தேசிய செய்திகள்

பாதிக்கப்பட்ட மக்களை பார்த்ததும் எனது இதயம் நொறுங்கிவிட்டது - ராகுல் காந்தி உருக்கம் + "||" + My heart is shattered saw victims - Rahul Gandhi

பாதிக்கப்பட்ட மக்களை பார்த்ததும் எனது இதயம் நொறுங்கிவிட்டது - ராகுல் காந்தி உருக்கம்

பாதிக்கப்பட்ட மக்களை பார்த்ததும் எனது இதயம் நொறுங்கிவிட்டது - ராகுல் காந்தி உருக்கம்
வயநாடு தொகுதியில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை பார்த்ததும் எனது இதயம் நொறுங்கிவிட்டது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
வயநாடு,

கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். கேரள மாநிலம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் ராகுல் காந்தி தனது தொகுதிக்கு 2-வது முறையாக வந்துள்ளார்.


வயநாடு தொகுதியில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், நிவாரண முகாம்களில் இருந்த பாதிக்கப்பட்ட மக்களையும் நேற்று முன்தினம் அவர் பார்வையிட்டார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “வயநாடு தொகுதியில் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பார்த்ததும் எனது இதயம் நொறுங்கிவிட்டது” என்று தெரிவித்திருந்தார்.

2-வது நாளாக நேற்று மேப்பாடியில் உள்ள புதுமல என்ற இடத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவை ராகுல் காந்தி பார்வையிட்டார். மேப்பாடி மற்றும் கோழிக்கோடு மாவட்டம் கைதாபொயில் ஆகிய இடங்களில் உள்ள நிவாரண முகாம்களுக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி ஆறுதல் கூறினார்.

உங்கள் எதிர்காலம் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். உங்கள் இயல்பு வாழ்க்கை திரும்ப நாங்கள் உதவி செய்வோம் என்று அவர் கூறினார்.

ராகுல் காந்தி மாநில அரசு அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார். அதிகாரிகளிடம், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், மறுகட்டமைப்புக்கு உதவும்படியும், உடனடி தேவையான மருந்து, சீரமைப்புக்கான கருவிகள் போன்றவற்றை வழங்கவும் கேட்டுக்கொண்டார்.

மக்களுக்கு பக்ரீத் வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்தி, பக்ரீத் பண்டிகையின் உண்மையான தத்துவத்தை பாதிக்கப்பட்டுள்ள சகோதர, சகோதரிகளுக்கு உதவிகள் செய்வதற்கு பயன்படுத்துவோம் என்று கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி, முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோருடன் தொலைபேசியில் பேசிய ராகுல் காந்தி பாதிக்கப்பட்ட இந்த பகுதிக்கு உடனடியாக உதவிகள் செய்யும்படி வலியுறுத்தினார்.

புதுமல நிலச்சரிவு பற்றி ராகுல் காந்தி ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில், “புதுமல பகுதியில் ஏற்பட்ட பயங்கரமாக நிலச்சரிவில் ஒட்டுமொத்த கிராமமே அழிந்துள்ளது. இன்னும் ஏராளமான மக்கள் மண்ணில் புதைந்து இருப்பார்கள் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது” என்று கூறியுள்ளார்.

ராகுல் காந்தி தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது நாடாளுமன்ற தொகுதியான வயநாடு வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு குடிநீர் பாட்டில்கள், பாய், போர்வை, உள்ளாடைகள், வேட்டி, சேலை, நைட்டி, குழந்தைகள் ஆடைகள், செருப்பு, நாப்கின்கள், சோப்பு, பற்பசை, டூத் பிரஷ், டெட்டால், சோப்பு பவுடர், பிளச்சிங் பவுடர், குளோரின் போன்ற பொருட்கள் உடனடியாக தேவைப்படுகிறது.

இதுதவிர பிஸ்கட் பாக்கெட்டுகள், ரொட்டி, சர்க்கரை, பருப்பு வகைகள், தேங்காய் எண்ணெய், தேங்காய், காய்கறிகள், மசாலா பவுடர், குழந்தைகள் உணவு போன்ற பொருட்களை பொதுமக்கள் வழங்க முன்வர வேண்டும்.

இந்த பொருட்களை மலப்புறம் மாவட்டத்தில் உள்ள நிவாரண பொருட்கள் சேகரிப்பு மையங்களுக்கு பொதுமக்கள் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.