மாவட்ட செய்திகள்

43-வது நாள் அத்திவரதர் தரிசனம்: வி.ஐ.பி. தரிசன வரிசையில் பக்தர்கள் ‘திடீர்’ மோதல் + "||" + The vision of the Athivaradar VIP In the visionary line Conflict of devotees

43-வது நாள் அத்திவரதர் தரிசனம்: வி.ஐ.பி. தரிசன வரிசையில் பக்தர்கள் ‘திடீர்’ மோதல்

43-வது நாள் அத்திவரதர் தரிசனம்: வி.ஐ.பி. தரிசன வரிசையில் பக்தர்கள் ‘திடீர்’ மோதல்
காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதரை தரிசிக்க 43-வது நாளான நேற்றும் கூட்டம் அலைமோதியது. அப்போது வி.ஐ.பி. தரிசன வரிசையில் பக்தர்களுக்குள் இடையே திடீர் மோதல் வெடித்தது.
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 43-வது நாளான நேற்று பக்தர்களுக்கு அத்திவரதர் மஞ்சள் மற்றும் பச்சை நிற பட்டாடையில் உடுத்தி காட்சியளித்தார்.

அதிகாலை 5 மணி அளவில் நடை திறந்ததும் அத்திவரதருக்கு சுப்ரபாதம் பாடப்பட்டது. பிறகு பட்டாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் ஓதப்பட்டு கற்பூர தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது அங்கு திரண்டு இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா’ ‘கோவிந்தா’ என்று பக்தி கரகோஷம் எழுப்பினார்கள்.


நேற்று மட்டும் 4 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அத்திவரதரை தரிசித்தனர். வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளை தனி வழியாக கோவில் ஊழியர்கள் அழைத்து சென்று அத்திவரதரை தரிசனம் செய்ய வைத்தனர்.

இந்தநிலையில், வி.ஐ.பி. தரிசன வரிசையிலும் கூட்டம் அலைமோதியது. அங்கும் பலமணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். அப்போது, பக்தர்களுக்கு இடையே கடும் நெரிசல் ஏற்பட்டு திடீர் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது பக்தர்களுக்கு இடையே மோதலாக வெடித்தது. அதில் பக்தர்கள் திடீரென ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது சிலருக்கு மண்டை உடைந்ததாக தெரிகிறது. காயமடைந்தவர்கள் காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உடனே பாதுகாப்புக்கு நின்று இருந்த போலீசார் அவர்களை ஒழுங்குபடுத்தி தரிசனத்துக்கு அனுப்பி வைத்தனர்.

அத்திவரதரை வழிபட டோனர் பாஸ் மற்றும் வி.வி.ஐ.பி. பாஸ் ஆகியவைகளை மாவட்ட நிர்வாகம் வினியோகித்து வருகிறது. இதில் நேற்று போலி டோனர் பாஸ் வைத்திருந்ததாக சுமார் 170 பேர் போலீசார் சோதனையின்போது சிக்கினார்கள். இந்தப் பாஸ்கள் அதிக விலை கொடுத்து வாங்கி இருப்பதாக விசாரணையில் தெரியவந்தது.

வருகின்ற 16-ந் தேதி வரை மட்டும் அத்திவரதர் தரிசிக்க முடியும் என்பதால், நாட்கள் நெருங்க நெருங்க லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சீபுரத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். வருகின்ற 17-ந் தேதி அன்று வேத மந்திரங்கள் முழங்க அத்திவரதரை கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் உள்ளே மீண்டும் வைக்கப்படுகிறார்.

இந்நிலையில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் நேற்று காலை காஞ்சீபுரம் வந்தார். வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்ற அவர் அத்திவரதரை தரிசித்தார் அவருடன் அவரது மகளும் முன்னாள் எம்.பி.யுமான கவிதா மற்றும் ஆந்திர மாநிலம் நகரி எம்.எல்.ஏ. நடிகைரோஜாவும் வந்திருந்தனர்.

மேலும் காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வந்து அத்திவரதரை தமிழக அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், வெல்லமண்டி நடராஜன், தமிழக இந்து சமய அறநிலையத்துறை முதன்மை செயலாளர் பணீந்திர ரெட்டி ஆகியோர் குடும்பத்துடன் வந்து தரிசித்தனர்.

பக்தர்கள் சிரமமின்றி தங்கி தரிசிக்க வசதியாக 3 இடங்கள்

வந்தவாசி மற்றும் உத்திரமேரூர் சாலை வழியாக வரும் பக்தர்களுக்கு கீழ்கதிர்பூர் கிராமம் பி.ஏ.வி. பள்ளிக்கு அருகில் பந்தலும், சென்னை அரக்கோணம், ஆந்திரா, பெங்களூரூ மற்றும் வேலூர் மார்க்கமாக வரும் பக்தர்களுக்கு கீழ்கதிர்பூர் பெட்ரோல் பங்க் அருகில் ஒரு பந்தலும், தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு மார்க்கமாக வரும் பக்தர்களுக்கு நத்தப்பேட்டை பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி வளாகத்தில் ஒரு பந்தலும் பக்தர்கள் தங்கி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை