மாநில செய்திகள்

வேலூரில் ரூ.2.38 கோடி பறிமுதல் சத்யபிரத சாகு பேட்டி + "||" + In Vellore Crores of seized Interview with Sathya Pratha Sahoo

வேலூரில் ரூ.2.38 கோடி பறிமுதல் சத்யபிரத சாகு பேட்டி

வேலூரில் ரூ.2.38 கோடி பறிமுதல் சத்யபிரத  சாகு பேட்டி
வேலூரில் முறையான ஆவணங்கள் இன்றி எடுத்துச்சென்றதாக ரூ.2 கோடியே 38 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்
சென்னை,

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலுக்கான பணிகளை தமிழக தேர்தல் அதிகாரிகள் சிறப்பாக செய்து வருகிறார்கள். அங்கு மொத்தம் உள்ள 1,553 வாக்குப்பதிவு மையங்களில் 179 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாக்குப்பதிவு வமையங்களில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் சிறப்பு கவனம் செலுத்தப்படும். மேலும் 850 வாக்குப்பதிவு மையங்களில் முழுவதும் வெப்கேமரா பொருத்தப்பட்டு, சென்னையில் இருந்தே கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற வாக்குப்பதிவு மையங்களில் வீடியோ கேமரா மூலம் வாக்குப்பதிவு கண் காணிக்கப்படும்.


வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு 10 கம்பெனி துணை ராணுவ வீரர்களை அனுப்ப இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் கூடுதலாக 10 கம்பெனி துணை ராணுவ வீரர்களை அனுப்பவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். கூடுதல் துணை ராணுவ வீரர்களை அனுப்பவில்லை என்றால், மாநில போலீசாரை கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

வேலூரில் 75 பறக்கும் படை, 39 கண்காணிப்பு குழு, 12 வீடியோ கண்காணிப்பு குழுவினர் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன்மூலம் வாகனங்களில் ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக ரொக்க பணம் முறையான ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்பவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்று ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்றதாக ரூ.2 கோடியே 38 லட்சம் பணமும், ரூ.89.41 லட்சம் மதிப்புள்ள 2.980 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு நடைபெறும். வேலூர் தொகுதியில் வாக்காளர்கள் பெயர் சேர்க்கை முடிந்துவிட்டது. இதையடுத்து இறுதி வாக்காளர் பட்டியல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும். ‘பூத் சிலிப்’ தேர்தல் நடைபெறுவதற்கு 7 நாட்களுக்கு முன்பு வழங்கப்படும். ‘பூத் சிலிப்’ வழங்கினாலும், வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள 11 ஆவணங்களை காட்டி வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். வாக்குப்பதிவு ஆகஸ்டு 5-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் நடைபெறும்.

வேலூர் நாடாளுமன்ற தேர்தலையொட்டி கூடுதல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக ராஜாராமன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் தற்போது காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடும். இவ்வாறு அவர் கூறினார்.