தேசிய செய்திகள்

இந்திய உணவு கழகத்தில் 2 லட்சம் கிலோ அரிசி ஸ்கூட்டர்களில் திருடிச் செல்லப்பட்டதா? + "||" + 2 lakh kg of rice stolen in scooters at Indian Food Corporation?

இந்திய உணவு கழகத்தில் 2 லட்சம் கிலோ அரிசி ஸ்கூட்டர்களில் திருடிச் செல்லப்பட்டதா?

இந்திய உணவு கழகத்தில் 2 லட்சம் கிலோ அரிசி ஸ்கூட்டர்களில் திருடிச் செல்லப்பட்டதா?
இந்திய உணவு கழகத்தில் இருந்து 2½ லட்சம் கிலோ அரிசி ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள்கள் மூலம் திருடப்பட்டதாக கூறப்படும் ஒரு வினோத வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. இதில் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
புதுடெல்லி,

அசாம் மாநிலம் சால்சாப்ரா சரக்கு ரெயில் முனையத்தில் இருந்து மணிப்பூர் மாநிலம் கொய்ரெஞ்ஜி என்ற இடத்தில் உள்ள மத்திய அரசின் இந்திய உணவு கழக கிடங்குக்கு 9 லட்சத்து 19,100 கிலோ அரிசியை கொண்டுசெல்ல வேண்டும். இதற்காக ஜெனித் என்டர்பிரைசஸ் என்ற தனியார் போக்குவரத்து நிறுவனம் 2016-ம் ஆண்டு மார்ச் 7-ந் தேதியில் இருந்து 22-ந் தேதிக்குள் 57 லாரிகளில் அந்த அரிசியை கொண்டுசெல்வது என ஒப்பந்தமானது.


சுமார் 9 மணி நேரத்தில் செல்லக்கூடிய 275.5 கிலோ மீட்டர் தூரம் உள்ள அந்த இடத்திற்கு 2 மாதங்களுக்கு பின்னரே அந்த அரிசி சென்றடைந்தது. அங்கு இந்திய உணவு கழக அதிகாரிகள் சரிபார்த்தபோது 16 லாரிகளில் கொண்டுசெல்லப்பட்ட 2.60 லட்சம் கிலோ அரிசி மாயமானது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அரிசியின் மதிப்பு ரூ.84.98 லட்சம் ஆகும்.

இதுபற்றி இந்திய உணவு கழக அதிகாரிகள் சி.பி.ஐ.க்கு புகார் செய்தனர். சி.பி.ஐ. விசாரணை நடத்தியபோது பல வினோத தகவல்கள் கிடைத்தது.

2.60 லட்சம் கிலோ அரிசி கொய்ரெஞ்ஜி உணவு கழக கிடங்குக்கு சென்றடையவில்லை. ஆனால் அந்த அரிசி வந்துசேர்ந்ததாக ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது. லாரி போக்குவரத்து நிறுவனத்திடம் தாமதம் பற்றி விசாரித்தபோது, பயணத்தில் சில லாரிகள் பழுதானதாகவும் மாற்று லாரிகள் வரவழைக்கப்பட்டு அந்த அரிசி கொண்டுசெல்லப்பட்டது என தெரிவித்தது.

மாற்று லாரிகளின் பதிவு எண்களை அதிகாரிகள் சோதித்தபோது அவைகள் லாரிகளே அல்ல என தெரிந்தது. அந்த பதிவு எண்கள் ஸ்கூட்டர்கள், மோட்டார் சைக்கிள்கள், தண்ணீர் லாரிகள், பஸ், மாருதி வேன் மற்றும் கார்கள் போன்ற வாகனங்கள் என்று வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவாகியுள்ளது.

உதாரணத்துக்கு மாயமான 10 ஆயிரம் கிலோ அரிசியை ஏற்றிச்சென்றது ஒரு ஸ்கூட்டர், 16,300 கிலோ அரிசியை ஏற்றிச்சென்றது ஒரு மோட்டார் சைக்கிள் என்பதுபோல உள்ளது. அந்த 16 போலியான லாரி பதிவு எண்கள் வழியில் உள்ள 2 போலீஸ் சோதனை சாவடிகளிலும் பதிவாகவில்லை.

அசாம் சால்சாப்ராவில் உள்ள இந்திய உணவு கழக அதிகாரிகள் இந்த 16 லாரிகளில் அரிசியை ஏற்றாமலேயே, ஏற்றி அனுப்பியதாக அனுமதி வழங்கி உள்ளனர். லாரி போக்குவரத்து நிறுவன பிரதிநிதியும் அந்த அனுமதியில் பொய்யாக கையெழுத்து போட்டுள்ளார். அந்த நிறுவனம் லாரிகள் வழியில் பழுதானதால் மாற்று லாரிகள் மூலம் அரிசி கொண்டுசென்றதாக பொய் வாக்குமூலம் கொடுத்ததும் தெரிந்தது.

2.60 லட்சம் கிலோ அரிசியை ஏற்றி அனுப்பாமலேயே, அனுப்பிவிட்டதுபோல மோசடி செய்து திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. லாரி நிறுவனம் 16 லாரிகளுக்கு போலி ‘பில்’கள் போட்டுள்ளது. மணிப்பூர் கொய்ரெஞ்ஜி உணவு கழக கிடங்கு அதிகாரிகளும் அந்த 16 லாரிகளும் வந்துவிட்டதாக போலியாக பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை முடிவில் சி.பி.ஐ., 2.60 லட்சம் கிலோ அரிசியை திருடியதாக இந்திய உணவு கழக அதிகாரிகள் ஆஷிஷ்குமார் பால், ரஜ்னிஷ்குமார் குப்தா, போலி கையெழுத்து போட்ட லாரி நிறுவன பிரதிநிதி ஜான்சன், பொய் வாக்குமூலம் கொடுத்த லாரி நிறுவன உரிமையாளர் சோய்பம் சுர்ஜித்சிங் ஆகியோரை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளது.