சீனாவை ‘லெகிமா’ புயல் தாக்கியது: 22 பேர் பலி; 10 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்


சீனாவை ‘லெகிமா’ புயல் தாக்கியது: 22 பேர் பலி; 10 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்
x
தினத்தந்தி 10 Aug 2019 11:30 PM GMT (Updated: 10 Aug 2019 9:12 PM GMT)

சீனாவை ‘லெகிமா’ புயல் தாக்கியது. 22 பேர் பலியாகினர். 10 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

பீஜிங்,

சீனாவை ‘லெகிமா’ என்ற புயல் மையம் கொண்டிருந்தது. இந்த ஆண்டில் அங்கு மையம் கொண்ட 9-வது புயல் இது.

இந்தப் புயல் காரணமாக நேற்று முன்தினம் தொடங்கி ஷாங்காய் நகரம் உள்ளிட்ட பல நகரங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வந்தது.

‘சூப்பர் புயல்’ என்று அழைக்கப்பட்டு வந்த இந்த புயல், நேற்று அதிகாலையில் தைவான் மற்றும் சீனாவின் நிதித்தலைநகரம் என்ற சிறப்புக்குரிய ஷாங்காய் நகரங்களுக்கு இடையே அமைந்துள்ள வென்லிங் என்ற இடத்தில் கரையை கடந்தது. அப்போது அங்கு மணிக்கு 187 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இடைவிடாத மழையும் பெய்தது. தேசிய வானிலை ஆராய்ச்சி மையம் அபாய எச்சரிக்கை விடுத்தது.

பலத்த காற்றில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் சரிந்தன. மின்வினியோகம் துண்டிக்கப்பட்டது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

அதற்கு மத்தியில் இரு சக்கர வாகனங்களை வாகனவோட்டிகள் தள்ளிக்கொண்டு சென்றனர். இதனால் வாகனவோட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாயினர்.

ஷாங்காய் டிஸ்னிலேண்ட் பூங்கா, ஷாங்காய் டிஸ்னி விடுதி ஆகியவை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டன. வானிலை பாதிப்பால் ஷாங்காய் டிஸ்னிலேண்ட் பூங்கா மூடப்பட்டது இதுவே முதல் முறை ஆகும். இங்கு செல்வதற்கு டிக்கெட் வாங்கியவர்கள் அடுத்த மாதத்திற்குள் ஏதாவது ஒரு நாள், அந்த டிக்கெட்டை பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் புயல், மழை காரணமாக தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். ஷாங்காய் நகரில் இருந்து மட்டுமே 2 லட்சத்து 53 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

புயல், வெள்ளத்தில் சிக்கி 22 பேர் பலியாகி உள்ளனர். 10 பேரை காணவில்லை. அவர்களின் கதி என்ன ஆனது என தெரியவில்லை.

‘லெகிமா’ புயல் காரணமாக ஜெஜியாங் மாகாணத்தில் 288 விமான சேவைகள் ரத்தாகின. படகு, சாலை போக்குவரத்துகளும் முடங்கின. 27 லட்சம் வீடுகள் மின்வினியோகமின்றி இருளில் தவித்தன. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. வென்ஜாவ் நகரில் நிலச்சரிவால் ஒரு அணை உடைந்தது. புயல், வெள்ளம் பாதித்த பகுதிகளில் முழுவீச்சில் மீட்புப்பணிகள் நடந்து வருகின்றன.

யாங்ஜியா நகரம் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. அதைச்சுற்றிலும் சுமார் 120 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. அன்குய், புஜியான், ஜியாங்சு நகரங்கள் புயலால் நிலை குலைந்து போய் உள்ளன.


Next Story