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

தபால்துறை போட்டித்தேர்வுகளில் தமிழுக்கு இடமில்லையா? அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
தபால்துறை தேர்வுகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்படாது என்ற அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை, 

தபால்துறை சார்ந்த போட்டித்தேர்வுகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் இனி நடத்தப்படாது என்றும், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தான் நடத்தப்படும் என்றும் மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இது அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

மு.க.ஸ்டாலின்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தபால்துறை போட்டித்தேர்வுகள் இனி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்படமாட்டாது என்று தலைமை அஞ்சலகங்களுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கைக்கு, தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். திடீரென்று இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே இனிமேல் தேர்வு என்று கூறி மத்திய அரசுப் பணிகளில் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் உள்ளவர்கள் யாரும் நுழைந்துவிடக்கூடாது என்று சதி எண்ணத்துடன் திட்டமிட்டு மத்திய பா.ஜ.க. அரசின் தபால்துறை மாநில மொழிகளை அலட்சியம் செய்யும் வகையில் செயல்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது.

அகில இந்திய அளவில் குறிப்பாக மத்திய அரசுத் துறைகளில் தமிழக இளைஞர்களுக்கு மொழி உரிமையின் அடிப்படையில் கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்பையும் தட்டிப்பறிப்பது ஓரவஞ்சகத்தின் ஒட்டுமொத்த வெளிப்பாடாக அமைந்துள்ளது. இந்த தேர்வு முறை தமிழக இளைஞர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மற்ற மாநிலங்களும் இந்திய அரசின் பணியிடங்களில் அமரவும் அரசியல் சட்டம் தந்துள்ள இடஒதுக்கீட்டுப் பயனை அடையவும் தகுதியானவர்கள் என்ற உரிமையை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு மறந்துவிடக்கூடாது என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

இந்த சுற்றறிக்கையை தபால் துறை உடனடியாக திரும்பப்பெற்று, அரசமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் மொழிகளின் சமத்துவத்தைப் போற்றும் வகையில் நடந்துகொள்ள வேண்டும். அதே நேரத்தில் தி.மு.க. வக்கீல்களுடன் ஆலோசித்து இதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய சட்டபூர்வமான நடவடிக்கை குறித்தும் ஆலோசித்து வருகிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

டாக்டர் ராமதாஸ், கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக மக்கள் மீது இந்தி மொழியை திணிக்கிற உரிமை மத்திய அரசுக்கு இல்லை. இதை மீறி திணிக்க முயன்றால் கடும் விளைவுகளை நரேந்திர மோடி அரசு சந்திக்க வேண்டி வரும். எனவே, மாநில மொழிகளில் அஞ்சல்துறை கேள்வித்தாள்கள் வழங்கப்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியிருப்பதாவது:-

தேர்வுகளை தமிழில் எழுத முடியாது என தபால்துறை அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. தேர்வு நடைபெறவுள்ள நிலையில் திடீரென வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு தமிழக மாணவர்களுக்கு எதிரானது, கடுமையாக கண்டிக்கத்தக்கது. அறிவிப்பை ரத்துசெய்ய வேண்டும். தேசிய அளவிலான பல்வேறு போட்டித்தேர்வுகள் தமிழில் நடத்தப்படும் நிலையில், தபால்துறை தேர்வுகளில் மட்டும் அந்த தேர்வுகளை கடைசி நேரத்தில் ரத்து செய்தது தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும். இந்த முடிவை எதிர்த்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் மூலம் வழக்கு தொடரப்படும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

வைகோ, திருமாவளவன்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவை இந்தி நாடாக்க மூர்க்கத்தனமான நடவடிக்கைகளில் பா.ஜ.க. அரசு தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. மத்திய அரசுத் துறைகளில் தமிழர்களின் வேலைவாய்ப்புகள் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு வாரிவழங்கும் பா.ஜ.க. அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்துக்கு உரியதும், நியாயப்படுத்தவே முடியாத அக்கிரமச் செயலும் ஆகும். தபால் பணியாளர்கள் தேர்வுகளில் தமிழ் உள்ளிட்ட 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் வினாத்தாள் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்” என்று கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “2 நாட்களுக்கு முன்னர் தான் நாடாளுமன்றத்தில் ரெயில்வே துறை வேலைகளில் வெளிமாநிலத்தவர் தமிழ்நாட்டில் திணிக்கப்படுவதைத் தடுக்கவேண்டும் என வி.சி.க. சார்பில் வலியுறுத்தினோம். இப்போது தபால் துறையில் இந்த அநீதி இழைக்கப்படுகிறது. தமிழிலும் எழுத அனுமதிக்க வேண்டும். இல்லாவிடில் தமிழகம் மிகப்பெரிய போராட்டக்களமாக மாறும்” என்று கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சீமான் கண்டனம்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அஞ்சலர் உள்பட 4 வகை பணியிடங்களுக்கான தபால்துறை தேர்வுகள், நாடு முழுவதும் நாளை (இன்று) நடைபெறுகிறது. இந்தி, ஆங்கிலம் எனும் 2 மொழிகளில் மட்டுமே தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ் மொழியில் தேர்வு எழுதுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இது இந்தியை தாய்மொழியாக கொண்டவர்களை தமிழகத்தில் பணியமர்த்துவதற்கான சதித்திட்டம் என்பது தெள்ளத்தெளிவாக ஆகியிருக்கிறது. எனவே தமிழில் இத்தேர்வை எழுத மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழக அரசு இந்த விவகாரத்தில் உரிய அழுத்தம் தரவேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில தலைவர் ரெஜீஸ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் மொழி மறுக்கப்பட்டு தபால்துறை தேர்வு நடக்கும் பட்சத்தில் இளைஞர்களை ஒன்றுதிரட்டி போராட்டத்தை நடத்துவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.