மாநில செய்திகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள ரூ.30 கோடி சிலையை மீட்பதில் முட்டுக்கட்டை பொன் மாணிக்கவேல் குற்றச்சாட்டு + "||" + Rs 30 crore statue to be restored

ஆஸ்திரேலியாவில் உள்ள ரூ.30 கோடி சிலையை மீட்பதில் முட்டுக்கட்டை பொன் மாணிக்கவேல் குற்றச்சாட்டு

ஆஸ்திரேலியாவில் உள்ள ரூ.30 கோடி சிலையை மீட்பதில் முட்டுக்கட்டை பொன் மாணிக்கவேல் குற்றச்சாட்டு
ஆஸ்திரேலியாவில் விற்கப்பட்ட ரூ.30 கோடி மதிப்புள்ள சிலையை தமிழகத்துக்கு கொண்டு வர முட்டுகட்டை ஏற்பட்டுள்ளது என்று சிலை கடத்தல் தடுப்புபிரிவு அதிகாரி பொன் மாணிக்கவேல் கூறினார்.
பழனி, 

பழனி முருகன் கோவில் ஐம்பொன் சிலை மோசடி குறித்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு விசாரணை கடந்த ஆண்டு நடந்த போது, சிலையை செய்த ஸ்தபதி முத்தையா, அப்போதைய பழனி கோவில் இணை ஆணையரான கே.கே.ராஜா, உதவி ஆணையர் புகழேந்தி, அறநிலையத்துறை தலைமையிட நகை சரிபார்ப்பு அலுவலர் தேவேந்திரன் ஆகியோர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

2-வது நாளாக ஆலோசனை

இந்த நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் பழனி பாலாறு-பொருந்தலாறு இல்லத்தில் போலீஸ் அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.

நேற்று 2-வது நாளாக அவர் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.

முன்னாள் டி.ஜி.பி.யின் அலட்சியம்

அப்போது பொன் மாணிக்கவேல் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்டது 2 ஆயிரம் சிலைகள் மட்டுமல்ல. 20 ஆயிரம் சிலைகள் கூட வெளிநாடுகளில் இருக்கலாம். இதில் கலைநயமிக்க நடராஜர் சிலை கடந்த 2001-ல் ரூ.30 கோடிக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டு நகரில் இருக்கும் அருங்காட்சியகத்துக்கு விற்கப்பட்டது. இதனை திருப்பி தருவதாக அருங்காட்சியக நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் 12 வாரத்துக்குள் அதனை கொண்டு வருவதாக 1 ஆண்டுக்கு முன்பு தெரிவித்திருந்தேன். அதனை என்னால் காப்பாற்ற முடியவில்லை.

இதற்கு காரணம் முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன். அதாவது ஆஸ்திரேலியாவில் இருந்து சிலையை மீட்டு வருவது தொடர்பாக கடிதம் எழுதினேன். அதில் அடிலெய்டில் இருப்பது நமது சிலை தான், அவர்கள் கொடுக்க தயாராக இருப்பதாகவும், திருப்பி கொண்டுவர நிதி உதவி தருமாறும் தெரிவித்திருந்தேன். ஆனால், 9 மாதங்களுக்கு பிறகு உங்களுக்கு எப்படி தெரியும்?, உங்களிடம் யார் தெரிவித்தது? என்று பதில் கடிதம் எழுதினார். இதுதொடர்பாக கேள்வி கேட்கும் அதிகாரம் இல்லையென்றும், நீதிமன்ற மேற்பார்வையில் தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்து பதில் எழுதினேன். மேலும் ரூ.30 கோடி மதிப்பிலான நடராஜர் சிலையை தமிழகத்திற்கு கொண்டுவர உங்களுக்கு விருப்பமில்லை என்றும் தெரிவித்தேன். அந்த சிலையை மீட்க முட்டுக்கட்டை போடப்பட்டது.

இடையூறுகள்

என்னால் சுதந்திரமாக வேலை பார்க்க முடியவில்லை. தனி மனிதனாக போராடிக் கொண்டிருக்கிறேன். பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. என்னால் விசாரணை நடத்த முடியவில்லை. சாட்சிகள் கடுமையாக மிரட்டப்படுகிறார்கள்.

குற்றவாளிகளை பிடிப்பதற்கு சொந்த பணத்தை செலவு செய்ய வேண்டி உள்ளது. உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பாக முறையிடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.